Popular Posts

Tuesday, January 13, 2015

SREE MAHA PERIYAVALIN ARULVAKKU - PART IV

ஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வாக்கு பாகம் 4
(continuation of part 3)



29 03 2014    31ஆறு குழந்தைகளையும் ஒரு சேர அணைத்து உச்சிமோந்த உமாதேவியாரால் ஆறு உடம்பும் ஒன்றானது. 'ஸ்கந்தன்' என்று பெயர் சூட்டினார்கள். 'ஸ்கந்த' என்றால் வெளிப்படுவது என்று அர்த்தம். பசுபதி என்ற மேகத்திலிருந்து வெளிப்பட்ட மின்னலானதால் சுப்ரமண்யன் ஸ்கந்தனானார். 'சோமாஸ்கந்தர்' என்று கோவிலில் பார்த்திருப்பீர்கள். ஈஸ்வரனுக்கும், அம்பாளுக்கும் நடுவே சுப்ரமண்யர் குழந்தையாக வீற்றிருப்பார். ஸஹ உமாஸ்கந்தர் தான் சோமாஸ்கந்தரானார். ஏன்னா தகப்பனுக்கே உபதேசம் செய்த சுவாமிநாதன் அவன். அதை ஈஸ்வரனும், ஆதி சங்கரராக அவதரித்து சுப்ரமண்ய அம்சமாகப் பிறந்த குமாரிலபட்டரை ஜெயிச்சு சரிகட்டிட்டார்.   
சுசீந்திரத்திலே ஸ்தாணுமாலயன்னு மும்மூர்த்திகளும் சேர்ந்த வடிவம். ஸ்தாணு என்றால்  'பட்டகட்டை' என்று அர்த்தம். உணர்ச்சியற்ற யோகத்தில் இரு மூர்த்திகளோடு இணைந்திருக்கிறார். அந்த மாதிரி யோகத்தில் பட்ட கட்டையாக இருக்கும் சிவனை அடைய, இலையையும் சாப்பிடாமல் 'அபர்ணாவாக' தவம் இருக்கிறாள் பார்வதி. இந்த இருவரின் பிள்ளை விசாகனாகிறான். வேதத்தில் உள்ள பல கிளைகளை 'வேதசாகை' என்பார்கள். 'தவா' என்றால் புருஷனை உடையவள். 'விதவா' என்றால் புருஷன் இல்லாதவள். 'சாக' என்றால் கிளைகளை உடைய என்று அர்த்தம். 'விசாக' என்றால் கிளை இல்லாதது. தந்தை ஸ்தாணு பட்ட கட்டையாகவும், தாய் அபர்ணா இலையற்ற கொடியாகவும் இருந்ததை நினைவுபடுத்திக் கொண்டு கிளையே இல்லாத கீழ்க்கன்றாக  இருக்கிறார் விசாகன். அதனால் அவருக்கு சம்சாரம் இரண்டு பேர் ஏற்பட்டும் கிளைகளான குழந்தை கிடையாது. இளம் பிராயத்திலேயே வைராக்கியம் ஏற்பட்டு ஞானப்பழமாக தண்டு ஊன்றி, முடி அகற்றி, பழனி மலை மேல் ஆண்டியாக நிற்கிறார்.   

31 03 2014   32

ஒரு மஹான். அவருக்கு ஏகப்பட்ட சிஷ்யாள். மஹானுக்கு அந்திம காலம் நெருங்கிடுத்து. அந்தரங்கமா ஒருத்தனைக் கூப்பிட்டு, "அப்பா, என்னோட அடுத்த ஜென்மா அதோ அந்த வயத்தை சாசுண்டு நிக்கறதே அந்த பன்னியோட குட்டி. ஆனா நல்ல காரியங்களும் செஞ்சதாலே வெள்ளை பன்னியாப் பொறப்பேன். மலத்தை சாப்பிடடுண்டு, சகதியிலே உழர்ற இந்த பன்னி ஜென்மாவை நான் வெறுக்கறேன். இன்னிக்கு நான் சமாதியாகப் போறேன். நாளைக்கு அந்த பன்னி குட்டி போடும். பாவம் பார்க்காம அந்த வெள்ளை பன்னியை நீ அடிச்சு கொன்னுடு. இதை நீ குருவுக்குச் செய்கிற உபகாரமா நினைச்சுக்கோ" ன்னு கேட்டுண்டார். சிஷ்யன் அப்படியே செய்யறதா வாக்குக் கொடுத்தான்.
குரு சமாதியானார். வேற வேலை பார்க்காமல் பன்னி மேலேயே கண்ணா இருந்தான் சிஷ்யன். அத்தனை குருபக்தி. மலஜலம் கழிக்கணும்னா கூட தான் சிநேகிதனை நிறுத்தி காவல் காத்தான். பன்னி குட்டி போட்டது. அதிலே ஒன்று வெள்ளை பன்னியும் இருந்தது. அடிக்கறதுக்காகக் தடியை ஓங்கினான். பூர்வ ஜென்ம புண்ணியத்தாலே பன்றி பேசித்து. "அப்பனே நான்தான் உன்னோட குரு பேசறேன். மனுஷனா இருக்கச்சே இது அசிங்கமா இருந்தது. அடிச்சு கொல்லச் சொன்னேன். இப்போ என்னமா மணக்கறது தெரியுமா? ரொம்ப சௌகரியமா இருக்கு. விட்டுடு. வாழ்ந்து கர்மாவைத் தீர்த்துடறேன்" னது. அது மாதிரி அந்தந்தப் பிறவிக்கு அதது சுகம்.
"சிந்தா நாஸ்தி கில தேஷாம் ஸ தம கருணா சம்பூர்ணானாம்
சாது ஸமாகாம சங்கீர்ணானாம் சிந்தா நாஸ்தி கில"
மன அடக்கம், இந்திரிய அடக்கம், இரக்க சுபாவம் இதைப் பரிபூரணமா பெற்றவாளுக்கும், சாதுக்களோடு சேர்ந்து நாம சங்கீர்த்தனம் செய்யறாவளுக்கும் கவலையே இல்லைங்கறது இந்த ஸ்லோகம். 'சிந்தா நாஸ்தி கில' ன்னு ஆரம்பிச்சு அதிலேயே முடியறது இந்த ஸ்லோகத்தோட விஷேஷம். கவலை வராதுங்கறத்தை ஆரம்பித்திலேயும், முடிவிலேயும் அழுத்தமா சொல்றது. ஜனனமானதிலிருந்து மரணம் வரைன்னும் எடுத்துக்கலாம். ஒரு காரியம் ஆரம்பிச்சதிலேருந்து முடியற வரைன்னும் வெச்சுக்கலாம்.
Top of Form

03 04 2014     33
திருமலை நாயக்கர் மஹாலையும் புது மண்டபதையும் கட்டிய நாயக்க மன்னருக்கு மந்திரியாக இருந்தவர் நீலகண்ட தீக்ஷிதர். அவர் பெரிய மஹா வித்வான். சிறந்த தெய்வ பக்தரும் கூட. அவர் காலத்தில் தஞ்சை ஜில்லாவில் பழமனேரி கிராமத்தில் மஹாதேவ சாஸ்திரி என்ற பெரிய வித்வான் இருந்தார். அவர் அவ்வூர் சமீபத்தில் இருந்த ஸ்ரீ ஐராவதேஸ்வரர் கோவில் தேவியான ஸ்ரீ அலங்காரீஸ்வரி அம்மனை ஆராதிப்பவர். அவர் புத்திரப் பேற்றுக்காகத் தேவியைப் பிரார்த்தித்து வந்தார். மதுரைக்கு சென்று மீனாக்க்ஷியை ஆராதிக்குமாறு உத்திரவாயிற்று. அவ்விதமே அவர் மதுரைக்கு வந்தார்.   
நீலகண்ட தீக்ஷிதரும் அவரைப் பற்றி கேள்வியுற்றிருந்தார். மந்திரி பதவியிலுள்ள தமது அந்தஸ்துக்குக் குறைவில்லாமல் அவரைப் பார்க்க வேண்டுமென்று இவர் எண்ணம். இதை அறிந்த அம்பாளே இரண்டு பேரையும் ஒருவரை ஒருவர் சந்திக்க சங்கர்பித்தாள். மதுரைக்கு வந்த மஹாதேவ சாஸ்திரிகளைப் பல்லக்கில் இருந்த தீக்ஷிதர் பார்த்தார். சாஸ்திரிகளைப் பார்த்து "தொங்கல் காதுடன் வரும் இவர் யார்? கல்தா கொடுத்துப் போகச் சொல்லுங்கள்" என்றார். ஒருவருக்கு ஒருவர் பேச்சு ஆரம்பமாயிற்று. "சூரியன் மறைந்து சந்திரன் உதிக்காமல், நட்சத்திரங்களும் தெரியாமல் இருள் சூழ்ந்த நிலையில் தான், தான் பெருமையைக் காட்டிக்கொள்ள இங்குமங்கும் மின்மினிப் பூச்சி பறக்கும்" என்ற கருத்துள்ள ஓர் அழகான ஸ்லோகம் விடையாக வந்தது. மஹாதேவரால் அதை அறிந்த தீக்ஷிதர் பல்லக்கை விட்டு இறங்கி, அவருக்கு வேண்டிய உபசாரங்கள் செய்து, "உங்களை அலங்காரி இங்கு அனுப்பினாளோ? என்று கேட்க, அவரும் ஆச்சரியம் அடைந்ததாக கதை உண்டு. இதை ஏன் சொல்கிறேன் என்றால், குருபீடமும் சரி, சிஷ்யர்களும் சரி, மேலே சொன்ன மின்மினிப் பூச்சி கதை ஆகிவிடக்கூடாது.  

