ஸ்ரீமஹாபெரியவாளின் அருள்வாக்கு (கூடுதல்) Part V
இந்த தலைப்பில் Part I, II, III
and IV முன்பே பதிவு செய்திருந்தேன். இது 5வது பாகமாகும்
Sree Mahaperiyavalin Arulvakku Additional Part V
From 25 03 2020
Dates given on top of each one is the date on which they
were posted in FB and Sage of Kanchi group of FB.
1 25 03 2020
பஞ்ச வேள்வி
பஞ்சவேள்விங்கறேளே! அது என்னன்னு ஒருத்தர் கேட்டார். பிரம்ம வேள்வி,
தேவவேள்வி, பூதவேள்வி, பித்ருவேள்வி, மனுஷ வேள்வின்னேன். அவருக்கு புரியலை. திருப்பிக் கேட்க தயக்கம். நானே விளக்கினேன். வேதம் சொல்றது அல்லது பணம் கொடுத்தாவது வேதத்தை
சொல்ல வைக்கிறது, வேதத்தை
சொல்லிக் கொடுக்கிறது இதெல்லாம் பிரம்ம யாகம்.
பிரம்மாவைத் திருப்தி பண்ணும்.
அகால ம்ருத்யு சம்பவிக்காது. சந்ததிகளுக்கு
ஆயுசு கூடும். இதை நாம பண்ணறோங்கற அகம்பாவம் துளிகூட கலந்துடக் கூடாது.
நவக்கிரஹ ஹோமம், சுதர்சன ஹோமம் இந்த மாதிரி ஹோமம் பண்றது,
தேவர்களுக்கு அவிர்பாகம் கொடுக்கறது தேவ வேள்வி. பண்ணி வைக்கிற ரித்விக்குகள்
கிட்டே கோபப்படக்கூடாது. துச்சமாக
நடத்தப்படாது.
காக்காய்க்கு சாதம் போடறது, பசுவுக்கு அகத்திக்கீரை கொடுக்கறது, மீனுக்கு
பொரி போடறது, நாய், பூனைகளை சம்ரக்ஷிக்கிறது இதெல்லாம் பூத வேள்விங்கறது புராணம்.
திதி கொடுக்கறது, அமாவாசை தர்ப்பணம், மஹாளயம் பண்றது இதெல்லாம் பிதுர்
வேள்வி. பிதுர்க்கள் ஆசீர்வாதம்
கிடைக்கும். துக்கம் சம்பவிக்காது.
அதிதிகளை முகம் கோணாமல் உபசரிக்கிறது மனுஷ வேள்வி. பிறர் மனது புண்படாமல் பேசறது, பொறாமைப்படாம
இருக்கறது, நம்மாலே முடிஞ்ச உபகாரத்தைப் பண்றது இதெல்லாம் கூட இதிலே அடங்கும்.
யாகங்களாலே பூமி திருப்தியடையறது.
நெருப்பு பிடிக்கறதில்லே. அக்னியோட
பசிக்கு நெய்யும், அன்னமும் கிடைக்கிறதே.
யாகத்தீயாலேயும், வேத கோஷத்தாலேயும் காற்று தூய்மையாயிடறது. பிதுர்களுக்காக கால் அலம்பறது, குளிக்க
வைக்கிறது, தர்ப்பணம் பண்றது, ஹவிஸ் தயாரிக்கிறது இப்படி தண்ணீர் பிரயோஜனப்படற
போதெல்லாம் வருணன் பெருமைப்பட்டு ஆசீர்வாதம் பண்றான். மந்திர ஒலிகளாலேயும்,
புகையாலேயும் ஆகாயத்தைத் திருப்திப்படுத்தறோம். இப்படியாக பஞ்சபூதங்களோட
அனுக்கிரகமும் நமக்குக் கிடைக்கிறது.
02 04 2020 2
ஶ்ரீராமபிரான்
வெய்யிலிலே பித்தம் தலைக்கேறாம இருக்க சுக்கு. அதோட காரம் தெரியாம
இருக்க வெல்லம். இதுதான் பானகத்தோட
ரகசியம். நீர்மோர் குடலுக்கு குளிர்ச்சி. தாகம் அடங்கும். கொழுப்பு ஏறாது. காட்டிலே அலைகிற ராமனுக்கு பானகமும் நீர்
மோரும் ஆச்சு.
