Popular Posts

Monday, January 19, 2015

SREE MAHAPERIYAVALIN ARULVAKKU PART IX


ஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வாக்கு பாகம் 9
(Continuation of Part 8)


29 10 2014     81
ஒரு சமயம் யாக்ஞவல்கிய முனிவர், குரு சாபத்தினால் எல்லா வித்தைகளையும் மறந்து போய் விட்டார். அதனாலே தாங்க முடியாத வருத்தத்துடன் சூரியனை வேண்டினார். சூரியன் மறுபடி வேதாந்தங்களை அவருக்குச் சொல்லிக் கொடுத்து 'எல்லாம் மறக்காமலிருக்க கலைமகளைப் பிரார்த்தியுங்கள்' என்று சொன்னான். எத்தனை படிச்சாலும் எல்லாம் மறக்காமலிருக்க கலைவாணி அருள் வேண்டும். முற்காலத்திலே கங்கைக் கரையிலே வால்மீகிக்கு ஸ்ரீஹரி சரஸ்வதி கவசத்தை உபதேசித்தார். பத்திரிகாசிரமத்திலே பிரம்மா பிருகுவுக்கும், பிருகு மகரிஷி புஷ்கரத்தீவிலே சுக்ராச்சாரியாருக்கும் உபதேசித்த மந்திரம் இது. சந்திர மலையிலே மரீச ரிஷி பிரஹஸ்பதிக்கும், பாற்கடலிலே ஜரத்காரு ரிஷி ஆஸ்தீக முனிவருக்கும், மேரு மலையிலே விபாண்டக முனிவர், ரிஷிய சிருங்கருக்கும், ருத்திர மூர்த்தி கௌதமர், கணாதரருக்கும், சூரியன் காத்யாயன மஹரிஷிக்கும் உபதேசம் பண்ணின மந்திரம் இது.  

சுதல லோகத்தில் ஆதிஷேஷன் பாணிணிக்கும, பாரத்வாஜாருக்கும், சாகடாயனருக்கும் சொல்லிக் கொடுத்த அற்புதமான கவசம் இது. இதை நாலு லட்சம் தடவை சொல்கிறவன் பிரகஸ்பதிக்கு ஈடாக விரும்பும் வித்தையில் புகழ் பெறுவான். நான்கு லட்சம் ஒரே நாளில் முடியக்கூடியது அல்ல. ஒவ்வொரு செங்கல்லாய் அடுக்கி ஒரு பிரம்மாண்டமான மாளிகை எழுப்பவது போல, ஒவ்வொரு அரிசியும் சேர்ந்து களஞ்சியம் நிறைவது போல, ஒவ்வொரு இழையும் இணைந்து ஆடையாய் மாறுவது போல, தினமும் சொல்லிக்கொண்டே வந்தால் மலையாய் ஞானம் கனிந்துவிடும்.  

ஸ்வாயம்புமனு, வசிஷ்டர், கண்ணுவர், பராசரர், சம்வர்தர், யயாதி இப்படி புகழ்பெற்ற எல்லோரும் இந்த கவசத்தை உருப்போட்டவர்கள் தான். எல்லா ஜனங்களும் இந்த கவசத்தை உருப்போட்டு தேசத்தையே ஞானமயமாக்க அந்த சரஸ்வதி அருள் புரிய வேண்டும்.  

05 11 2014      82
மஹான்களால் ஏற்பட்ட க்ஷேத்‌திரங்களிலும் தீர்த்த்தங்களிலும் ஈஸ்வர சான்னித்தியம் அதிகமாக இருக்கும். அத்தகைய உத்தமமான க்ஷேத்‌திரம் திருவல்லிக்கேணி. இங்கே ஸாக்ஷாத் ஸ்ரீ கிருஷ்ண பகவான் எந்த நாளிலும் அழியாத தத்துவத்தை உபதேசிக்கும் மூர்த்தியாக இருக்கிறார். ஸ்ரீகிருஷ்ணனுக்கு வேணுகோபாலன், கோபாலகிருஷ்ணன், பாண்டுரங்கன் முதலிய அவஸரங்கள் உண்டு. அவையெல்லாம் அந்த ஸமயத்தில் இருந்தவர்களுக்கு மட்டும் பிரயோஜனமுடையவைகளாக இருந்தன. பார்த்தசாரதி அவஸரமானது. எந்த காலத்திலும், எந்த தேசத்திலும் உள்ளவர்கள் ஸம்ஸார துக்க நிவ்ருத்தியின் பொருட்டுத் தெரிந்து கொள்ளக் கூடிய கீதோபதேசம் செய்த அவஸரம். அந்த சாஸ்திரம் படித்தால் ஞான இன்பத்தை தரும். அதை உபதேசம் செய்த மூர்த்தி இந்த தேசத்தில் இருப்பதால் இது பெரிய ஞான பூமிகளில் முதல் பூமி. ஞானத்திற்க்கு உயர்வு தரும் க்ஷேத்திரம் இது.