06 04 2014   34
சிவ பூஜைக்கு சந்தனம் அரைத்துக் கொடுத்தாலும் சந்தன தானம் செய்தாலும் வைகாசி, ஐப்பசி, கார்த்திகை, மாசி மாதங்களிலே கங்கையிலே ஸ்நானம் பண்ணின பலன் கிடைக்கும். சிவன் கோவில் கட்ட பூ தானம் பண்ணினா ருத்ர லோகத்திலே கோடி வருஷம் வாசம் பண்ணுவா. லிங்கா பிஷேகத்திற்குத் தைல தானம் பண்ணினாவா கைலாசத்திலே கணங்களாக வாசம் பண்ணுவா. இப்படி நெய், பால் எதை அபிஷேகத்துக்குக் கொடுத்தாலும் கைலாசவாசம்னு பெரியவா எழுதி வைச்சுட்டு போயிருக்கா.
கருநெய்தல் பூவாலே சிராவண மாசத்திலே சிவபூஜை செய்கிறது விஷேஷம். பாத்ரபத  மாசத்திலே தாமரை பூவாலே அர்ச்சனை பண்ணனும். நாயுறுவி, தர்பை இதுகளாலே துலா மாசத்திலே அர்ச்சிக்கணும். வில்வம், செண்பகப்பூ, அரளி, வெள்ளெருக்கு, அருகம்புல் இதுகளால் வருஷம் பூராவும் அர்ச்சனை பண்ணலாம். வெள்ளையான பூக்கள் மேலே சிவனுக்கு பிரியம் அதிகம். கொக்கு மந்தாரை, அரளி, வெள்ளெருக்கு, ஊமத்தை இந்த நாலோட வாசனையையும் அவர் கிரகிச்சுப்பார். விஷம் சாப்பிட்ட நீலகண்டத்துக்கு ஊமத்தை, எருக்கெல்லாம் மாத்து மூலிகை. கொக்கு மந்தாரையும், வெள்ளை தாமரையும் பூ கிடைக்காட்டி மறுபடி பூஜை பண்ணலாம். ஒரு உற்பலம் ஆயிரம் அரளிப் பூக்கு சமம்.  ஒரு வெள்ளெருக்கு ஆயிரம் உத்பலதுக்கு சமம். ஒரு சரபுன்னை மலருக்கு ஆயிரம் சிந்து புஷ்பங்கள் சமம். ஒரு கண்டங்கத்திரிப்  பூவுக்கு ஆயிரம் சிந்து புஷ்பம் சமம். எல்லாத்திலேயும் உசத்தி வில்வம் தான். சிவ சன்னதியிலே விளக்கேற்றியவனுக்கு துர்கதி கிடையாது. சிவாலயத்தைச் சுத்தம் செய்தால் அடுத்த பிறவியிலே சகல கலைகளிலும் வல்லவராய், சற்குண சம்பன்னாராய் வாழ்வார்கள். பூஜா காலத்தில் பிராமணர்களுக்கு சரியான தட்சணை கொடுக்க வேண்டும்.   
"சிவே பக்தி, சிவே பக்தி, சிவே பக்திர் பவே பவே அந்யத சரணம் நாஸ்தி த்வமேம சரணம் மம" 
ஜன்ம ஜன்மத்திலும் எனக்கு சிவபெருமானிடம் பக்தி இருக்க வேணும். எனக்கு வேறே ரக்ஷிக்கிறவா இல்லை. நீயே சரணங்கறது இந்த ஸ்லோகம். இதை சதா ஸ்மரிச்சுண்டு இருந்தாலே சகல துக்கங்களும் நிவர்த்தியாகும்.   

09 04 2014   35

சோத்துக்காக சன்யாசன்னதும் ஒரு கதை ஞாபகம் வரது. சமர்த்த ராமதாசர்னு ஒருத்தர் மஹாராஷ்டிர ராஜாவோட குரு. ஆஞ்சநேயர் அம்சம். அவர் ராஜாவோட குருவாக இருப்பதால் அவரிடம் சீடனாகச் சேர்ந்தால், தினமும் வேலை செய்யாமல் அறுசுவை உணவு சாப்பிடலாம் என்று ஆசைபபட்டு குடும்ப சிரமம் தாங்காமல் ஒருத்தர் வந்தார். சீடனா எத்துண்டு உபதேசம் பண்ணனும்னார். ராமதாசரும் உபதேசம் பண்ணினார். சன்யாசி வெட்கம் பார்க்காமல் ஐந்து வீடு பிட்சை வாங்கணும்கறது நியதி. அதுப்படி இவரும் வாங்கிண்டு வந்தார். சாப்பிட உட்கார்ந்தார். சாதாரண சாப்பாடு தான் போட்டார்கள். சரி, இன்னிக்கு இப்படி. ராஜா வர்றன்னிக்குப் பிரமாதமாயிருக்கும்னு சமாதானம் பண்ணிண்டார். ஒரு பிடி பிசைந்து வாயிலே போட்டுண்டார். உப்பே இல்லே. உப்பில்லையேன்னார். சன்யாசிகள் இந்திரியங்களை அடக்கணும். அதனாலே உப்பு போடறதிலேன்னார் குருநாதர். 'அடாடா மோசம் போனோமேன்னு' புது சன்யாசிக்கு வருத்தமா இருந்தது. அடுத்த நாள் சிவாஜி ராஜா வந்தார். நிறைய தின்பண்டங்களும் கொண்டு வந்தார். சிஷ்யாளுக்கெல்லாம் கொடுக்க போறார்னு ஆசையோட இருந்தார் புது சன்யாசி. ராமதாசர் அத்தனையையும் ஏழை எளிய ஜனங்களுக்கு கொடுத்துட்டார். இவர்கிட்டே இனிமே சிஷ்யனா இருக்கிறதிலே பிரயோஜனமில்லேன்னு நெனைச்சு இன்னொரு குருவைத் தேடிப் போனார். 
அவர் இதுக்கு முன்னாலே யார் கிட்டே உபதேசம் வாங்கிண்டேன்னு கேட்டார். ராமதாசர் கிட்டேன்னு சொன்னார் சன்யாசி. அட சமர்த்தே! கோவில்லே மணி அடிச்சுண்டிருந்தவன் குப்பை வார ஆசைப்படறானேன்னு நினைச்சார். அவர் பண்ணின உபதேசம் நெஞ்சிலே இருக்கிறப்போ, நான் உபதேசம் பண்ணக் கூடாதேன்னார். நேரே ராமதாசர் கிட்டே வந்தான் சன்யாசி. "உங்களோட உபதேசம் எனக்கு வேண்டாம். திருப்பி வாங்கிண்டிடுங்கோ. நான் வேறே குரு கிட்டே உபதேசம் வாங்கிக்க போறேன்னார்". ராமதாசர் சரி 'இந்த பாறையிலே துப்பு' ன்னு ஒரு பாறையைக் காட்டினார். அவனும் காறித்துப்பினான். 'ஸ்ரீ ராம், ஜெயராம், ஜெய ஜெய ராம்' ங்கிற எழுத்துக்கள் பாறையிலே தெரிஞ்சது. எல்லாரும் ஆச்சரியபட்டா.    
சன்யாசி புது குருகிட்டே போனான். ராமதாசரோட உபதேசத்தை துப்பிட்டு வந்துட்டேன். நீங்க உபதேசம் பண்ணுங்கோன்னான். அப்பனே, உனக்கு குருவா இருக்க எனக்கு தகுதி இல்லேன்னு நிராகரிச்சுட்டார்.

11.04.2014   36
வேதத்தின் ஆறு அங்கங்களுக்கு “ஷடங்கங்கள் என்று பெயர்.இதிலிருந்தே மத சம்பந்தமான அனைத்துக் காரியங்களுக்கும் சடங்கு என்ற பெயர் ஏற்பட்டது. அதையொட்டியான ஸம்ப்ரதாயங்களும் வேதத்தின் ப்ரகாரம் ஏற்பட்டவையே. வைதீக அநுசரணையே தமிழ்நாட்டின் தொன்றுதொட்ட பழக்கம் என்பதற்கு இவையெல்லாம் உதாரணங்கள். தமிழ்மறை என்று சொல்கின்ற குறள் முழுக்க, முழுக்க வைதிகமானதே என்பது என் அபிப்ராயம். வைதிக சமயத்தில் பித்ருக்களுக்குத்தான் முதலிடம்.அப்புறம் தான் வேதயக்ஞம். பித்ருக்களுக்குரிய தர்ப்பணமும், திவசமும் செய்தபின் தான் வேதபூஜை செய்யவேண்டும். இதே வரிசையை மாற்றாமல் திருவள்ளுவ்ரும் சொல்கிறார்-
“தென்புலத்தார், தெய்வம், விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

பித்ருக்கள், தெய்வம், அதிதி, சுற்றத்தார்கள், தான் என்ற ஐந்து பேரையும் போஷிக்கவேண்டும் என்கிறார். முதலில் பித்ருக்களான் தென்புலத்தாரைச் சொல்லி அப்புறம் தெய்வத்தைச் சொல்கிறார். யமனுடைய திக்கான தெற்கில் பித்ருக்கள் இருப்பதான வைதிக நம்பிக்கையையே மூதாதையர்களை ‘தென்புலத்தார்
என்கிறார்.