ராமர் சிறுவனாக ஒரே ஒரு குறும்புதான் செய்தார். காய வைத்த களிமண் உருண்டையை வில்லிலே அடிச்சா ‘ணங்’குனு
தாக்கும். கைகேயி அம்மாவோட கூடவந்த மந்தரை
முதுகிலே சதை துருத்திண்டு நிற்கும்.
அதைக் குறிதவறாமல் அடிக்கறதிலே குழந்தை ராமனுக்கு குஷி. ராவண சம்ஹாரத்தின் விதை அங்கே தான் விழறது.
தசரதர் காலமாயாச்சு. சீதையை ராவணன்
தூக்கிண்டு போயாச்சு. அயோத்திக்கு செய்தி
அனுப்பினால் பரதன் படையோடு வரமாட்டானா?
வாலிகிட்டே, நாலு சமுத்திரமும் போனியே, ராவணன் இந்த மாதிரி செய்தான்னு
சொன்னா போறதா? வாலியைப் பார்த்ததுமே ராவணன்
சீதையை விட்டுவிடுவானே! ராமவதாரம் பூபாரம் குறைக்க ராவணாதிகளை சம்ஹாரம்
பண்ண நடந்தது. தன்னோட பலத்திலே பாதி
போய்விடுமேன்னு மறைந்து நின்று அம்புவிட்டு வாலியை கொன்றார். அதோட வாலி, சுக்ரீவன் மனைவியை
அபகரிச்சுண்டவன். சுக்கீரிவனைப் பேசவே
விடாம அடிச்சுத் துரத்தினவன் வாலி. தப்பே
செய்திருந்தாலும் எதிராளியின் நியாயத்தையும் கேட்கணும். இப்படி வாலிப் பக்கம் நிறைய ஓட்டைகள். தாரை வாலியைத் தடுத்த போது, ராமன் உன் தம்பியோட
சேர்திருக்கான்னு சொல்றா. தம்பிக்காக ராஜ்யத்தை விட்டுக் கொடுத்ததால், ராமன்
அண்ணன் தம்பியை பிரிக்கமாட்டான் என்கிறான் வாலி.
ராமர் பெருமையை வாலி மாதிரி ராவணனும் சொல்றான். ராமன் மாதிரி வேஷம் போட்டு சீதையை ஏமாத்தலாம்
என்று மந்திரி யோஜனை சொல்கிறபோது ராமன் மாதிரி வேஷம் போட்டால் நல்ல நல்ல
எண்ணங்களோட சாதுவாகிவிடுகிறேனே என்கின்றான் லங்காதிபதி. ராமர் மாதிரி போடற வேஷத்துக்கே அத்தனை மகிமை.
-
Selected portions From the book Sree
Paramacharyar Pathaiyile by Smt. R Ponnammal, Chapter Sri Ramabiran.
09 04 2020 3
ஜலத்திலே வாழ்கிற ஜன்மங்கள், மண்ணிலே ஊருகிற ஆத்மாக்கள், மரம், செடி,
கொடிகள், புல்பூண்டுகள், விஷச்செடிகள், மருந்து செடிகள் என்று பல ஜன்மாக்கள்
கிடைக்கிறது. எதுக்குப் பின்னாலே எதுங்கற
நிர்ணயமெல்லாம் கிடையாது. வாழுகிறப்போ
செய்கிற பாப புண்ணியத்துக்குத் தகுந்தாற் போல பிறப்பு அமைகிறது. வில்வமா, துளசியா, மருந்துச்செடியாக,
அருகம்புல்லாக பிறக்க நிறைய புண்ணியம் பண்ணனும்.
நளகூபரர்கள் குபேரனுடைய பிள்ளைகள்.