06 11 2014      83
வாழ்க்கையிலே முன்னேற எத்தனையோ பேர் உதவி செய்யறா... அவாளுக்கு கிரஹங்களும் நிறைய உபசரணை பண்றா. ஊனமில்லாம படைச்சு, மூச்சு விடக் காற்றும், நித்திய கர்மாக்களுக்கு மழையும் தர பகவானை ரெண்டு நிமிஷம் உபசரிக்க நேரமில்லாம போயிடறது. சிரமம் வந்தா தான் பகவானை நினைக்கறத்துங்கறத்தை மாத்திக்கணும். "வீட்டிலே யாருமே இல்லை..பொழுது போகலை."ன்னு தவிக்கிற நேரங்களிலே பகவானண்டே உட்கார்ந்து காதுக்கு இனிமையா நாலு ஸ்லோகம், பாட்டு சொல்லுங்களேன். மனசு எத்தனை விச்ராந்தியாரதுன்னு புரியும்.  

தகப்பனாரை அன்பாய் ரட்சிக்கிறவன், வேளா வேளைக்கு அன்னமும், கட்டிக்க வஸ்திரமும் கொடுக்கிறது மட்டும் ரட்சணை இல்லை. அவர் வயசுக்கு மாறி அவருக்குப் பிடிச்ச பேச்சுகளை தினமும் அரை மணி சம்பாஷிக்கணும். அப்படிப்பட்டவனை பிரம்மா ஆசீர்வாதம் பண்றார். தாயார் குடி இருந்த கோவிலில்லையா? இது போல அன்பாய் இருக்கிறவனுக்கு அடுத்த பிறவியிலே பூமி சொந்தமாய் அனுபவிக்கும் போகம் கிடைக்கும். ஏன்னா பூமாதேவி அப்படி அனுக்ரஹம் பண்றா. குருவை மரியாதையா நடத்தறவனுக்கு, மத்தவாளுக்கு படிக்க ஒத்தாசை பண்றவாளுக்கு, அடுத்த பிறவியிலே படிப்பு ரொம்ப நன்றாக வரும். பிரஹஸ்பதி அப்படி வரம் கொடுத்திருக்கார். 

08 11 2014      84     
நியமம் அதாவது தனது என்ற விருப்பு, வெறுப்பு இல்லாமல் சாஸ்திரத்துக்குக் கட்டுப்படுவது முக்கியம். அதே போல் தைரியம் முக்கியம். ஒருவர் பரிகாசம் பண்ணுகிறார் என்று தர்மத்தை விடக்கூடாது. ராமனை சாட்சாத் லக்ஷ்மணனே பரிகசித்தான்; "அண்ணா! நீ தர்மம் தர்மம் என்று எதையோ கட்டிக்கொண்டு அழுவதால் தான் இத்தனை கஷ்டங்களும் வந்திருக்கின்றன. அதை விட்டுத் தள்ளு. தசரதன் மேல்  யுத்தம் செய்து ராஜ்யத்தை உனக்கு நான் ஸ்வீகரித்துத் தர அனுமதி தா!" என்று அன்பு மிகுதியினால் சொன்னான். ஆனால் ராமன், யார் எது சொன்னாலும் பொருட்படுத்தாமல் தர்மத்தையே காத்‌தான். கடைசியில் அது அவனைக் காத்‌தது. தர்மம் தலை காத்தது. ராவணனுக்கு பத்து தலைகள் இருந்தும் அதர்மத்தால் கடைசியில் அத்தனை தலைகளும் உருண்டு விழுந்தன. ஸ்ரீ ராமன் இன்றும் 'ராமோ விக்ரஹவான் தர்ம;' என்றபடி தர்மத்தில் தலை சிறந்து தர்ம ஸ்வரூபமாக அநுக்கிரஹம் செய்து வருகிறான். 

சாட்சாத் ஸ்ரீ ராமனே லட்சியமாகக் கொண்டு ராமா ராமா என்று மனசாரச் சொல்லிக்கொண்டே இருக்கிறவர்களுக்குச் சித்த மலங்கள் எல்லாம் விலகும். தர்மத்தை விட்டு எந்நாளும் விலகாமல் அவர்கள் ராமனைப் போல் ஆனந்தமாக வாழ்வார்கள்.