13.04.2014
    37
படிச்சு முடிச்சவா குருவையும், விவாகம் பண்ணின்டவா தாயாரையும், ஆசை தீர்ந்து போச்சுன்னா பார்யாளையும், உபகாரத்தை சுவீகரிச்சுண்டவா, உபகாரம் செய்தவாளையும், நதியை கடந்து கரையேறினவா தோணியையும், நோய் சொஸ்தமானவா வைத்தியனையும் மறந்துபோயிடுவான்னு விதுரர் சொல்லியிருக்கிறார். விதுரர் சாட்சாத் தர்ம தேவதை. அவர் சொன்னது பொய் ஆயிடுமா? வாஸ்தவத்திலே நான் அப்படியில்லேன்னு தர்ம நீதி தெரிஞ்சவா நிருபிச்சுக்காட்டணும். அதுக்காக ஆத்தைக் கடக்க உதவின தோணியைத் தோளிலே மாட்டிண்டு போகணுமானு குதர்க்கமா நெனைக்க வேண்டாம். ரொம்ப பேரம் பண்ணாம அந்த தொழிலை அவா தொடர்ந்து செய்யறதுக்கு, படகைச் சீர்படுத்தறத்துக்கு தாராளமாக கூலி கொடுக்கலாமில்லையா?  
ஒரு சன்யாசி படகிலே பயணம் பண்ணினார். பெரிய நதி பொழுது போக்காயிருக்ககட்டுமேன்னு ஓடக்காரனோட பேசிண்டு வந்தார். சின்னச்சின்ன உபபமானம் சொல்லி நல்லதெல்லாம் சொன்னார். பெரிய காட்டாறு. திடீர்திடீர்னு வெள்ளம் வரும். அப்பவும் வந்துடுத்து. படகிலே சின்ன ஓட்டை. துளித்துளியாக ஜலம் உள்ளே வந்திண்டுருக்கு. ஓடக்காரன் 'உங்களுக்கு நீச்சல் தெரியுமா'ன்னு கேட்டான். 'தெரியாதேப்பா'ன்னார் சன்யாசி.  'சரி', நான் ஓட்டையை அடைசிண்டுயிருக்கேன். ஓடத்தை விடுங்கோ'ன்னு துடுப்பை அவர்கிட்டே கொடுத்து விடற வழியையும் சொல்லிக் கொடுத்தான். தன்னோட இடுப்பு வேஷ்டியை அவிழ்த்து ஓடத்திலுள்ள தண்ணீரை பிழிஞ்சு எடுத்தான். அவனோட வலது கை ஆள்காட்டி விரல் ஓடத்து ஓட்டையை அடைசிண்டிருந்தது. வழியிலே ஒரு மரம் முறிங்சு விழுந்திருந்தது. அதிலே சன்யாசியை ஏத்தி தானும் ஏறி நின்னான். வெள்ளம் வடிஞ்சதும் கரை ஏறினா. இதுலே அடைசிண்டிருந்த விரல் வீங்கி போயிடுத்து. வெளியே எடுக்கறப்போ மரசிராய் கிழுச்சு இரத்தம் கொட்டறது. இது எதையுமே அந்த ஓடக்காரன் பொருட்படுத்தல்லே. நெனைச்சிருந்தா அவன் எப்பவோ குதிச்சு நீஞ்சி உயிர் தப்பிச்சிருக்கலாம். அப்படி செய்யாமல் இருந்ததுக்கு காரணம் சாமியார் சொன்ன உபதேசங்கள் தான்! நல்லது செய்த அவரது உயிரைக் காப்பாத்தினது. நல்லது என்னிக்குமே வீணா போகாது.    
பஞ்சைவ பூஜ்யம் லோ யஸ ப்ராப்நோதி கேவலம் I
தேவான் பித்ரூன் மனுஷ்யாம் ஸ்ச பிக்ஷூ நதி தி பஞ்சமான் II 
இந்த ஸ்லோகத்தோட அர்த்தம் - லோகத்துலே தேவா, பித்ருக்கள், மனுஷ்யா, யதிகள், அதிதிகள் இவா அஞ்சு பேரையும் பூஜிக்கிறவா சிரேயஸை அடைவான்னு சொல்றது.  

16 04 2014   38               ஒரு அன்பர் வினயத்துடன் "வேல் வைச்சு அபிஷேகம் ஆராதனை எல்லாம் நடத்தினேன், வேல் விருத்தம் படிச்சேன். முருகன் அனுக்ரஹத்தாலே பேரன் பிறந்துட்டான். அந்த வேலை என்ன பண்றது. சில பேர் தாம்பூலம் தட்சணையோடு சாஸ்திரிகளுக்கு கொடுத்துடலாங்காறா. பெரியவாள் உத்தரவுக்காக காத்திண்டிருக்கேன்னார்". எனக்கு சிரிக்கிறதா, இவரோட அறியாமைக்காக நொந்துக்கறதான்னு புரியலை.  
இப்போ வாய் பேசிண்டிருந்தது. காது நான் சொல்ல போவதற்காக காத்திண்டிருக்கு. கண் தெரியல்லேனா ரொம்ப சிரமம். மூக்கு சும்மா தானே இருக்கு. அதை ஆபரேஷன் பண்ணி, மூச்சுவிட இரண்டு ஓட்டை மட்டும் வைச்சா போறாதா? வேலிருக்க வினை தீரும் என்பா. வயசான அம்மா, அப்பாவை விச்ராந்தியிலே விடற மாதிரி, காரியம் பலிச்சவுடனே வேல் உங்களுக்கு பாரமாயிடுத்தா? அது அம்பாள் முருகனுக்கு தந்தது. அம்பாளே சூரனை சம்ஹாரம் பண்ண முடியாதா? பிள்ளைக்கு அந்த பெருமை வரணும்னு அணுக்ரஹிச்சா. அது மாதிரி பிறந்த குழந்தை நோயில்லாம வளரணும். நன்னாப் படிச்சு சிரேயஸ்ஸா வரணுமில்லையா? அதுக்காக நீங்க ஏன் பூஜை தொடர்ந்து பண்ணிண்டு வரக்கூடாது? அரைச்ச உடனே மிக்ஸியையும், கிரைண்டரையும் தூக்கி தானம் பண்ணிடறோமா? நாளைக்கு வேணும்னு துடைச்சு வைச்சுக்கறதில்லையா? எதிர்காலத்திலே உங்கள் பிள்ளைக்கோ பெண்ணுக்கோ பேரன் வேணுங்கற தவிப்பு ஏற்படக் கூடாதுன்னு ஏன் உங்களுக்குத் தோணலே? "க்ஷமிக்கணும், என் புத்தியை திறந்துட்டேள்" என்று நமஸ்காரம் பண்ணிட்டு போனார்.
நாம சக்தி ஆயுதத்தை மறக்கலாமா?

18 04 2014
     39

பாரத தேசத்தில் என்றும் காணப்படாத அளவு மழை பஞ்சம் ஏற்பட்டு பிரஜைகள் உணவு உடைகளுக்கு பரிதவிக்கின்றனர். சோரபயம், பரஸ்பரத் வேஷம், படுகொலைகள் அதிகரித்து, தேசத்தில் பயங்கர நிலமை பரவி வருவது பிரத்யக்ஷமானது. அகால மரணங்களும் வெகு சகஜமாக ஏற்பட்டு வருகின்றன. இவைகளுக்கு காரணமென்ன? பரிஹார வழி என்ன? சாஸ்த்திர மத நம்பிக்கையற்ற ராஜீய மாயாவாதிகள் தங்கள் மனத்தில் தோன்றிய ஏதேதோ காரணங்களையும் பரிஹாரங்களையும் கூறுகின்றனர். லௌகீக தோரணையில் திட்டங்கள் போட்டு தேச க்ஷேமம் ஏற்பட முயற்சிக்கின்றனர். ஆயினும் ஒன்று கூட பலிக்கவில்லை. பிரஜைகளின் துன்பம் தீரவில்லை. தேசம் பாழாகி வருகிறது.  

புண்யஸ்ய பலம் இச்சந்தி
புண்யம் தேச்சந்தி மானவா:
என்றார் ஒரு பெரியவர். "புண்ய காரியத்தில் பலன் மட்டும் வேண்டுமென்பது மனித ஸ்வபாவம். ஆனால் அதுகளுக்கான ஸாதனத்தை (வழிகளை, அதாவது: மரம் நடுவது, இந்திரன், வருணன் ஆகியோரை வணங்குவது, யாகம் செய்வது, நற்காரியங்கள் செய்வது, நல்லவர்களாக நடந்து கொள்வது) செய்வதில்லை". நம்மை படைத்த தெய்வமும், அதன் ஆக்ஞையான வேதங்களும், ஸ்மிருதிகளும், புராணங்களும், ஆச்சாரியர்களும் இவ்விஷயமாக நமக்கு உபதேசித்ததென்ன? க்ஷேமஸாதன காரியமென்ன? உலக சிருஷ்டி கர்ததாவாகிய பகவானாலேயே தேச க்ஷேமார்த்தமாக நமக்கு அருளப்பட்ட உயர்ந்த ஸாதனத்தை மறந்துவிட்டோம். ஏன்? அதை நிந்தை செய்யக்கூடத் துணிந்துவிட்டோம். அதனால் இந்த தர்ம தேசம் சாபம் பெற்று பாழாகி வருகிறது. இதை நிவிருத்திக்க வேண்டுமானால் தெய்வத்தைச் சரணடைந்து அவர் கட்டளையை நிறைவேற்ற வேண்டும். அது என்ன?  
அது தான் ஸகல சக்தியும் வாய்ந்த உத்தம தர்மமாகிய நமது யக்ஞங்கள்.

21 04 2014  40
நமது முன்னோர்கள் நம் தேசத்தில் யாகங்களாகிய உயர்ந்த சாதனத்தை எங்கும் அனுஷ்டித்து அதனால் தேசத்தை சுபிக்ஷமாகச் செய்தனர். யக்ஞத்தால் காலத்தில் மழை பெய்யச் செய்து ஸஸ்விருத்தியும், அன்ன ஸ்மிருத்தியும் ஏற்படச் செய்தனர். யக்ஞத்தாலல்லவோ பிரஜைகளின் ஆரோக்யத்தையும் அபிவிருத்தி செய்தனர். யக்ஞத்தாலேயே ராஜ்ஜியத்தில் வியாதி துர்பிக்ஷாதி கிலேசங்களைத் தடுத்தார்கள். சத்ருக்களையும் யக்ஞ மஹிமையால் ஜெயித்தனர். சத்ருக்களும் மித்ரர்களாகினர். புத்ராதிகள், சந்தானம், ஸம்பத்து, தனதான்யாதிகள், பசுக்கள் மற்றும் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத சகல போக பாக்யங்களையும் யக்ஞத்தாலேயே அடைந்ததென்பது வெறும் அதிசய யுக்தியல்ல. இதற்காக தேசம் முழுவதும் மூலைமுடுக்களிலும் கூட யக்ஞ தர்மங்கள் அனுஷ்டிக்கப்பட்டனவென்பது நமது ராமாயண பாரதாதி சரித்திரங்களில் கணக்கற்றுக் காணப்படுகின்றன. நவீன சரித்திரக்காரர்கள் பலரும் இதை உறுதி செய்துள்ளனர்.   
தமிழ் தேசமெங்கும் வேத கோஷங்களும், வேள்விப் புகையும் வியாபித்து கலியை விரட்டினவென்று நாயன்மார் பாசுரங்களில் பாடினர். ஆழ்வார்களும், வேத வேள்விகளைப் பல பாட்டுக்களில் வர்ணித்துள்ளனர். இவ்வாறு தெய்வ சக்தி பாய்ந்து, தெய்வத் தன்மை நிரம்பிய தேசமாகிய பாரத நாட்டில் சுபிக்ஷம் தாண்டவமாடியது.