மருத மரமாக யசோதையோட வீட்டுத் தோட்டத்திலே இருந்தா. கிருஷ்ணர் கால்பட்டு சாப விமோசனம்
கிடைச்சது. பழ மரங்களாக, அரசமரமாகப் பொறக்க
நிறைய தான தருமம் பண்ணணும். நல்ல
குடும்பத்திலே பொறந்தா மட்டும் போறாது.
நல்லவிதமாக யோசிக்கணும். பொய்
சொல்லாமல், திருடாமல், பிறத்தியார் பொருளுக்கு ஆசைப்படாமல் வாழணும். பணத்தை அடுக்கி அழகு பார்த்தால் பெருமை
இல்லே. மத்தவாளுக்கு பூவானாலும்,
பழமானாலும் உபயோகப்பட்டால் தானே பெருமை.
குளத்திலே மீனாப் பொறந்தாலும் அழுக்கைத் தின்னு குளத்தை
சுத்தப்படுத்தணும். அது தான் ஜன்ம
சாபல்யம்.
16 04 2020 4
அம்பிகையை “வைபாதிக ஸோண வாரிஜ ப்ரபாஸத்ருஷச்சவி பாணிபல்லவே” என்கிறார்
பிரம்மா. இந்த ஸ்லோகம் பத்ம புராணத்திலே
கஜாரண்ய மகாத்மியத்தில் 8-ஆவது அத்தியாயத்திலே இருக்கு. விடியற்காலையில் மலர்ந்த செந்தாமரையோட பிரகாசத்துக்கு
ஒப்பான ஒளியுடைய கைகளாகிய தளிர்களை உடையவளே என்று ஸ்தோத்திரம் பண்ணுகிறார். மரத்தோட தளிர் கை விரல்கள். கைகள் கிளைகள். அவளோட ரோமாஞ்சனம் துளிர்கள். இப்படி எல்லாம் வர்ணித்துவிட்டு பிரம்மா
கேட்கிறார், சந்திரசேகரரை விட்டுவிட்டு இங்கே எதுக்காக வந்தீர்கள் என்று.
“பஞ்சாசத்கோடி விஸ்தீரணமுள்ள இந்த பூமியிலே நடுவிலே இருக்கிறது இந்த
திருவானைக்கா. இது ஞான க்ஷேத்திரம்.
அதனாலே இங்கே வந்தேன்” என்றாள் அம்பாள். அதோட ஒரு விஷயம் தெரியுமா? சோணாக்ஷசோழன், சேரராஜா, பாண்டிய ராஜா, விக்ரம
ராஜா இந்த நாலு பேரும் மதில் சுவர், கோபுரங்கள், மண்டபங்கள், கர்ப்பக்கிரகங்கள்,
ஒன்பது தீர்த்தங்கள் எல்லாவற்றையும் அமைத்தார்கள். விபூதிப்ராகாரத்தை மட்டும் ஜம்புகேஸ்வரர், அவரே
கட்டி கொள்வதாகச் சொல்லிவிட்டார். அதைக்
கட்டியவர்களுக்கு விபூதிப் பைகள் கூலியாக் கொடுத்தார். சுவாமி முன்னாலே பிரிச்சுப் பார்த்தா மரியாதை
குறைச்சல்னு கடைவீதிக்குப் போய் சுருக்குப் பையை அவிழ்த்துப் பார்த்தா, வேலைக்கு
தக்க மாதிரி கூலிப்பணம் அதிலேயிருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டு போனார்கள். இந்த
விபூதிப் பிரகாரத்திலே நமஸ்காரம் பண்ணினா கோடி அஸ்வமேதயாகம் பண்ணின புண்யம்
கிடைக்குமென்று ஈஸ்வரன் சொன்னதாக அம்பாள் சொல்லி இருக்கிறாள்.
வேதவித்துக்களுக்கு இங்கே நெய் அன்னத்தை தானமாகக் கொடுத்தால்
கைலாசவாசம் நிச்சயம். ஆயிரம் ஜென்மங்களில்
புண்ணியம் சேர்ந்தால் தான் இங்கே பிரதட்சணம் பண்ற பாக்கியம் கிடைக்கும்.