11 11 2014       85
லோகத்தை அனுசரிச்சு வாழ்ந்தாகணும். அப்போ நிறையக் கஷ்டம் ஏற்படலாம். அதுக்காக உணர்ச்சி வசப்பட்டா, சரீர சௌக்கியம் பாதிக்கும். 
நாம வேறே, கஷ்டம் வேறேன்னு நெனைச்சுக்கணும். அதே கஷ்டம் வேண்டப்பட்டவாளுக்கு வந்தா, என்ன புத்தி சொல்வோம்னு யோசிக்கணும். இது தான் 'தமோ' என்கிற தன்னடக்கம். புத்தி தெளிவா இருக்கும். கங்கையிலே எத்தனையோ பேர் குளிக்கறா, எத்தனையோ பிணங்கள் விழறது. ஆனாலும் தெளிஞ்சுடலையா? லோக வாழ்க்கையிலே தெளிவா இருக்கறது ரொம்ப முக்கியம்.

13 11 2014      86
ராமாயணம், மஹாபாரதம் இரண்டிலேயும் சகோதர பாசம் உண்டு. ராமர் மாதிரி லட்சுமணர் இல்லை. எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறார். இருக்கிற இடம் தெரியாமல் இருந்த சுமித்திரையின் பிள்ளையா என்று ஆச்சரியப்பட வைக்கிறார். இரட்டை பிள்ளைகளில் ஒருத்தர் அவரோடு பிறந்த சத்ருக்னர் நில் என்றால் நிற்கிறார். உட்காரச் சொன்னால் உட்காருகிறார். அதனால் தான் முந்தி பிறந்த மூன்று பேரையும் தாண்டி தகப்பனாருக்கும் 'கர்மா' செய்கிற பாக்கியம் கிடைச்சது. பொறுமைக்கு என்னிக்குமே பெருமை உண்டு.  

பாண்டவர்கள் அஞ்சு பேரும் ஒன்று போல் இல்லை. பலத்தாலே பீமசேனனும், வித்தையாலே விஜயனும் கியாதி பெற்றார்கள். நீதி, நியாயம், தர்மம் மூணையும் எடுத்துட்டா தருமபுத்திரரும் சாதாரணமானவர் தான். நச்சு பொய்கையிலே எல்லாரும் செத்துப் போயிட்டா. தருமர் அவசரப்படலே. தம்பிகள் செத்துடடாளேன்னு இடிஞ்சுபோய் உட்காரலே. பொறுமையா யட்சனுடைய எல்லா கேள்விக்கும் பதில் சொன்னார். கடைசியிலே யாராவது ஒருத்தரைப் பிழைக்க வைக்கறேன்னப்போ நகுலனைக் கேட்ட நேர்மை எல்லாருக்கும் உயிர் கொடுத்தது. 

16 11 2014      87
கையில் லாந்தருடன் போய்க் கொண்டிருந்த குருடன் ஒருவனை, எதிரில் வந்த ஒருவன், "உனக்குத்தான் கண் தெரியவில்லையே, லாந்தர் ஏன் எடுத்து வருகிறாய்?" என்று கேட்டானாம். அதற்கு குருடன், "எனக்குக் கண் இல்லாவிட்டாலும் உனக்கு கண் இருக்கிறது அல்லவா? அதற்குத் தான் எடுத்து வருகிறேன், இல்லாவிட்டால் இந்த இருட்டில் நீயே என்மேல் தடுக்கி விழுந்திருப்பாயே?" என்றானாம். அது போலவே பழைய சாஸ்திரங்கள் நமக்குப் புரியாவிட்டாலும், எதிர்காலத்தில் யாருக்காவது புரியலாம். பயனாகலாம் என்பதாலாவது அவற்றை நாம் ரட்சித்தாக வேண்டும். "வசதியே இல்லாத காலங்களில் யுகாந்தரமாக ரட்சிக்கப்பட்ட சாஸ்திரங்களை நமக்கு முன் தலைமுறையினர் எல்லா வசததியிருந்தும் காப்பாற்றாமல் அழித்து நம்மை வஞ்சித்து விட்டார்கள்" என்று வருங்கால தலைமுறையினர் நம்மைக் குற்றம் சாட்ட இடம் கொடுக்கக் கூடாது. 