(continued in Part V)


Monday, January 12, 2015

SREE MAHAPERIYAVALIN ARULVAKKU PART III

ஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வாக்கு  பாகம் 3
(Continuation of Part 2)



25 02 2014     21
தஞ்சாவூரிலே பெரிய கோவிலை ராஜா கட்டிக்கொண்டிருந்தார். எங்கிருந்தெல்லாமோ சிற்பிகள் வந்து வேலை செய்தார்கள். அங்கே வேலை செய்கிறவர்களுக்கெல்லாம் நீர்மோர் கொடுத்து உதவுகிறாள் ஒரு பாட்டி. ஒரு நாள் அந்த பாட்டி, பிரதான சிற்பிக்கிட்டே என்னிடம் ஒரு கல் இருக்கு. "என்னோட உபயமா கோவில் கட்ட வைத்துக்கொள்கிறீர்களா?" என்று கேட்டாள். "கொண்டு வாருங்கள்" என்று வாங்கிக்கொண்டான் சிற்பி. அந்தக் கல் ரொம்ப நாளா மருந்து உரைச்ச கல்...வழுவழுன்னு இருந்தது. அதைக் கூம்பு மாதிரிப் பண்ணி மேலே வைச்சுட்டான் சிற்பி. கச்சிதமா ஆயிடுத்து. கும்பாபிஷேகத்துக்கு நாள் குறிச்சாச்சு. ராஜா சந்தோஷமா சிவபெருமான் கிட்டே "நான் அமைச்சு தந்த கோபுர நிழல்லே விச்சிராந்தியா இருக்கீரா"ன்னு கேட்டான்.   
அன்னிக்கி ராத்திரி சொப்பனத்துலே சுவாமி வந்து "கிழவியம்மா தந்த நிழல்லே ஆனந்தமா இருக்கேன்னார்". ராஜாவுக்கு நித்திரை விலகித்து. தொப்பமா வேர்த்து போச்சு. அடுத்த நாள் சிற்பி கிட்டே போய் "கோபுரத்தை அமைச்சதுலே யாராவது கிழவியம்மா உபகாரம் பண்ணினாளான்னு கேட்டான். ஒரு சின்ன கல்  கொடுத்தா மோர்கார கிழவின்னான் சிற்பி. பாட்டியை அடையாளமும் காட்டினான். கிழவியின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்துட்டான் ராஜா. பகவானுக்கு தெரியும். யார் யார் எப்படின்னு...இந்த லோகத்தை படைச்சவன் அவன். நாம் அதுலே ஒரு தூசி. தூசிகள் யார் கண்ணையும் உறுத்தப்படாது.

28 02 2014     22

விநாயகர் மஹிமை
சிவபெருமானைத் தரிசிக்க வருகிறவர்களையெல்லாம் தன்னையும் தரிசிக்கிறார்கள் என்று ஆதிஷேஷனுக்கு கர்வம் வந்துவிட்டது. அவன் லட்சுமணனா அவதாரம் எடுத்தபோதும், பலராமனா முன்னாலே பிறந்தப்பவும் ஆஞ்சநேயரோட மோதவிட்டு ரசிச்சவர் பகவான். ஏன்னா ஆஞ்சநேயனும் நவ வியாகரண பண்டிதன். பதஞ்சலியா வந்தப்போ அவனுக்காக நாட்டியமே ஆடிக்காட்டினார் சோமசுந்தர பெருமான். திரையைப் போட்டுண்டு பாடம் சொல்லி கொடுத்தவருக்கு கர்வம் வந்துவிட்டதை பகவான் புரிஞ்சுண்டு எடுத்து வீசிவிட்டார். தலை மலைப் பாறையிலே அடிபட்டு ஆயிரம் பிளவாயிடுத்து. அது தான் ஆயிரம் தலை. அவனும் மறுபடி பதவி கிடைக்கிறதுக்காக சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தான். நாரதர் தான் உபதேசம் பண்ணினார்.   
பத்து கைகளோடு சிம்ம வாகனத்திலே சித்தி புத்தி கணபதியாக காட்சி தந்து ஒவ்வொரு பிளவையும் ஒரு தலையாக்கினார். உதரபந்தனமா வயிற்றை சுற்றிக் கட்டிண்டு பழைய மரியாதையையும் கிடைக்கும்படி செய்தார்.   

06 03 2014     23
முன்னேறணும்னு நெனைக்கறது தப்பில்லே. முயற்சி பண்ணணும். பகவானை நினைக்கணும். இப்படி ஒடிண்டே இருந்தா எப்போ பகவானை நெனைப்பே? யாரப் பார்த்தாலும் நேரமில்லேங்கறா. குழந்தைகள், சம்சாரம்னு எல்லோரும் வெளியே போயிடறா. கிரஹஸ்தன் தனியா இருக்கான். என்னடா பண்ணலாம்னு யோசிக்கறான். போன் பண்ணி சிநேகிதனை வரவழைச்சு சீட்டு விளையாடலாமா? இல்லே க்ளப்புக்குப் போகலாமான்னு யோஜனை ஓடறதே ஒழிய கையை காலை அலம்பிண்டு ஸஹஸ்ரநாமம் படிக்கலாம்னு தோன்றதில்லே. திருவிழாக் காரியங்களை இழுத்து போட்டுண்டு செய்யாட்டாலும் முடிஞ்ச வரை ஒத்தாசை செய்யலாமே. நாலு கால் சேர்ந்தா பந்தல். அது போல நாலு நல்லாவா ஒண்ணு சேர்ந்தா நல்ல காரியம் நடக்கும்.

09 03 2014    24

ஒரு மஹான் ஒரு நவரத்ன வியாபாரியோட கிரஹத்திலே பிக்க்ஷை ஏத்துக்க ஒத்துண்டார். பூஜை முடிந்தது. நைவேத்தியம், தீபாராதனை, அன்னதானம் எல்லாம் முடிஞ்சு வியாபாரியும் மஹானும் மட்டும் தனியா இருக்கா. மஹான் கேட்கிறார். "உனக்கு கற்களில் தோஷம் பார்க்கத் தெரியுமா?" "தெரியும் சுவாமி" பவ்யமாக பதில் சொன்னான் வியாபாரி. "தோஷமான கல்லை என்ன செய்வே?" மஹானோட அடுத்த கேள்வி. "நம்ப கடையிலே கல் வாங்கிட்டு பாதகம் ஏற்பட்டா ஜனங்க நம்மளை நம்புவாங்களா? அதனாலே தோஷமான கல்லை ஒதுக்கிடுவேன்" கைகட்டி வாய் புதைத்து பதில் சொன்னான். "இன்னிக்கு அன்னம் ரொம்ப நன்னா இருந்தது. அரிசி மூட்டை என்ன விலை?" இன்னொரு கேள்வி. "நம்ம நிலத்துலே வெளஞ்சது சுவாமி! ரொம்ப உயர்ந்த ரகம். உங்களைப் போல் மாஹான்கள் சாப்பிடற விஷயத்திலே நான் மத்தவாளை நம்பறதில்லே..காய்கறிகளும் அப்படித்தான். சொத்தை, அழுகல் இல்லாமே நானே பார்த்து வாங்கினேன்."
மௌனமாய் கேட்டு கொண்டிருந்தார் மஹான். அவன் பேசி முடிந்ததும்- "அது போலத்தான் அர்ச்சனைப் பூக்களும். வில்வத்திலேயும், துளசியிலேயும் எத்தனை ஓட்டை தெரியுமா? நெறைய அழுகல் பூ இருந்தது. இவன் வீட்டு பூஜையில் தோஷமுள்ள பூக்கள் தான் இருக்கும் என்று பகவான் நினைக்க மாட்டாரா? தேவதைகள் நம்ப வேண்டாமா! பகவானோட நெருக்கத்தை நாடறவா எல்லாத்திலேயும் கவனமா இருக்கணும்" என்றார்.  

11.03.2014   25

செயலற்ற நிலை தம்மொருவரை மட்டும் குறித்த விஷயம். செயல் என்று ஏற்பட்டுவிட்டால் அது பிறரையும் குறித்த விஷயமாகும். செயல் என்று உண்டாகும்போது அந்தச் செயலை புரிபவர் இருப்பதோடு, அச்செயலின் விளைவுக்கு ஆளாகும் ஒருவரும் இருக்கத்‌தான் வேண்டும். நீங்கள் எதைச் செய்தாலும் அதற்கு அன்பு ஒன்றே ஆதாரமாக இருக்க வேண்டும். அன்பின்மீதே செயல்படும்போதுதான் செயல் புரிபவர், அச்செயலால் பாதிக்கப்படுகிறவர் ஆகிய இருவருக்கும் நன்மை விளையும். அன்பே செயலின் ஆதாரம் எனும்போது நான் காந்திய அஹிம்சைத் தத்துவத்தை குறிக்கவில்லை. அஹிம்சைக்கு மாறுபட்ட நடவடிக்கைகள் தேவைப்படுகிற சந்தர்ப்பங்களும் உண்டு. போர்கள் புரிவதற்குக்கூட அவசியம் ஏற்படலாம். ஆயினும் செயலின் தோற்றம் ஹிம்சையாயினும் சரி, அஹிம்சையாயினும் சரி, அச்செயலைப் புரிகிறவனுடைய உள்ளத்தில் அன்பு இருக்க வேண்டும். விருப்பு, வெறுப்பு, கோபம், தீய எண்ணம் இவற்றை அறவே களைந்துவிட்டு அன்பொன்றையே எல்லாச் செயல்களுக்கும் வழிகாட்டியாகக் கொண்டோமாயின் உலகத் தீமைகளில் பெரும்பாலானவை மறைந்தே போகும். இதுவே பாரதத்தின் ஞானிகளும் முனிவர்களும் உலகுக்கு தந்த உபதேசம்.