30 04 2020 5
மகிக்ஷாசுரனை சம்ஹாரம் பண்ணினப்போ அவனோட அறுபட்ட கழுத்திலே ஒரு
சிவலிங்கம் இருந்தது. அதை துர்க்காதேவி
காமாட்சி அம்மன் கிட்டே கொடுத்தா. ஆனால்
அது பார்வதி கையிலேயே ஒட்டிக்கொண்டது.
கௌதம ரிஷி பக்கத்திலே இருந்தார்.
“ஏன் இப்படியாச்சன்னு” கேட்டாள் அம்பிகை.
அதற்கு அவர், மன்னத ரிஷி கையிலே சிவலிங்கத்தோடு தான் தவம் பண்ணுவார்,
மகிக்ஷாசுரன் அவரை லிங்கத்தோட கபளம் பண்ணிட்டான் என்றார். லிங்கம் கழுத்திலே இருக்கும்போது அழிச்சதாலே
கையிலே ஒட்டிக்கொண்டுவிட்டது என்றார்.
சரி, இதை எங்கே எப்படி ஸ்தாபிக்கிறது என்று அம்பிகை கேட்டாள். நவதீர்த்தங்களிலே நீராடினால் இந்த லிங்கம்
விடுபடும். விடுபட்ட இடத்திலே ஸ்தாபிதம்
பண்ணலாம் என்றார் முனிவர். அம்பாள்
நினைத்த மாத்திரத்திலே நவதீர்த்தங்களும் வந்தது.
கத்தியாலே பூமியை கீறினா. கட்கம்
என்றால் வாள். அந்த தீர்த்தம் கட்கதீர்த்தமாச்சு. அதிலே நீராடினாள் தேவி. லிங்கத்தை கரையிலே பிரதிஷ்டை பண்ணி
பூஜிச்சா. அந்த சுவாமி பேர் பாபவிநாசக
லிங்கம். எல்லாம் லோகத்திற்காக. அம்பாளுக்கு தெரியாமல் கௌதமரைக் கேட்டாளா? அகலிகை புருஷனுக்கு மகத்துவம் சேர்த்தா! கௌதமர் அம்பிகையை பூஜை செய்யாத நாள் ஏது?
07 05 2020 6
‘ஹ்ரீங்கார ப்ரணவாத்மிகாம்’ என்று உருகுகிறார் ஆதிகுரு. ஹ்ரீம் வடிவமாய் இருப்பவள், ஓங்கார ரூபமாகவும்
இருக்கிறாள் என்கிறார். சாதகப் பறவைக்கு
கழுத்திலே தான் துவாரம் இருக்கும்.
அதனாலே மழைக்காக ஆகாயத்தையே பார்த்துண்டிருக்குமாம்! மழை பெய்யும் போது கழுத்தைச் சாய்த்து
மழைத்துளியைப் பருகி பசியைத் தீர்த்துக்குமாம்.
கனகதாரா ஸ்தவத்திலே 9 வது ஸ்லோகத்திலே ‘நான் சாதகப் பறவைக்
குஞ்சம்மா, நீ தான் கனகமழை பொழியணும்’ என்கிறார். இப்படி மனம் உருகிப் பிரார்த்தித்தால், ஏன்
பொன் மழை பொழியாது? “காநித்ரி பஞ்சாக்ஷரி”
என்கிறது ஸ்ரீஅம்பா பஞ்சரத்னம். தேவியின்
மூலமந்த்ரம் பதினைந்து எழுத்துக்களால் அமைந்த பஞ்ச தசாக்ஷரி. ஒரு எழுத்துக்கு இருபது நாமாவளி, பதினைந்து
எழுத்துக்களுக்குமாக முன்னூறு நாமாவளி கொண்டது தான் லலிதா த்ரிசதி.
‘ஹ்ரீங்கார க்ஷர மந்த்ரமய’ என்கிறார் ஆச்சார்யாள். ஹ்ரீம் என்கிற மந்திர எழுத்தின் நடுவிலே அவள்
பிரகாசிக்கிறாளாம். பிரச்னைகளின் நடுவிலே
தவிக்கிற நமக்கெல்லாம் அம்பாளை அடையாளம் காட்டுகிறார்.