19 11 2014      88
வாழ்நாள் முழுவதும் ஏதாவது ஒன்றில் நம் மனம் அழுத்தமாக ஆழமாக ஈடுபட்டிருந்தால் தான், அந்த விஷயமே பிராணன் போகிற ஸமயத்தில் கிளம்பி வந்து நம் மனம் முழுவதையும் வியாபித்துக் கொள்ளும். நாம் அதை நினைக்கிறோம் என்பதில்லை. அதுவே முட்டிக்கொண்டு வந்து தன்னை நினைக்கும்படியாகப் பண்ணும். இப்போதும், எப்போதும் - இது வரை செய்யாவிட்டாலும், இப்போதிருந்தாவது - நாம் செய்ய வேண்டியது பகவத் ஸ்மரணையை அழுத்தமாக, ஆழமாக ஏற்படுத்திக்கொள்வது தான். "ப்ராண பிரயாண ஸமயே கபவாதபித்தை - உயிரின் நெடும் பிரயாண சமயத்தில் கபவாதபித்தங்கள் கட்டி இழுக்கிற போது உன்னை எப்படி நினைப்பேனோ?" என்று குலசேகரர் போன்ற பெரியவர்களே பயப்படுகிறார்கள். பகவான் கீதையில், 'தஸ்மாத் ஸர்வேஷு காலேஷு மாம் அனுஸ்மர' - ஆனபடியால் என்னை சதா ஸர்வகாலமும் எப்போதும் நினைத்துக் கொண்டே இரு!' என்கிறார். அப்படி எப்போதும் நினைத்தால் தான் முடிவில் அந்த நினைவு வரும்.

22 11 2014      89
இன்றைக்கு கார்த்திகை அமாவாசை. ஸ்ரீதர ஐய்யாவாள் கங்காகர்ஷணம்
ஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வாக்கு 
துலா ஸ்நானத்தைப் பற்றி சொல்லும்போது:
துலா ஸ்நான பலன் முடவனுக்கும் ஒரு நாள் தள்ளியும் கிடைச்சது. நம்மோட நோக்கம் நல்லதா இருந்தா பிரயோஜனம் தன்னாலே கிடைக்கும். திருவிசை நல்லூர் ஐய்யாவாள் என்று ஒரு மஹான் இருந்தார். ஸ்ரீதர வெங்கடேசுவரர் என்கிறது அவர் பெயர். ஊரைச் சொன்னாலே பேர் தெரிகின்ற அளவுக்கு பிரசித்தி பெற்றார். முன்னூறு வருஷங்களுக்கு முன்னாலே இருந்தார். போதேந்திராளின் காலத்தவர். திருவிசநல்லூரில் மழை இல்லாத காலத்தில் இரண்டு பேருமா பஜனை பண்ணி மழை கொட்டித் தள்ளி இருக்கிறது.  
ஸ்ரீதர ஐய்யாவாள் திதி அன்றைக்கு பசி என்ற பஞ்சமனுக்கு சாப்பாடு போட்டார். அதனாலே அந்த ஊரிலே இருக்கிற வைதீகர்கள் கங்கா ஸ்நானம் பண்ணினா தான் தீட்டு போகும்னுட்டா. அன்னிக்கு கார்த்திகை அமாவாசை கிணற்றிலே கங்கை பொங்கி வந்துடுத்து. இன்னிக்கும் திருவிசநல்லூரிலே கார்த்திகை அமாவாசைக்கு ஆயிரக்கணக்கானோர் அந்த கிணற்றிலே நீராடறா. கங்கா ஸ்நானம் பண்ணினா பலன் கிடைக்கும் என்கிறது அவாளோட நம்பிக்கை.

26 11 2014      90
கார்த்திகைப் பண்டிகையன்று நிறைய அகல் ஏற்றி வைக்கிறோமல்லவா? இப்படி தீபத்தை ஏற்றும் போது ஒரு ஸ்லோகம் சொல்ல வேண்டும் என்று தர்ம சாஸ்த்திரத்தில் விதித்திருக்கிறது.
கீடா: பதங்கா: மசகாச்ச வ்ரூக்ஷா: ஜலே ஸ்தலே யே
நிவஸந்தி ஜீவா: த்ருஷ்ட்வா ப்ரதீபம் நச ஜன்ம பாஜா
பவந்தி நித்யம் ச்வபசா ஹிவிப்ரா:
'புழுக்களோ, பக்ஷிகளோ, அல்லது ஒரு கொசுவாகத்தான் இருக்கட்டும்; அந்த கொசுவோ, நம் மாதிரி உயிரில்லை என்று நினைக்கப்டுகிற விருக்ஷமோ, இன்னும் ஜலத்திலும், பூமியிலும் எத்தனை தினுசான ஜீவராசிகள் இருக்கின்றனவோ அவற்றில் எதுவானாலும் அதுவோ, மனுஷ்யர்களுக்குள்ளேயே சிறிதும் பேதம் இல்லாமல் எவனானாலும் சரி, எதுவானாலும் சரி, இந்த தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய ஸகல பாவங்களும் நிவ்ருத்தியாகி, இன்னொரு ஜன்மம் சேரட்டும்', என்று இந்த ஸ்லோகத்திற்கு அர்த்தம்.
இந்த கார்த்திகை தீபத்தை எந்தப் பிராணி பார்த்தாலும் அதற்கு நித்ய ச்ரேயஸ் உண்டாகட்டும் என்று சொல்லியிருக்கிறது.