14.03.2014   26
கர்மாவைப் பண்ணி பூமியிலே ஜெனனமெடுத்த எல்லா சரீரத்திலேயும் பகவான் தன் சக்தியை வைச்சுதான் அனுப்பறார். பாவி, அப்பாவின்னெல்லாம் பாக்கிறதில்லே. மழையும், பனியும், சூரியனும், சந்திரனும், காற்றும் மாதிரிதான் பகவத்கிருபையும். ஏரி, குளம், கிணறு வெட்டினா ஊரில் மழை பெய்யறச்சே நிரம்பறது. பக்தி என்ற குளத்தை, கிணறைத் தோண்டி வைச்சுக்கணும்.
வெய்யிலில் வடாம், அப்பளம், ஊறுகாய் போட்டு உலர்த்தி வைச்சுக்கறா. தீய நெனைப்புகளை தினமும் சூரிய நமஸ்காரம் செய்கிறபோது அழிச்சிடணும். எலிக்கு தினமும் பல் வளர்ந்துண்டே இருக்கும். அது தினமும் எதிலாவது ராவி குறைச்சுக்கும். இல்லேனா எலியின் பற்கள் எலியைவிட பெரிசாக வளர்ந்து பார்க்கவே பயங்கரமாகிவிடும். எலியின் பல் மாதிரி தான் மனசிலே வளருகிற குரோதங்களும். பகவன் நாமாவிலே அதை உரசிக் அப்பப்போ குறைச்சிக்கணும்.   

17 03 2014   27

கசியபரோட பத்தினிகள் கத்ருவும் வினதையும். கத்ருவுக்கு நாகங்கள் பிறந்தன. வினதையின் கரு இரண்டு ஜாடீகளில் இருந்தது. அவசரப்பட்டு திறந்ததாலே அருணன் முடவனானன். சூரியனுக்கு தேரோட்டியானான். 'அவசரப்படாதே! ஜாடீ தானே வெடித்து தம்பி வந்தா உன் கஷ்டம் தீரும்னா'. ஜாடீ வெடிச்சு கருடன் வந்தான். சப்தரிஷிகளிலே ஒருத்தரான கிருதுவோட பிள்ளைகள் வாலகில்யர்கள். கட்டை விரல் அளவு பருமன் உயரம். ஆனா 60000 பேர்கள். ஒரே மரத்திலே தலைகீழே தவம் செய்தவா. மஹா தேஜஸ்விகள்! நாம கட்டை விரல் அளவுக்கு இருக்கோம்னு நினைக்காம கஸ்யப முனிவரோட யாகத்துக்கு சமித்து சேகரிச்சுக் கொடுத்தா. ஆளுக்கு இரண்டுன்னாலும் லட்சத்து இருபதாயிரமாச்சே. கருடன் ஒரு சமயம் வாலகில்யர்கள் தவம் பண்ணின மரத்திலே உட்கார்ந்தான். மரக்கிளை முறிந்த சத்தம். அதுலே தொங்கிண்டிருந்த முனி குமாரர்களை அப்படியே தாங்கி கந்தமாதன பர்வதத்துலே கொண்டுவிட்டான். கிருது புத்திரர்கள் சந்தோஷப்பட்டு தங்களோட தவப்பயனை எல்லாம் கருடனுக்கு கொடுத்துட்டா. கருடன் அதனாலே தான் இந்திரனை ஜெயிச்சு அம்ருதம் கொண்டுவந்து தாயாரை அடிமைத்தனத்திலிருந்து மீட்டான்.
நமக்கு தெரியாம தப்பு நடந்துடலாம். அதுக்கு என்ன நிவர்தின்னு யோசிச்சு செய்யறதை விட்டுட்டு அதிலேர்ந்து தப்பிக்க நினைக்கிறது பாவம். பகவான் பார்த்துண்டே இருப்பார். கருடன் பறந்து போயிருந்தா தவப்பயன் கிடைக்குமா? பகவானையே சுமக்கற பலம் தான் வருமா? அதனாலே சோம்பேறித்தனத்தையும், பயத்தையும் விட்டுட்டு யோசிச்சு செயல்பட்டோம்னா பாதி பிரச்சனைகள் பறந்துபோயிடும்.

20 03 2014    28
சூரியன் அஸ்தமிக்கிற அதே நேரத்திலே சந்திரன் வர்ற நாளைத்தான் பௌர்ணமிங்கறோம். மூணாம்பிறை அதாவது அமாவாசை கழிஞ்ச திரிதியை அன்னிக்கு சந்திரனோட பிரகாசத்தை விசுவேதேவர்கள் கிரஹிச்சுக்கறா. அதனாலே மூன்றாம்பிறையைப் பார்க்கிற வாரிசுகள் மேலே அவளோட பார்வைபடறது. அவா ஆசீர்வாதம் கிடைக்கும். அதனாலேதான் மூனாம்பிறையைப் பார்க்கணும்னு ஏற்படுத்தி வைச்சிருக்கா. பஞ்சமி சந்திரனைத் தரிசனம் பண்ணினா ஜலரோகங்கள் வராது. வந்திருந்தவாளுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக குணமாகும். நவமி சந்திரனைப் பார்க்கும்படி ஏற்பட்டால், சிவனை தரிசனம் பண்ணனும். வளர்பிறை தசமியன்னிக்கு சந்திர தரிசனம் பண்ணினால் வியாதிகள் குணமாகும். திரியோதசி சந்திரன் ஐஸ்வர்யத்தைக் கொடுப்பார். ஏன்னா அன்னிக்கு குபேரன் சந்திரக் கலையிலுள்ள அம்ருதத்தை  ஆகர்ஷிச்சுகிறார். அமாவாசைக்கு முந்தின ராத்திரி பிதுர்க்கள் சந்திர கலையை பருகறா. அதனாலே தான் பூலோகத்துக்குப் பக்கத்திலே வந்திருக்கிற பிதுர்க்களுக்கு மறுநாள் காலையிலே தர்ப்பணம் பண்ணி ஆசீர்வாதம் வாங்கிக்கறோம்.

23.03.2014    29

இராம அவதாரத்திலே அனுமாருக்கு அவரோட பலத்தை ஞாபகப்படுத்தின ஜாம்பவான், சஞ்சீவி பேரையெல்லாம் சொன்னவர். ராமரை மாப்பிள்ளையாக்கிக்கணும்னு ஆசைப்பட்டார். இந்த ஜென்மாவுலே முடியாது, அடுத்த ஜென்மத்துலே உன் ஆசையை நிறைவேத்தறேன்னார் ராமர். அந்த ஜாம்பவான் அமிர்தம் கடையவே ஒத்தாசை பண்ணினவர். அதனாலேதான் ரொம்ப பழைய சாமானை ஜாம்பவான் காலத்ததுன்னு சொல்ற வழக்கம் வந்தது. அந்த ஜாம்பவான் கிருஷ்ணர் காலத்திலேயும் இருக்கார். சிங்கத்தோட சண்டைபோட்டு ஜெயிச்சு மணியைக் கொண்டுவந்து தன் பிள்ளையோட தொட்டிலுக்கு மேலே கட்டினார். தாதா உக்கிரசேனருக்காக அந்த மணியைக் கொடுன்னு ஒரு தடவை கிருஷ்ணர் கேட்டார். தம்பியைக் கொன்று அந்த மணியை ஏன் கிருஷ்ணரே எடுத்துண்டிருக்கக்கூடாதுன்னு ராஜா சத்ராஜித் புலம்பினார். ஊரிலேயும் இதே பேச்சு. பழியைத் துடைக்கறத்துக்காக கிருஷ்ணர் ஒரு சின்ன படையோட காட்டுக்கு போனார். பிரசேனன், அவன் ஏறிண்டு வந்த குதிரை இரண்டும் செத்து கிடந்தது. அங்கிருந்த சிங்கத்தோட காலடியைத் தொடர்ந்து நடந்தார். கொஞ்ச தூரத்திலே சிங்கமும் செத்து கிடந்தது. பக்கத்திலே கரடி காலடி இருந்தது. மணி அங்கேயும் அகப்படலே. கரடியோட காலடியைத் தொடர்ந்தார். கரடியோட குகை வாசல்லே கூட வந்தவாளை நிறுத்திட்டு தான் மட்டும் உள்ளே போனார். ஏழெட்டு நாள் கழிஞ்சதும் கூட வந்தவா கிருஷ்ணர் செத்துட்டார்னு துவாரகைக்கு திரும்பி போயிட்டா. ஒருத்தருக்கு கூட உள்ளே போய் பார்க்கிற தைரியம் இல்லே. சுயநலம் எப்பவுமே நல்லது செய்யாது. இராமாயணத்திலே சுக்ரீவன் வாலி செத்துட்டான்னு குகை வாசலை மூடினான். இங்கே அப்படி செய்யல்லே. இருபத்தோரு நாள் சண்டை நடந்து ஜாம்பவான் சரணாகதியடைஞ்சுட்டார். பகவான் ராமனாக காட்சி தந்தார். ஜாம்பவான் தன்னோட பெண்ணை ஜாம்பவதியை அவருக்கு கல்யாணம் பண்ணி கொடுத்து சியமந்தக மணியோட அனுப்பினார்.  
கிருஷ்ணர் ராஜாகிட்டே "உயர்ந்த பொருளை பத்திரமாக வைச்சுக்கணும். இனிமேலாவது பொறுப்பில்லாதவா கிட்டே கொடுத்துட்டு அப்பாவி மேலே பழி போடாதேன்னார்".     