14 05 2020 7
அருணன்னு ஒரு ராஜா. அவரோட
பிள்ளை சத்யவிரதன். அவன் ஒரு
கல்யாணத்துக்கு போனான். கல்யாணப் பெண்
மிக அழகாயிருந்தா. அவளைக்கண்டு
ஆசைப்பட்டு தூக்கிண்டு ஓடிட்டான். கலியாண
வீட்டுக்காரா ராஜக்கிட்டே போய் அழுதா.
ராஜகுமாரன் தப்பு பண்ணினத சொல்லி புலம்பினா. ராஜா மகனைத்திட்டி, தேசப்பிரஷ்டமும்
பண்ணிட்டார். குலகுரு வசிஷ்டர், பாவத்துக்கு
பரிகாரம் பண்ணி, மன்னிச்சுடலாம்னு சொல்லலையேன்னு சத்தியவிரதனுக்கு கோபம்.
வம்சத்துக்கு வேறே வாரிசு வேணுமே!
மந்திரிகிட்டே ராஜ்யத்தை ஒப்படைச்சுட்டு ராஜா தபஸ் பண்ண போயிட்டார். ராஜ்யத்திலே பண்ணிரண்டு வருஷங்கள் மழையில்லாம ஜனங்கள்
தவிச்சுப் போயிட்டா. பிள்ளையை
விரட்டிட்டா, சின்ன வயசிலேயிருந்து கண்டிச்சு வளக்காதது தகப்பனார் குற்றம்.
அப்போதுதான் விசுவாமித்திரரும் கௌசிகி நதிக்கரையிலே தவம்
பண்ணிண்டிருந்தார். சில கெட்ட செயல்லே
ஈடுபடுபவாளிடமும் சில நல்ல குணமிருக்கும்.
சத்தியவிரதனிடத்திலே இரக்க குணம் இருந்தது. அவன் விசுவாமித்திரர் குடும்பத்தை உணவு
கொடுத்து காப்பாத்திண்டிருந்தான். தவம்
செய்து கொண்டிருந்த ராஜா அருணனுக்கு மூப்பின் காரணமாகவும், ராஜா இல்லாமல் நாடு
இருக்கக்கூடாதுனும் சத்தியவிரதனைக் கூட்டுண்டுவந்து பட்டம் சூட்டினா. அவனோட பிள்ளைதான் அரிச்சந்திரன்.
பஞ்சம் வந்த காலத்துல குடும்பத்தை போஷிச்ச சத்தியவிரதன், உடம்போட
சொர்க்கம் போகணுங்கிற ஆசையை விசுவாமித்திரர் நிறைவேற்றிவச்சார்.
8 21 05
2020
சத்திய காம ஜாபாலர்னு ஒரு ரிக்ஷி.
மகாயோகி. தர்மம் நூலளவுகூடப்
பிசகாதவர். அவருக்கு ஏராளமான
சிஷ்யர்கள். அதுலே உபகோசலன்னு
ஒருவன். ரொம்ப பொறுமைசாலி. படிப்பு முடிஞ்சதுன்னு குரு நினைச்சா
சமாவர்த்தன விழா நடக்கும். குருகிட்ட
ஆசீர்வாதம் வாங்கிண்டு சிஷ்யாள்ளாம் புறப்படுவா.
விழா அன்னிக்கு உபகோசலனைக் கூப்பிட்டு ஐந்து அக்னி குண்டங்களும் அணையாம
மந்திரம் சொல்லு, சமித்தை மாறி மாறி போட்டிண்டு இருன்னு சொல்லிட்டுப் போயிட்டார்
குரு. அவனும் குரு வாக்குப்படியே
நடந்துண்டான். குரு தீர்த்த யாத்திரை
போயிட்டார். குரு பத்தினி தாயாராட்டமா,
“குருநாதர் இப்படி நடந்துண்டதுக்கு ஏதாவது காரணமிருக்கும்”னு ஆறுதல் சொன்னா. ஒரு நாளைக்கு உபகோசலன் அக்னி குண்டங்களுக்கு
நடுவிலே படுத்து தூங்கிட்டான். கடமையைத்
தவறாம செஞ்சுண்டு வந்த உபகோசலனை அக்னி தேவதைகள் எழுப்பினா. ஒவ்வொரு அக்னி குண்டத்திலேயிருந்து
ஒவ்வொருத்தர் பிரம்ம ஞானத்தை உபதேசம் பண்ணினா.