(continued in Part X)

SREE MAHAPERIYALIN ARULVAKKU PART VIII

ஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வாக்கு பாகம் 8
(Continuation of Part 7)


01.10.2014  71
"வேதத்தை எப்படி நம்புவது? அதற்கு ஒரு யுக்தி சொல்லுங்கள்!" என்று கேட்பதே பொருத்தமில்லை. யுக்திக்கு எட்டாதத்தைச் சொல்லவே வேதம் இருக்கிறது. எதை ருசுவினால் நிரூபிக்க முடியாதோ, எங்கே புத்தி எட்டாதோ, அப்படிப்பட்ட பரம சத்தியங்களைத் திவ்விய திருஷ்டி உள்ள முனிவர்கள் அறிந்து வேதமாகத் தந்திருக்கிறார்கள். அந்நிய தேச விவகாரங்கள் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. அங்கிருந்து வருகிற பத்திரிகைகளில் இருந்து தெரிந்து கொள்கிறோம். லோகத்திலுள்ள கருவி எதனாலுமே தெரிந்து கொள்ள முடியாத விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்காக வேத மந்திரங்கள் என்ற பத்திரிகையை ரிஷிகள் தந்திருக்கிறார்கள்.

07 10 2014     72
ஸர்வே வேதா யத்பதம் ஆமநந்தி முதலிய சுருதிகளால் நாம் அறிவது என்னவென்றால், எல்லா வேதங்களும், யோகிகளும், ரிஷிகளும், மற்றுமுள்ள ஞானிகளும் ஒன்றையே அடைய விரும்புகிறார்கள். அந்த ஒன்று 'ஓம்' என்பது தான். ஓம் என்பதைப் பற்றி மாண்டூக்ய உபநிஷத்தில் விரிவாகவும் ஸ்பஷ்டமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
சாந்தம், சிவம், அத்வைதம், சதுர்த்தம், மன்யந்தே, ஸ ஆத்மா ஸ விஜ்ஞேய:
அதாவது, அந்த ப்ரஹ்மம், எல்லாம் ஒடுங்கினதும், சிவமென்று குறிக்க தகுந்தது, இரண்டட்றதும், விசுவ தைஜஸ ப்ராஜ்ஞனுக்கு மேலானதுமாக இருக்கின்றது.

வேதங்களுள் யஜுர் வேதம் முக்கியமானது. அதற்குள் அதன் மத்திய பாகமாகிற  நாலாவது காண்டம் முக்கியமானது. அதற்குள்ளும் மத்திய பாகமான நாலாவது பிரச்னம் முக்கியமானது. அதுதான் ஸ்ரீ ருத்ரம். அதற்குள்ளும் "நமச்சிவாய" என்ற பஞ்சாரக்ஷர வாக்கியம் மத்தியிலிருக்கின்றது. அதன் மத்தியில் "சிவ" என்ற இரண்டு அக்ஷரம் அடங்கியிருக்கிறது.   இதையே ஜீவரத்னம் என்று பெரியோர்கள் சொல்வார்கள். இந்த அபிப்பிராயத்தை அப்பைய தீக்ஷிதர் ப்ரஹ்ம தர்க்க ஸ்தவத்தில் சொல்லியிருக்கிறார். அந்த ப்ரஹ்மம் சிவ ஸ்வரூபம் என்று தெரிகிறது.
அப்படிப்பட்ட ஸ்வரூபத்தை ஆராதிப்பதற்கு அடையாளமாக சிவ பக்தர்களெல்லாம் ஐந்துவித காரியங்களைச் செய்து கொண்டிருக்க வேண்டும்.
1    விபூதி பூசிக்கொள்ளுதல்
2    ருத்ராக்ஷம் அணிதல் 
3    பஞ்சாக்ஷ்ர மந்திரத்தை ஜபம் செய்தால், பஞ்சாக்ஷ்ர மந்திரம் உபதேசம் ஆகாதவர்கள் 'சிவ' என்ற பதத்தை ஜபம் செய்தல்
4    பில்வதளத்தால் பரமேசுவரனைப் பூஜித்தல் 
5    ஹ்ருதயத்தில் சதா சிவத்யானம் செய்தல்

இவைகளில் ஒவ்வொன்றும் ஈஸ்வரனுக்கு விஷேஷ ப்ரீதியைக் கொடுக்கக்கூடியது.