26 03 2014   30 


'சூரியன் பிறந்தான்' என்று யாரும் சொல்றதில்லே! ஏன்னா தினமும் தோன்றும் சூரியன் புதுசா பிறக்கறதில்லே. நேற்று மாலை மறைஞ்சவன் இதோ மறுபடியும் உதித்துவிட்டான். அதுபோல சனத்குமாரனாக இருந்து வேதாந்தங்களை கரைச்சுக்குடித்தவன், ப்ரம்மண்யத்தை வளர்க்க சுப்ரமண்யமாக அவதரிச்சான். 'சு' என்றாலே சுபம், சுகம் என்று அர்த்தம். 'கந்தம்' என்றால் வாசனை. சுகந்தம் என்றால் வாசனை மேலும் சிறப்படைகிறது. ப்ரமண்யத்திற்கு விஷேஷத்தை தந்ததால் கார்த்திகேயன் சுப்ரமண்யனானான். சுப்ரமண்யரின் அவதாரம் தான் ஞான சம்பந்தர். "வேத வேள்வியை நீந்தனை செய்துழல் ஆதாமிமல்லியமண்" என்றும் மறை வழக்கமிலா மாபாவியர்" என்றும் சம்பந்தரே சொல்லியிருக்கிற சமணர்களை வென்று வைதீகத்தையும் சைவத்தையும் நிலைநாட்டத்தான் அவர் அவதாரம் பண்ணினார். இல்லாட்டா அம்பாள் அவருக்கு பால் கொடுத்திருப்பாளா?
ப்ரம்யண்யத்தை-வைதீக தர்மத்தை வாழ வைப்பதை லட்சியமாகக் கொண்டதினால் தான் 'வாழ்க அந்தணர்' என்கிற தேவாரப் பாடலால் சமணரை ஜெயித்தார். சமணர்கள் 'விப்ரக்ஷயம்'ன்னு எழுதி ஆற்றில் போட்டார்கள். விப்ரக்ஷயம் என்றால் பிராமணன் ஒழிக என்று அர்த்தம். அதை வெள்ளம் அடித்து கொண்டு போயிற்று. சம்பந்த பெருமான் 'வாழ்க அந்தணர்' என்று ஆரம்பிக்கும் பாடலை எழுதிப் போட்டார். ப்ராம்மண்யம் இருந்தால்தான் லோகத்துக்கு க்ஷேமம்னு அவர் திட்டவட்டமாக நினைச்சார். அதற்காக யாகம் செய்துண்டு வேதம் ஓதிண்டு இருக்கறவா மட்டும் நன்னா இருக்கணும்னு நினைச்சாரா? "வையகமும் துயர் நீங்கவே"ன்னு முடிக்கிறார். எல்லாரும் க்ஷேமமாயிருக்கணுங்கறது தான் அவர் நோக்கம்.

(CONTINUED in Part IV)

MAHAPERIYAVALIN ARUL VAKKU - PART II

ஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வாக்கு 
PART II (Continuation of Part I)



31 01 2014   11
அந்நிய நிலத்தில் மேயக்கூடாது என்பதற்காகப் பசுவைக் கட்டி போடுகிறோம். அந்த நிலத்தின் பயிர் சேதம் ஆகாமல் இருக்கவேண்டும் என்பதற்காக மட்டும் கட்டிப்போடுவதில்லை. பசு அடிபடாமல் இருக்கவேண்டும் என்று அதைக் காக்கவே கட்டிப்போடுகிறோம். இவ்வாறே எல்லா சமயக் கட்டுப்பாடுகளும் நாம் பிறருக்கு இன்னல் விளைவிக்காமல் காப்பாற்றுவதோடு நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவும் விதிக்கப்பட்டவை. முக்கியமாக, நம்மை நம்மிடமிருந்தே காப்பாற்ற விதிக்கப்பட்டவை. 

01 02 2014   12
மரீசின்னு ஒரு ரிஷி. பார்வதியே பெண்ணா பிறக்கணும்னு தவசிருந்தார். விநாயகர் அப்படியே நடக்கும் என்று வரம் கொடுத்தார். ஒரு நாள் மரீசி முனிவர் யமுனையில் குளிக்க வந்தபோது ஒரு தாமரைப் பூவிலே சங்கு இருப்பதைக் கண்டு நதியில் இறங்கினார். கிட்ட நெருங்கின பிறகுதான் அது சங்கு வடிவிலிருந்த குழந்தை என்று தெரிந்துகொண்டார். வலிமையான அந்தக் குழந்தைதான் வல்லபை. பிள்ளையாரின் உடம்பில் புகுந்து கொண்டார் சிவன். மனிதர்களுக்கு வல்லப சக்தியை தர பகவானை மணந்துகொண்டாள் வல்லப சக்தி. எல்லா தேவியரும் இடப்பக்கம் இருந்தால் வலது பக்கம் இடம் கேட்டு பெற்றுகொண்டாள் வல்லபை. வள்ளியை முருகன் மணம்புரிய உதவியவரும் கஜானனன் தான்!
அதனால் கணேசரை பூஜித்தால் மும்மூர்த்திகளும், முப்பெருந்தேவியரும், குமரக் கடவுளும் சந்தோஷமடைந்து சகல நன்மைகளும் தருவார்கள். 

04 02 2014   13
கோவில்லே போய் கோலம் போட்டா, பக்தாளெல்லாம் கொண்டாடறா. தேவதைகளெல்லாம் ஆசீர்வாதம் பண்றா. சொல்ற புத்திமதியை மேடை போட்டுச் சொன்னா ஜனங்களெல்லாம் புகழறா. அச்சுலே பார்த்தா அத்தனை பேரும் பரவசப்படறா. ஏன்னா நல்லது லோகமெல்லாம் பரவணும். ஒருத்தருக்கு சிரமம்னா கை கொடுக்க நானிருக்கேன்னு ஓடி வரணும். அப்பத்தான் பகவானோட நெருக்கத்தை அனுபவிக்க முடியும்.

06 02 2014    14
வலது கை சாப்பிடறது. நல்ல சங்கீதத்துக்கு தாளம் போடறது. பிரசாதம் வாங்கறது. இடது கை தோட்டி வேலை செய்யறது. பெரியவர்களின் பாதத்திலே விழும்போது இரண்டு கையும் தான் பாதத்தை புடிச்சிக்கிறது. இரண்டு கையும் தான் கற்பூரம் ஒத்திக்கறது. பளு தூக்கும்போது இடது கை வேண்டியிருக்கு. அதனாலே எந்த வேலை செய்யறதும் கேவலமில்லே. நல்லவாளுக்கு சம அந்தஸ்து, உரிமை கொடுத்து உதவி செய்யணும் என்கிறதை பகவான் எவ்வளவு எளிமையாக சொல்லி இருக்கார்.

11.02.2014  15
ஒருத்தர் சொன்னார். 'அபிஷேகம் பண்ணினா விக்ரஹம் பாசி பிடிச்சிடறது. அழுக்கு சேர்றது. புளிபோட்டு தேய்க்கணும்... வீட்டுலே மடி சஞ்சின்னு கேலி பண்றா. அதனாலே வெறும் அர்ச்சனை நைவேத்தியம் தான்' ...
இப்போ குளிர் பெட்டி, ஃபேன், டெலிவிஷன்னு எத்தனையோ நல்ல சமாச்சாரங்கள் வசதிக்காக வீட்டுலே வந்துடுத்து. அதையெல்லாம் அடிக்கடி தூசி தட்டி சுத்தமாக வைச்சுக்கலையா? அது போல தானே இதுவும். வசதியிருக்கிறவா அஞ்சு ரூபாய் கொடுத்தா படங்களையும் சுத்தமாக துடைத்து விட்டுப்போறான்.
எந்த குறையும் வராம பேன் அடியிலே டெலிவிஷன் பார்க்கணமேங்கற பயம் ஒவ்வொருத்தருக்கும் அடி மனசுலே இருக்கு. அதுக்காக ராமர், கிருஷ்ணர், சிவன், அம்பாள், முருகன், கணபதின்னு ஏகப்பட்ட படம் மாட்டி வைச்சிருக்கா. ஆனா படத்துமேலே இருக்கற ஒட்டடைய விஷேஷ நாள்ளேதான் தொடைக்கறா. அத்தனை சுவாமிக்கும் ரெண்டு வாழைப்பழம் நைவேத்தியம் காண்பிச்சா போதுமா?

13.02.2014    16
இருப்பது ஒரே சூரியன் தான். ஆனால் கையிலே கொஞ்சம் ஜலத்தை எடுத்துக்கொண்டு நல்ல வழுவழுப்பான தரையில் தெளித்தால் ஒவ்வொரு முத்து ஜலத்திலும் பிரதிபிம்பமாக ஒரு சூரியன் தெரிகிறது. பிரித்து பிரித்து இப்படிப் பல பிரதிபிம்ப சூரியன்கள் இருந்தாலும் உண்மையில் இருப்பது ஒரு சூரியன் தான். இப்படியே எல்லாவற்றுக்கும் மூலமாக ஒரே சக்திதான். நம்மெல்லோரிடமும் பிரிந்து பிரிந்து பல போல் தோன்றுகிறது.

16 02 2014    17
சமூகத்துக்கோ, ராஜ்யத்துக்கோ, ஒரு வர்கத்துக்கோ தலைவர்களாக  இருப்பவர்கள் சமய அனுஷ்டானங்களையும் ஆசரணைகளையும் புறக்கணிக்கலாகாது. தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு சமய சடங்குகள் தேவையாக இல்லாதிருக்கலாம். ஆன்மீகத்தில் அவர்கள் முன்னேற்றம் கண்டு சமய அனுஷ்டானங்களை பின்பற்றும் அவசியத்தை கடந்திருக்கலாம். என்றாலும் அவர்கள் அனுஷ்டானங்களை விட்டுவிட்டால், இந்த அனுஷ்டானங்களின் உதவியை உண்மையாகப் பெறவேண்டிய நிலையிலுள்ள மற்ற மக்களும் இவற்றை அலட்சியம் செய்ய தொடங்கிவிடுவர். இதனால் தலைவர்கள் மக்களுக்குத் தவறான உதாரணம் காட்டியதாகவே ஆகும். மக்கள் எந்த நிலையில் இருக்கிறார்களோ அங்கிருந்தே அவர்களை முன்னுக்கு அழைத்து செல்ல வேண்டியது தலைவர்களின் கடமையாகும்.  

18 02 2014   18
நமக்கு வேதமே அறிவை ஊட்டி நல்வழி காட்டுகிறது. அது அனாதி. அது கூறிய அன்பினால் தான் நம் மதம் வளர்ந்தது. நமது மதத்திலுள்ள சிறந்த தத்துவங்களைக் கண்டு பலர் நம் மதத்தை தழுவுகின்றனர். நாம் ஸ்கூல், ஆஸ்பத்திரி, மிஷன் பிரச்சாரக் கூட்டம் ஏற்படுத்தவில்லை. யாரையும் அழைக்கவில்லை.
நமக்கு வேதமே ஆணிவேர், அனுஷ்டானமே இலை, பூ, காய், கனி. ஜனன மரணமற்ற முக்தியே ரஸாநுபவமாம்.  