“பிரம்ம வித்தையை ஜாபாலர் மூலமாகத்தான் கத்துக்கணும்....”னு சொல்லி மறைஞ்சு
போயிட்டா. உபகோசலனுக்கு சந்தோஷம் தாங்கலே,
குரு மாதா கிட்டே போய் சொன்னான். குருமாதா
பூரிச்சுப் போய் ஆசீர்வாதம் பண்ணினா.
ஜாபாலரும் தீர்த்த யாத்திரை முடிந்து திரும்பி வந்தார். விஷயத்தை கேட்ட உடனே “இதற்காகத்தான் நான்
சென்றேன். எனக்கு அக்னி தேவதைகள் தான்
உபதேசம் பண்ணினா. பொறுமையும் அடக்கமும்
நிறைந்த உனக்கும் அவாளே உபதேசம் பண்ணினதுலே சந்தோஷம்”னு சொல்லி பிரம்மவித்தையைச்
சொல்லிக் கொடுத்தார். அவனுக்குத் தனியா
சமாவர்த்தன விழா நடத்தி ஆசீர்வாதம் பண்ணி அனுப்பிச்சு வைச்சார்.
நான், எனக்கு, என்னுடையது என்பதை விட்டு விட்டோமானால் வாழ்க்கை
சுலபமாய் இருக்கும்.
9 28 05
2020
துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதின்னு மூணுமே அவள்தான். காய்கறி நறுக்கறச்சே கையிலே கத்தியை
வைச்சிண்டிருக்கிற தாயார், பள்ளிக்கூட கட்டணம் கட்டறச்சே பணத்தை
வச்சிண்டிருக்கா. சாயங்காலம்
வீட்டுப்பாடம் சொல்லித்தரச்சே அவ கையிலே புத்தகம் இருக்கு. மூணும் தாயார் தான். பணம் போகியாக்கி ரோகத்திலே தள்ளிவிடும். கல்விதான் மனுஷாளோட கடிவாளம். மூணும் இணைஞ்சா வாழ்க்கை வெற்றியடைஞ்சுடும்னு
உணர்த்தத்தான் நவராத்திரியிலே கடைசியில் விஜயதசமி வரது. புஸ்தகத்துக்கு போடற பூஜைன்னு சரஸ்வதி பூஜையை
பல பேர் நினைச்சிண்டிருக்கா. அப்படி
இல்லே. ஒரு நாளாவது படிச்சதை யோசிச்சு
நல்லவழிலே செலவழி. படிப்பைக் கொடுத்த
பகவதியை மறக்காதே! படிப்புக்கு ஏது
முடிவு. பகவான் கொடுத்த ஆயுள்வரை
படிக்கலாம். பெரிய பெரிய மகானெல்லாம்
இந்த பிறவிலே படிச்சது, எழுதினது போறலியே.... அடுத்த பிறவியைத் தா’ன்னு
பிரார்த்திச்சிண்டிருக்கா.
10 04 06 2020
அபம்ருத்யு
கர்மாவுக்கு தகுந்தாப் போல காரியம் நடத்தறவர் பகவான். வேணுங்கறவா, வேண்டாத எல்லாம் கிடையாது. ஹேஹேய ராஜகுமாரன் ஒருத்தன் வேட்டையாடற போது,
மான் தோலைப் போர்த்துக் கொண்டிருந்த ஒரு ரிஷி மேலே மான்னு நினைத்து அம்பு
விட்டுட்டான். ஹான்னு சத்தம் கேட்டு போய்
பார்த்த ராஜகுமாரன் முனிவர் உயிர் பிரிந்திருந்ததைத்ப் பார்த்து அழுதான். கூடவந்திருந்தவ சமாதனப்படுத்தி, முனிவர்
யாருன்னு தெரிஞ்சுக்க காடெல்லாம் அலைஞ்சா.