10 10 2014      73
உமாதேவி நிறைந்த கருணை உள்ளவள். சிறந்த பிரகாசமுள்ளவள். அபாரசக்தி உள்ளவள். ஓம் என்பதே உமா என்றாயிற்று. அ, உ, மா என்ற மூன்றும் ஓம் என ஆயிற்று. வித்யுத் சக்தியில் நெகடிவ் பாசிடிவ் என்பன போலுள்ளது. கோடி சூரியப் பிரகாசமானது அம்பாளது சுவரூபம். ஆனால் தாபத்தை உண்டு பண்ணாது. கோடி சந்திரன் போல் இன்பம் தரும். சிவனுடன் சேர்ந்தே இருக்கிறது. அமிருதத்தில் ருசி. பாலில் வெண்மை. தீயில் பிரகாசம். சந்திரனில் நிலா. புஷ்பத்தில் வாசனை போல் சிவனிடம் ஸஹஜ சிந்தனையானவள். அன்னையை அர்ச்சித்து பேரின்பம் பெறுக.  

துணி அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. உடம்பு அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. வீடு அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. நம் மனம் அழுக்கு இல்லாமல் இருக்க வேண்டும். அதற்கு அம்பாளின் சரணாரவிந்தத் தியானம் தான் வழி.   

13 10 2014      74
உலகில் கஷ்டம் இல்லாதவன் எவனும் இல்லை. ஒவ்வொருவரும் கஷ்டம் நீங்கி, ஆனந்தமடைய வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். கஷ்டங்களுக்கு அடிப்படையான காரணத்தை கண்டுபிடுத்து அதைப் போக்க வேண்டும். எல்லா துக்கங்களுக்கும் உடல் தான் காரணம். இந்த உடல் ஏற்பட்டதும் பூர்வகர்ம பலன் தான். ஆகவே கர்ம பலனுக்கு அடிப்படைக் காரணத்தை ஒழிக்க வேண்டும்.  
          அதகேந  ப்ரயுக்தோயம்  பாபம் சரதி பூருஷ:,
          அநிச்சந்நபி வார்ஷ்ணேய பலாதிவ நியோஜித:

என்று அர்ஜுனன் பகவானைக் கேட்கிறான்.  
இஷ்டமில்லாதபோது கூட மனிதன் பாபச் செயலில் இழுக்கப்படுகிறானே; இது ஏன்? என்பது அர்ஜுனனின் கேள்வி.  
பகவான் இதற்கு பதில் சொல்கிறார். "காம ஏஷ: குரோத ஏஷ:" ஒன்றைப் பெறவேண்டும் என்ற ஆசையும், அதைப் பெறாத போது ஏற்படும் கோபமும்தான் காரணம் என்று. காமக் க்ரோதம் போக வேண்டுமென்றால், நம்மை விட்டு வேறான பொருள் ஒன்று இருக்கிறது என்ற நினைப்பு போய் எல்லாம் பரமாத்ம சுவரூபம் என்று மெய்யுணர்வு ஏற்படவேண்டும். உலகம் வெவ்வேறு விதமாகத் தோற்றம் அளித்தாலும் ஞானிக்கு எல்லாம் பரமாத்ம சுவரூபமாகவே விளங்கும்.

15 10 2014      75
வர வர வித்யையின் தரம் குறைந்து கொண்டு வருகிறது. மக்கள் எவ்வளவு படிப்பற்றவர்களாக இருக்கிறார்களோ அந்த நிலைக்கு குரு பீடங்களும் இறங்கிவிடுகின்றன. சிறந்த அறிவாளிகளாக சிஷ்யர்கள் கூட்டம் இருந்தால் அதற்கு தகுந்தாற்போல் குருவும் தம் நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் உண்டு. குரு பீடங்களிலுள்ள குருமார்கள் சிறந்தவர்களாக விளங்க வேண்டுமென்றால் அதன் பொறுப்பு சிஷ்யர்களதுதான். முற்காலத்தில் அரசர்கள் மஹாவித்துவான்களாக இருப்பார்கள். அவர்களுடைய சபையும் அறிவாளிகள் நிறைந்ததாக இருக்கும். வித்யை என்றால் ஆயுள் முழுவதும் ஞானம் விருத்தியாகக் கூடியதாக இருத்தல் வேண்டும். முன்காலப் படிப்புக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் கிடையாது. ஆத்ம ஞானத்தைக் கொடுக்கக்கூடிய படிப்புதான் ப்ரஹ்மவித்யை; எல்லாவற்றிலும் உயர்ந்த வித்யை; சத்ருவைக் கூட தெய்வமாக பாவிக்கும் நிலையை அளிக்கவல்ல வித்யை. அத்தகைய வித்யை அடைய முயல வேண்டும். 