20 02 2014    19
அரிவாள்மணை, சுத்தி இவற்றிடையே கவனமா இல்லேன்னா கையை வெட்டிடும். ஸ்கூட்டர், கார்லே பிரயாணம்  பண்றச்சே நெனைப்பு வேறெங்கையோ போனா விபத்து நடந்துடும். அடுப்புக்கிட்டே கவனக்குறைவா இருந்தா தீப்புடிச்சுடும். ஆனா பகவான் ஞாபகம் இல்லாம வாய் ஸ்லோக மந்திரத்தை முணுமுணுத்தா போறும்னு நினைக்கலாமா? சுவாமியை நினைச்சிண்டு 'சம்போ மகாதேவா, நமோ நாராயணா' ன்னு சொன்னாலே போதுமே.
உங்க குழந்தை உண்மையை சொல்றான்! நல்லவனா இருக்கான்னா உங்க மனசு எப்படி எத்தனை சந்தோஷப்படறது?  
எல்லோரும் பகவானோட குழந்தைகள். நியாயமா நடக்கறவாளை நேர்மையா காலட்ஷேபம் பண்றவாளை பகவானுக்கு பிடிக்கும். நம்மை ஊனமில்லாம படைச்சு, நல்லபடி வாழ வழி காட்டின பகவானுக்கு நாம எப்படி நன்றி செலுத்தறது.     
புதுப் பூவைப் பார்த்தா பகவானுக்குத் தரணும்னு ஆசை வரணும். தளதளன்னு இருக்கற சந்தனத்தை பகவானுக்குப் பூசிப் பார்க்கணும்னு நெனைப்பு வரணும். இந்த புடவையிலே அம்பாள் எப்படி இருபாள்னு நெனைச்சு தியானம் பண்ணினாலே கருணை செய்கிறவளாச்சே! சுடச் சுடப்பால் குடிச்சா நெஞ்சிலே இருக்கற பகவானுக்கு வெந்துடும்னு ஆத்திக் குடிச்ச பக்தாலெல்லாம் இருக்கா. பகவானை மனசாலே நெருக்கமாக்கிக்கணும். வார்த்தையாலே மட்டும் போறாது. 
23 02 2014    20
கழுதை மேலே உப்புப்பொதி ஏத்திண்டு சந்தைக்குப் புறப்பட்டான் வியாபாரி. திடீர்னு மேகங்கள் கூடிண்டு மழை கொட்டித் தள்ளித்து. உப்பு பொதி நனைந்து பாதிக்கு மேல் வீணாகிவிட்டது. "இராத்திரிலே பெய்யப்படாதா? பகவான் ரொம்பத்தான் சோதிக்கிறார்" என்று வருத்தபட்டான் உப்பு வியாபாரி. ஊர் வெளியே காட்டிலே கொள்ளைக் கூட்டம் சூழ்ந்து கொண்டு "எடு பணத்தை" என்று அங்கு வந்த சில வியாபாரிகளை மிரட்டினார்கள். சுடுகிறதற்காக துப்பாக்கியை எடுத்தார்கள். அந்த காலத்தில் வெடிமருந்து கெட்டித்து சுடுவார்கள். இப்போ மாதிரி குண்டு கிடையாது. அந்த வெடி மருந்து பட்டாசு மாதிரி மழை பெய்தால் நமுத்துவிடும். சுடாது. துப்பாக்கி சுடாதலால் திருடர்கள் ஓட்டம் பிடித்தார்கள். மழை பெய்ய வைத்த பகவானை எல்லா வியாபாரிகளும் கொண்டாடினார்கள். அறிந்த உப்பு வியாபாரி கடவுளிடம் மனசுக்குள் மன்னிப்பு கேட்டுக்கொண்டான்.
(continued in Part III..)

Sunday, January 11, 2015

SREE MAHAPERIYAVALIN ARUL VAKKU - PART I

ஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வாக்கு 
As I had opined in Sage of Kanchi, the group in Facebook, I have started posting in my blog from today the 11th January 2015.


12 01 2014 முதல் இது வரை எழுதி வந்த மஹாபெரியவாளின் அருள்வாக்கு இன்றுடன் 108 பூர்த்தியாகிறது. முன்பே கூறியிருந்தபடி என்னிடம் உள்ள பல புத்தகங்களிலிருந்து எனக்கு பிடித்தவற்றை ஸேஜ் ஆஃப் காஞ்சியில் (Facebook group) பதிவு செய்து வந்தேன். இம்முயற்சிக்கு ஆதரவு அளித்த எல்லோருக்கும் என் நமஸ்காரங்கள். இந்த 108 ஐயும் தொகுத்து இன்னும் ஒரு வாரத்தில் என்னுடைய
blog-ல் பதிவு செய்ய உள்ளேன் --sarayutoayodhya.blogspot.in

An interesting thing emerged during this is that several passages in new books by recent authors claiming copyright find a place even in books printed in 1960s by other institutions.
நன்றியும் நமஸ்காரங்களும்.
ramachandranvenkataraman
Bottom of Form

படிப்பதற்கு வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு பக்கத்தில் பத்து என்று 11 பாகங்களாக 108 -  ஐ பிரித்து பதிவு செய்துள்ளேன்.

PART I

12 01 2014    1
ஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வாக்கு 
இப்பொழுது லோகம் முழுவதிலும் பஞ்சம். ஆயினும் சாத்தியப்படும் வரையில் பகவானுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும். அதுதான் பரம லாபம். பொருள், உடல், மனம், வாக்கு இவைகளை கொடுக்க வேண்டும். இந்த ஒற்றுமை இருந்தால், எவ்வளவு பேதமிருந்தாலும் அந்தரங்க அன்பிருக்கும். பணம் வெளிப்பிராணன்; வெளியில் சஞ்சாரம் செய்வது அது. அதையும் கொடுக்க வேண்டும். தினமும் அஞ்சு நிமிஷம் பகவான் நாமா ஸ்மரணம் செய்யுங்கள். ஒவ்வொருவரும் சிறிது தர்மம் செய்தால் லோகத்தில் பல ஜனங்களின் கஷ்டம் நிவர்த்தியாகிவிடும். ஆயிரம் பெயர் சொன்னால் மட்டும் போதாது. பொருளினாலும் பகவத் கைங்கர்யம் செய்ய வேண்டும்.

13 01 2014      2
கல்லைத் தூக்கி சமுதிரத்திலே போட்டா மூழ்கிடும். ஆனால் மரத்தாலே கப்பல் பண்ணி, அதிலே எத்தனை கல்லை ஏற்றினாலும் மூழ்கறதில்லே. கவலைகள் கற்கள் மாதிரி. பகவான் தெப்பம் மாதிரி. மனசு என்கிற சமுத்திரத்திலே பகவானைத் தெப்பமாக்கணும். தெப்பத்தை இணைக்கிற ஆணிகள் தான் பூஜை மந்திரங்கள் எல்லாம். அப்புறம் கவலைகளைத் தூக்கி தெப்பத்தில் இறக்கலாம். சம்சாரசாகரத்தில் மூழ்கடிக்கபடாமல் கரை சேர்ந்துவிடலாம். 

14 01 2014     3
உள்ளத்தில் துக்கமோ பக்தியோ அதிகமானால் கண்ணால் ஜலம் வழிகிறது. கோபம் வந்தால் உதடு துடிக்கிறது. மனத்திற்கும் கண்ணுக்கும் உதடுக்கும் சம்பந்தம் இருப்பதால். உள்ளே ஏற்படுகின்ற உணர்ச்சிக்கு ஏற்ப வெளியே சில காரியங்கள் ஏற்படுகின்றன. இதையே திருப்பி வைத்து பார்த்தால் வெளியே செய்கின்ற சில சம்ஸ்காரங்களினால் உள்ளே சில மாறுதல்கள் உண்டாகின்றன. பக்தி வரவேண்டும், சாந்தம் வரவேண்டும், சக்தி வரவேண்டும் என்றால் வெளியே சில சின்னங்களை போட்டு கொள்ளவேண்டும் என்று பெரியோர்கள் சொன்னார்கள். இவை எல்லாம் வெளி வேஷங்கள் என்று நினைத்தால் வெறும் வேஷமாகப் போய் விடுகின்றன. 'ஆத்மார்த்தமாக ஜீவனைப் பரிசுத்தம் செய்து கொள்வதற்காக' என்று நினைத்தால் சத்தியமாக உள்ளே பரிசுத்தம் ஏற்படுகிறது. புறச்சின்னங்கள் ஆத்மாவிற்கு உபயோகப்படுகின்றன.  

15.01.2014    4

ஒரு பெரிய குளம். அதனடியில் சேறு நிறைந்த ஒரு சுரைக்குடுக்கை கிடக்கிறது. அக்குடுக்கை அடியில் கிடப்பதற்குக் காரணம் அதில் நிறைந்திருக்கும் சேறுதான். அச்சேற்றை எடுக்க எடுக்க அக்குடுக்கை மேலே வரும். அப்படியே மனதிலிருக்கும் அழுக்கை அப்புறப்படுத்தி அதை சுத்தப்படுத்தினால் அதுவும் மேலே வரும். ஹ்ருதயமாகிற சிம்மாதனத்தில் பகவானை உட்கார்த்தி வைப்பதற்க்கு அச்சிம்மாஸனம் சுத்தமாக இருக்க வேண்டும். அசுத்தமாக இருக்கக்கூடாது. கெட்ட எண்ணங்களாகிற அசுத்தத்தால் ஹ்ருதயம் ஆக்கிரமிக்கப்படாமலிருக்க வேண்டும்.  

