Popular Posts

Wednesday, July 08, 2020

திருசெங்கோடு அர்த்தநாரீஸ்வரர்

திருசெங்கோடு அர்த்தநாரீஸ்வரர்

ஈரோட்டிலிருந்து 18 கிமீ தூரத்திலும், நாமக்கல்லில் இருந்து 30 கிமீ தூரத்திலும் உள்ள திருச்செங்கோட்டை அடைய இவ்விரண்டு இடங்களிலிருந்தும் நிறைய பஸ் வசதி இருக்கிறது. திருச்செங்கோடு கோவில் மலைமீது உள்ளது. இப்பொழுது சாலை வசதி இருப்பதால், கடைசி 20 படிகள் ஏறினாலே கோவிலை அடையலாம். கோவில் நிர்வாகமும் மலை அடிவாரத்திலிருந்து, கோவில் சென்றடைய பஸ் வசதி செய்துள்ளது.







இவ்வூர் திருகொடமாடச் செங்குன்றூர் என முற்காலத்தில் சிறப்புற்று விளங்கியது. தெய்வத்திருமலை, நாககிரி என்ற பெயர்களும் உண்டு.


வெந்தவெண் ணீறணிந்து விரிநூல் திகழ்மார்பின் நல்ல

பந்தணவும் விரலாள் ஒருபாகம் அமர்ந்தருளிக்
கொந்தணவும் பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே - தேவாரம்


விரிக்கப் பெற்ற பூணுநூல் திகழும் திருமார் பினனாய், நன்றாக வெந்த திருவெண்ணீற்றை அணிந்து, பந்து பொருந்திய கைவிரல்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு, பூங்கொத்துக்கள் நிறைந்த பொழில் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய அழகிய தண்ணளியை உடைய சிவபெருமானைத் தொழுவார் துன்பங்கள் நீங்கப் பெறுவர்.



தலபுராணம் ஆதிசேஷனும், வாயுவுக்கும் நடைபெற்ற யார் உயர்ந்தவர் என்ற போட்டி பற்றி குறிப்பிடுகிறது. ஆதிக்ஷேஷன் தனது அகன்ற படத்தை விரித்து மேரு மலையை மூடக்கொள்வதை வாயுஅகற்ற வேண்டும் என்ற போட்டியில், சிகரத்தின் மேல் உற்ற உராய்வால் ஆதிக்ஷேஷனின் இரத்தம் சிகரகத்தில் பட்டதோடு, பெயர்ந்த சிகரம் இவ்விடத்தில் வீழ்ந்த பகுதி திருச்செங்கோடு என்று வழங்கலாயிற்று.


மற்றொரு வரலாறாக, காமதேனு சிவபெருமானிடம் ஐந்து சிகரங்கள் பெற்று இப்பகுதியில் நிலைபெற செய்ததாகக் கூறுகிறது. அவைகள் - கஞ்சமலை, சங்ககிரி, புஷ்பகிரி, ஊராச்சிக்கோட்டை மற்றும் திருச்செங்கோடு என்பர்.


மிகப் பெரிய மலையை ஏறுவதற்கு முன்பே மிகப் பெரிய கிணறையும், அதன் அருகிலுள்ள பூந்தோட்டத்தையும் காணலாம். முதற்படி அருகே அருள்பாலிக்கும் கஜமுகப்படி விநாயகர் மேலும் இராயகோபுரம் வரை உள்ள 1206 படிகள் ஏற உதவுவார். இவ்வழியில் 10 மண்டபங்கள் உள்ளன. முதல் இரண்டாவது மண்டப்பத்திற்கு இடையில் திருகாளத்தி சுவாமிகள் மடம் உள்ளது. இரண்டாவது மண்டபமான திருமுடியார் மண்டபத்திற்கு கட்டளைக்கு ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கீழிறங்கி வரும்போது ஊரிலுள்ள சிவனடியார்கள் ஊருக்கு எழுந்தருளுமாறு அழைக்கும் தொன்றுதொட்ட வழக்கம் இன்றும் நடைபெற்று வருகிறது. மூன்றாவது மண்டபம் தயிலி மண்டபம் என்று அழைக்கப்படுகின்றது. இதற்கு சற்று மேற்கே 3 அடி உயரமும் 7அடி நீளமும் உள்ள தெற்கு நோக்கிய நந்தியின் மண்டபம் உள்ளது. இங்கிருந்து சிறிது தொலைவில், அறுபது அடி நீள ஐந்து தலை நாக