17 10 2014      76
ஸ்திரீகளுக்குப் புத்திர சோகத்தைக் காட்டிலும் வேறு பெரிய சோகம் கிடையாது. என்றாலும் நரகாசுரன் மரணமடைந்த போது அவனது தாய் லோக முழுவதையும் ஏக சக்ராதிபதியாகப் பரிபாலனம் செய்த புத்திரன் போய் விட்டானே என்ற துக்கத்துக்கு இடம் தர வில்லை. "அவனுக்கு பகவானை நேரில் பார்க்கிற பாக்கியம் கிடைத்ததே" என்று மனதை ஆறுதல் செய்துகொண்டு, லோக க்ஷேமமாக அன்று பண்டிகை கொண்டாடவேண்டுமென்று பிரார்த்தனை செய்து கொண்டாள். 'என் பிள்ளை போனது இருக்கட்டும். எனக்கு பிள்ளை போன துக்கம் ஏற்பட்டாலும் லோகத்தில் இருப்பவர்களுக்கு ஒரு துக்கமும் ஏற்படக்கூடாது, ஆக இன்றைக்கு எல்லோரும் எண்ணை  தேய்த்துக்கொண்டு, புத்தாடை உடுத்திக்கொண்டு, நல்ல விருந்து உண்டு, சந்தோஷமாக இருக்க வேண்டும்' என்று பகவானிடம் வேண்டிக் கொண்டாள்.
நரகாசுரனுடைய தாய்க்குத்தான் தன்னுடைய புத்திர சோகத்திலும்கூட உலகம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற நினைப்பு வந்திருக்கிறது. அதனால் தான் தீபாவளிக்கு மற்ற எல்லா பண்டிகைகளையும்விட அதிகக் கியாதி.  

21 10 2014      77

அஸ்ஸாம் நாட்டில் பிராக் ஜோதிஷம் என்ற நகரத்தை தலைநகராகக் கொண்டு பூமாதேவியின் மகன் பௌமன் ஆண்டு வந்தான். அவனுக்குத் தான் நரகாசுரன் என்று பெயர். அவன் அனேக அக்கிரமங்கள் செய்து வந்தான். நிறைய தபஸ் பண்ணினவன் என்றாலும் தாமசமான வரங்களையே வாங்கிக் கொண்டதால் எல்லாரையும் ஹிம்சை செய்து உலகத்தை அடக்கி ஆண்டு வந்தான். ஸ்த்ரீகளுக்கும் சாதுக்களுக்கும் மிகுந்த கொடுமை செய்து வந்தான். அக்கினிக்கோட்டை, வாயுக்கோட்டை எல்லாம் கட்டிக்கொண்டு எதிரிகளிடமிருந்து தன்னை ஜாக்கிரதை செய்துகொண்டான். இருந்த போதிலும் கடைசியில் சுவாமியே கிருஷ்ண பரமாத்வாக அவதரித்தபோது அவனைச் சம்ஹாரம் பண்ணினார். அப்போது அவன் நல்ல புத்தி பெற்றதாக கூறுவதுண்டு. அவனது தாயார் அத்தினத்தை எல்லோரும் கொண்டாட வேண்டுமென்று பகவானிடம் பிரார்த்தித்ததாக சொல்வதுண்டு.
ரணகளத்தில் தத்துவமே பெரிதாக அர்ஜுனன் நினைத்தது போலவே, புத்திர சோகத்தினிடையே உலக ஷேமத்தை பூமாதேவி பெரிதாக நினைத்தது விஷேஷம். நாம் துன்பப்பட்டாலும் லோகம் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்ற மனப்பான்மையை வளர்த்துக்கொள்வது தான் தீபாவளி கொண்டாடுவதன் பயன். இந்த பண்டிகை விட்டுப்போகாமல், இது சம்பந்தப்பட்ட புராணக் கதையும் மறந்து போகாமல் இவ்வளவு காலம் இருந்து வருவது இதற்க்காகத் தான்.  

தீபாவளிப் பண்டிகை கொண்டாடி, பட்டாசு வெடித்து, விருந்துன்பதோடு நாம் நிற்கக் கூடாது. 'நம்மைக் காட்டிலும் லோக ஷேமம் தான் பெரிது' என்ற ஞானத்தை இன்று பெற வேண்டும்.   

23 10 2014      78
இதோ, எனக்கு முன்னால் வாழைப்பழச் சீப்பு வைத்திருக்கிறது. "இதைப் பார். இது மஞ்சளாக இருக்கிறது" என்று சொன்னால் இது மஞ்சளாகத்தான் இருக்கிறது என்று காண்கிறீர்கள். அதற்கு மேல் மனசில் அதைப்பற்றி எந்தப் பிரதி சிந்தனையும் (reaction) எழுவதில்லை. மாறாக, இதே வாழைப்பழத்தைக் காட்டி, "இதோ பார், இது சிவப்பாக இருக்கிறது" என்று நான் சொல்லி இருந்தால்?.. உடனே உங்கள் மனத்தில் ஒரு ஆட்சேப உணர்ச்சி எழுந்திருக்கும். இது மஞ்சள் என்றோ, சிவப்பு என்றோ நான் சொல்லாமல், "இந்த வாழைப்பழம் சிவப்பாக இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்" என்று சொன்னால் அப்போது உங்கள் மனசில் ஒரு விதமான பிரதி உணர்ச்சி உண்டாகிறது. மஞ்சள் பழத்தையே சிவப்பாக இருப்பது போல் உங்கள் மனசினால் கற்பனை செய்து பார்க்கிறீர்கள். மனசை ஒரு முகப்படுத்தினால் அப்படிப் பாவிக்கவும் முடிகிறது.  