16.01.2014    5
சிலாதர் என்று ஒரு ரிஷி சின்ன வயசில் பிட்சைப் பாத்திரத்தில் கல்லை போட்டுவிட்டார். குருடனான பிட்சாண்டியும் கல்லைச் சேர்த்து சாப்பிட்டு விட்டான். அந்த சிறுகல் தான் யமலோகத்தில் பாறையாக வளர்ந்திருந்தது. அவர் இறந்த பிறகு பொடித்து சாப்பிட வேண்டும் என்று அறிந்தார் சிலாதர். பூலோகத்திலேயே அப்படி ஒரு பாறையைத் தேர்ந்தெடுத்துக் கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து குடித்து விட்டார். யமலோகப் பாறை காணாமல் போயிற்று. ஏகாதசி துவதாசி நாட்களில் விரதமிருந்து நாமும் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பாவத்தை கரைத்து விட முடியும்.
காய்கறி   வெட்டறோம். புழு சாகறது. நமக்காக சமையல் செய்யறவா சுட்டுக்கொன்ன அந்த பாவத்தில் சாப்பிடுகிற எல்லோருக்கும் பங்குண்டு. அவசரமாக போகிறோம். கால் மிதி பட்டு எறும்புகள் சாகறது. முட்ட வருகிற பசுவை கோபத்தில் அடிக்க வேண்டி வரும். அடுப்பில் உள்ள பால் தீய்ந்தாலே பாபம், அது மாட்டின் உதிரம். பூப்பறிக்கும்போது மொட்டுகளையும் காய்பறிக்கும்போது பிஞ்சுகளையும் பறிப்பது பாபம். இவை குவிந்து போகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

17.01.2014     6
மறுநாள் பட்டினியாச்சேனு முதல் நாள் தசமி அன்னிக்கு திணியத் திணியச் சாப்பிடக்கூடாது. ஏகாதசி அன்று லேசான ஆகாரமா, சுத்த ஆகாரமா பகல் ஒரு வேளை சாப்பிட்டு இராத்திரி பாலும் பழமும் மட்டும் எடுத்துக்கணும். அதேமாதிரி ஏகாதாசிக்கு மறுநாள் வயிற்றுக்கு நிறைய வேலை தரக்கூடாது. அகத்தி புண்பட்ட வயிற்றை ஆற்றும். நெல்லிக்காய், சுண்டைக்காயெல்லாம் கட்டாயம் சேர்த்துக்கணும். துவாதசி அன்று யாராவது ஒரு ஏழைக்கு அன்னம் போடுகிறது நல்லது. நம்மாலேயும் ஒருத்தர் பசியைத் தீர்க்க முடிகிறதே என்கின்ற சந்தோஷம் உண்டாகும். ஏகாதசி அன்னிக்கு பரநிந்தை பண்ணக்கூடாது. சாந்தமாயிருக்கணும். பகவான் நாமாவைச் சொல்ற நாக்கு கெட்ட வார்த்தை பேச அனுமதிக்காம அடக்கி வைக்கணும். பெரிய ஏகாதசி அன்னிக்கு சந்தனம் பூசிக்க கூடாது. தாம்பூலம் போட்டுக்க கூடாது என்பா. ஏன்? இதெல்லாம் மற்ற பக்தர்களோட மனசைக் கலைக்கலாம். விரத நாளிலே ஏன் பாவம் பண்ணனும்!

18.01.2014    7

 
நெல்லு மூட்டையாக்கட்டி களஞ்சியத்துக்குப் போறதேன்னு பூமி அழறதில்லே. மனுஷன் அழறான். ஜீவன் தன் கடமையை முடிச்சுண்டு பரலோகம் போறது! எல்லோரும் ஒரு நாள் போகறவாதான். தங்கறவா யாரு? கொஞ்சம் முன்னே பின்னே இருக்கும். நெல்லு மட்டும் களஞ்சியத்துலேயே இருக்க முடியுமா? மூணு வருஷம் கழிஞ்சா விதைக்கு கூட ஆகாது. கோவிலுக்கு, நல்ல மனிதர்களுக்கு, உணவாப் போற நெல்லு மாதிரி, புண்ணியம் பண்றவா....சாதாரண மனுஷாளுக்கு உணவாகர நெல்லு பாபம்-புண்ணியம் ரெண்டையும் பண்றாப்போல. வயலிலே, அரைக்கிற எடத்துலே கீழே சிந்தற நெல்லைப் போல- களையறச்சே சிந்தற அரிசி, சாவியாப்போற அரிசி, புழுக்கட்டிப் போனது- இது மாதிரிதான் மனுஷாள்ளேயும் இருக்கா. சாவியா போன அரிசியா மனுஷா இருக்கப்படாது.  

19.01.2014   8

இந்த காலத்தில் 'டின்னெர்' நடத்துகிறார்கள். 'டோஸ்ட் ப்ரபோஸ்' பண்ணுகிறார்கள். 'உன்னுடைய சுகத்திற்காக நான் சாப்பிடுகிறேன்' என்று சொல்லிக்கொண்டு ஒருவன் சாப்பிடுகிறான். 'சாப்பிடுகிறவன் இவன். அது இவனுக்குத்தானே புஷ்டி தரும்? இன்னொருவனுடைய சுகத்துக்காக சாப்பிடுவதாகச் சொல்லிவிட்டால், அந்த இன்னொருவனுக்கு எப்படி புஷ்டி கிடைக்கும்?' என்று கேட்கலாமா?
இதெல்லாம் ஒரு மனோபாவம். இந்த மனோபாவமே இன்னொருவனுக்கு புஷ்டி கொடுக்கிறது. இப்படியே யாகங்களில் நாம் அக்னியில் போடுகின்ற ஆஹூதிகள், அவிசுகள் யாவும் தேவதைகளுக்கு சக்தி கொடுக்கின்றன. இவ்வாறு பாவித்து நாம் யக்ஞம் செய்தால் தேவர்களும் அப்படியே பாவித்து நமக்கு அநுக்கிரகம் செய்வார்கள்.  

21 01 2014      8
ஒரு பட்டணத்துலே ஒரு பெரிய ஆஸ்பத்திரி. அங்கே உடம்பெல்லாம் வெந்து கத்‌திண்டு இருக்கற ஒரு நோயாளியை கொண்டு வரா. இன்னொரு வண்டி வரது. அதிலே மாடி படியிலேயிருந்து தவறி விழுந்து நினைவு தப்பிப் போன ஆள் வரார். அடுத்து விபத்து நடந்து இரத்தம்  சொட்ட ஒருத்தரை கொண்டுவரா. இதுல காய்ச்சல், தலைவலி போன்ற சின்ன உபாதைகளோடு வரவா கிட்ட சின்ன டாக்டர் தான் நிப்பா. அதுக்காக வைத்திய சாலையிலே அலட்சியம் பண்றான்னு அர்த்தம் பண்ணிக்கலாமா? உன்னைவிட அவசியமானவாளுக்கு பகவான் ஓடிக்கொண்டிருக்கார். அவசரமா கவனிக்க வேண்டியவா யாருன்னு பகவானுக்கு தெரியாதா?

25 01 2014    9

வெள்ளைச் சர்க்கரை; தண்ணீர் கலக்காத பால்; அக்னி அதுக்குண்டான பாத்திரங்கள். இது இருந்தா எல்லோராலேயும் ருசியான பால்கோவா கிண்டிட முடியுமா? எத்தனை பேர் கவனக்குறைவா அடிப்பற்ற விட்டுடறா? எத்தனை பேர் இனிப்பை குறைச்சலா போட்டுடறா? திகட்டி அலுத்துப் போகிற மாதிரியும் சில பேர் பண்ணிடறா. பல பேர் அஜாக்கிரதையா பாலையே கொட்டிடறா! சிலபேருக்குப் பாறைமாதிரி அமைஞ்சுடறது. பயந்துபோய் முன்னாலேயே இறக்கிக் களகளன்னும் ஆகிவிடறது.   
அக்னி தான் ஆத்மா. அது எல்லாரிடத்திலும் ஒரே மாதிரி தான். உபகரணங்கள் தான் தாய், தந்தை, மனையாள், புத்திராள் என்கிற சூழ்நிலை. பால் போல மனசை ஆக்கிக்கணும். எல்லாருக்கும் இனிப்பானவனா, உபகாரம் செய்யறவனா வாழறது தான் வாழ்க்கை. பாலையும், இனிப்பையும் படைச்ச பகவான் அதைக் கறுப்பாக்கச் சொல்லி அவரா சொன்னார்? மனுஷாளோட அசிரத்தை தான் காரணம்.
ஒரு தடவை தப்பாயிடுதுங்கறத்துக்காக மேலே மேலே தவறு செய்யப்படாது. தீய்ஞ்சு போயிடுத்துன்னா மேலா எடுத்துடணும். அப்போ எல்லாம் வீணாகாது. பாலும் சர்க்கரையும் நல்லது தான். அதுக்காக அதிகமா சேர்த்துண்டா அவஸ்தையாயிடும். எதுவும் அளவோட இருக்கறது தான் பக்குவம்.     


இன்று பிரதோஷம் (28 01 2014)    10
எங்கும் பிரதோஷ காலத்தில் சிவன் நடனம் செய்கிறார். விஷேஷமாக சிதம்பரத்தில் நடராஜரது நர்த்தனம் மிக ஆனந்தமானது. வ்யாக்ரபாதர் புலி, பதஞ்சலி பாம்பு. பயங்கரமான இவைகளுக்கும் நடனம் இன்பம் அளிக்கிறது. நந்திக்கு கொம்பும் கால்களுமுண்டு. வ்யாக்ரபாதருக்கு கால்களுண்டு. பதஞ்சலிக்கு இரண்டுமில்லை. கண்ணும் காதும் அவருக்கு ஒன்றே. கண்ணை மூடினால் காது கேளாது. நடராஜ தாண்டவத்தை அவர் நன்கு அனுபவிப்பவர். சதா தியானம் செய்பவர். அவர் நடராஜ நடனத்திற்கு ஏற்ப 8 ஸ்லோகம் இயற்றினார். அவரைப் போல் அவைகளுக்கும் -- தீ, தா -- என்ற கொம்பும் காலுமில்லை. ஸ்ரீ மடத்திலும் பிரதோஷ காலத்தில் அந்த பாராயணம் நடக்கிறது. மாலையில் சிவசேவை செய். ஆனந்தமுண்டாகும் (ஸதஞ்சித.........ஹ்ருதிபஜ)
............ continued to Part II