கச்யப முனிவருடைய குமாரரான அரிஷ்டநேமியோட ஆசிரமத்தை அடைந்து, இறந்த முனிவர்
யாருன்னு கேட்டா. பார்க்கலாம் வாங்கோன்னு,
அவாளோட போனார் அரிஷ்டநேமி. அங்கே ரிஷியோட
தேகத்தை காணலை. புலியோ, சிங்கமோ
இழுத்துண்டுன்னு போன பாவமும் சேர்துடுத்தேன்னு வருத்தப்பட்டா. அப்போ கொல்லப்பட்டதா சொன்ன ரிஷி அங்கே வரவும்,
எல்லாரும் ஆச்சரியப்பட்டா. இவன் என்
பிள்ளைதான்னார் அரிஷ்டநேமி. இவனுக்கு
அபம்ருத்யு வராது. ஏன்னா நாங்க சுத்தமான ஆகாரத்தை சாப்பிடறோம். சுத்தம்னா, நாக்குக்கு ருசி முக்கியமில்லாத,
உப்பு, புளி, காரம் குறைந்த, சத்வகுணம் நிறைந்த காய்கனிகள். கிழங்குகளை தள்ளிடறோம். வயிற்று சுத்தத்திற்காக கசப்பும், துவர்ப்பும்
அதிகமாக்கிக்கிறோம். மன சுத்தத்திற்காக
பொறாமை, அகங்காரம், துக்கம், கவலை இல்லாம ஈசுவர பக்தியால அதைத் துடைச்சு
வைச்சுக்கறோம். பூச்சி பொட்டு அண்டாம,
ஆசிரமத்தை தினமும் பசுஞ்சாணியாலே மெழுகிடறோம்.
புதுப் பூக்களாலே தினமும் சுவாமியை பூஜை பண்ணுகிறதாலே மனசுக்கு அமைதியும், இடத்திலே
தூய்மையும் ஏற்படறது. சோம்பேரித்தனம்
போய், புத்தி சுறுசுறுப்பாக மத்த ரிஷிகளைத் தேடிண்டுபோய், வேதாந்த விசாரணை
பண்ணுவோம். அவா திறமையை மனசுவிட்டுப்
பாராட்டறோம். அதிகாலை எழுந்து,
காலைக்கடன்கள் கழித்து தூய்மையான நீரில் நீராடுகிறோம். மூன்று நேரமும் காயத்ரி ஜபிக்கிறோம். பெற்றவர்கள், பெரியோர்கள், குலகுரு இவர்களை
தினமும் நமஸ்கரித்து ஆசி பெறுகிறோம். மனதாலும் பிரம்மச்சரியத்தை
அனுஷ்டிக்கிறோம். யார் ஹோமம், யாகம்,
பூஜை செய்தாலும் இயன்ற அளவு உதவுகிறோம்.
சத்திய தர்மத்தை அனுஷ்டிக்கிறோம்.
இந்த வழியேவரும் அதிதிகளை முடிந்த அளவு உபசரிக்கிறோம். எங்களுக்கு பொய் பேச தெரியாது. விரதங்களை ஒழுங்காகக் கடைப்பிடிக்கிறோம். பசுக்களை போஷிக்கிறோம். அதனாலே ம்ருத்யுவோட அதிகாரம் இங்கே
செல்லாது. கருநாகம் கடிச்சாலும் மூன்றே
முக்கால் நாழிகை மயங்கி இருப்போம். அதிகாலையிலே
ஸ்மரித்த கருட மந்திரம் காப்பாத்தும்.
அம்பு பட்ட ரணமும் மூன்றே முக்கால் நாழிகை தான்.
நீரிலேயே மூச்சடக்கிக் கிடப்பவர்கள் நாங்கள். நிலத்திலே அடங்கின
மூச்சு திரும்பி வரது அதிசயமில்லை.
பிரம்மஹத்தி தோஷம் அதனாலே உங்களைத் தீண்டாது. ராஜகுமாரனை நிம்மதியாக அரண்மனைக்குப் போங்கள்
என்றார் அரிஷ்டநேமி.