உபாசனை என்பது இப்படிப்பட்டதுதான். பரம்பொருள் இப்படி இப்படி இருப்பதாகப் பாவியுங்கள் என்று பலவிதமான குணங்களைக் கொண்ட பல மூர்த்திகளை காட்டிக் கொடுக்கிறது உபாசனா மார்க்கம். வாழைப்பழம் உண்மையிலேயே மஞ்சள் நிறம் என்பது போல் பரமாத்மாவின் உண்மை குணம் என்ன? அது குணம் கடந்தது என்பதே.  

25 10 2014     79
ஆரம்பத்தில் நமக்குப் பலவித மனோ விகாரங்கள் இருக்கும் போது, 'பரமாத்மா எல்லாம் கடந்தவர்' என்றால் அதில் பிடிப்பு கொள்ள முடியவில்லை. பிறகு ரூபத்தில், குணத்தில் அவரை உபாசித்து, அது முற்றிய நிலையில், எல்லாவற்றுக்கும் அதீதமாக பரமாத்மாவை அப்படியே அனுபவிக்க முடிகிறது. மஞ்சள் பழத்தை மஞ்சளாகவே பார்க்கிறபோது மேற்கொண்ட மனசுக்கு வேலை இல்லாதது போல், பரமாத்மாவைப் பரமாத்மாவாகவே பார்க்கிற போதும், மனசுக்கு வேலை இல்லாமல் போகிறது. உபாசனையின் போது "பரமாத்மாவை இப்படி இப்படி பாவனை செய்தால் அதற்கு இன்னின்ன மந்திரம் ஜபிக்க வேண்டும். இன்னின்ன ஆசாரம் வேண்டும்; இன்னின்ன பூஜா பத்ததி வேண்டும்" என்று விதிகள் இருக்கின்றன. பாவனை போய், அவரை உள்ளவாறு அறிகிற போது எந்த விதியும் இல்லை. செயலும் இல்லை. காரியமாகிற உபாசனை, இப்போது தான் அனுபவமாகிற ஞானம் என்பதாகப் பழுத்து விடுகிறது.  

இந்த ஞானம் நமக்கு ஆரம்பத்திலேயே வந்துவிட்டதாகப் பாவனை செய்துவிடக்கூடாது. உபாசனையே பெரும்பாலான ஜனங்களுக்கு ஞானம் பெற உபாயமாகும். திவ்ய மூர்த்திகள் நாமாகச் செய்கிற பாவனை மட்டுமல்ல. பரமாத்மாவே மகான்களுக்கும் ரிஷிகளுக்கும் இந்த ரூபங்கள் மந்திரங்கள் விதிகள் எல்லாவற்றையும் அநுக்கிரகித்திருக்கிறார். அவற்றை சிரத்தையுடன் பின்பற்றினால் ஞானத்துக்கு வழி உண்டாகும்.

27 10 2014      80
விக்ரஹங்களுக்குக் கோவிலில் விஷேஷம் எதனால் ஏற்பட்டதென்றால் மஹரிஷிகள் அவர்களுடைய தவத்தை அங்கு அமர்த்தியிருக்கிறார்கள். படம் பூஜைக்காக அல்ல. அதிலிருக்கும் மூர்த்தியை தியானிப்பதற்காகவே. சூரியனிடமும் அக்னியினிடமும் எது போனாலும் எரிந்து போகும். அப்பேற்பட்ட இடத்திலேயே பகவானை ஆராதிக்கிறோம். சூரியனிடத்தில் நமஸ்காரத்தினாலும், சந்தியோபாசனையினாலும், அக்னியினிடத்தில் ஹோமம் முதலியவைகளாலும், க்ஷேத்‌திரங்களில் சென்று தரிசனம் செய்வதன் மூலமாகவும், பஜனை மடம் முதலிய இடங்களில் கருணாமூர்த்தியான ஈஸ்வரனை மனத்தில் தியானிப்பதினாலும் மனத்திலுள்ள அழுக்கு போகும். வீட்டில் செய்வதைவிட க்ஷேத்திரங்களில் செய்வது விக்ஷேஷம்.
(continued in Part IX)