கற்சிற்பம் உள்ளது. செங்குந்த சின்ன முதலியார் மண்டபம், சிங்கத்தூண் மண்டபம் நான்காவது, ஐந்தாவது மண்டபங்கள். ஆறாவதும் ஏழாவதும், அறுபதாம்படி மண்டபம், செட்டி கவுண்டன் மண்டபம் ஆகும். எட்டாவது தேவரடியாள் மண்டபத்தை குருவம்ம மாணிக்கம் என்பவர் கட்டியுள்ளார். மிகப்பெரிய ஒன்பதாவது மண்டபம் இளைப்பாறு மண்டபம் என அழைக்கப்படுகிறது. கோபுர வாசல் பத்தாவது மண்டபமாகும்.

கிழக்கு மேற்காக 170 அடியும், வடக்குத் தெற்காக 95 அடியும் உள்ள கோவில். மூலஸ்தான துவாரபாலகர்களுக்கு தெற்கே தரைதளத்திற்கு கீழே சித்திவிநாயகர், முந்தி விநாயகர்கள் சன்னதிஉள்ளது. இதற்கருகே நவக்கிரங்கள் அருள்பாளிக்கின்றனர். கிழக்கே நாரி கணபதியும், அங்கிருந்து மூலவர் சன்னதிக்கும் செல்லலாம். நான் சென்ற அன்று குருக்கள் அர்த்தநாரீஸ்வர ஸ்வரூப விக்ரகத்தை பற்றி விளக்கி தீபாராதனை செய்தார். எதிர்புற மண்டபத்தில் உற்சவரை தரிசிக்கலாம்.





ஆதி யாயவ னாருமிலாதவன் போது சேர்புனை நீண்முடிப் புண்ணியன் பாதி பெண்ணுறு வாகிப் பரஞ்சுடர் சோதியுட்சோதியாய் நின்ற சோதியே -தேவாரம்

இங்குள்ள மண்டபங்களில் சிற்ப கலையின் நுணுக்களுடன் கூடிய வீரபத்திரர், ஊர்த்துவ தாண்டவர், காளி மற்றம் குறவன், குறத்தி சிற்பங்களை காணலாம். இங்கிருந்து வலப்புறத்தில் மிக அழகிய கிழக்கு நோக்கிய பாலசுப்ரமண்யர் சன்னிதி உள்ளது. இந்த செங்கோட்டுவேலன் வலக்கையில் வேலுடனும், இடக்கையில் சேவற்கொடியுடனும் தரிசனமளிக்கிறார்.


கந்தர் அலங்காரம் இச்செங்கோடனை இவ்வாறுச் சிறப்பிக்கிறது.
மாலோன் மருகனை, மன்றாடி மைந்தனை, வானவர்க்கு
மேலான தேவனை, மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியில்
சேலார் வயல் பொழில் செங்கோடனைச் சென்று கண்டு தொழ
நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே

திருமாலின் திருமருகரை, கனக சபையில் திருநடனம்புரியும்
சிவபெருமானின் திருப்புதல்வரை, தேவர்களுக்கும் உயர்வான தேவ
தேவரை உண்மை அறிவின் வடிவாகிய முழுமுதற்கடவுளை,
இவ்வுலகில் கெண்டை மீன்கள் நிறைந்த வயல்களும் சோலைகளும்
சூழ்ந்த திருச்செங்கோட்டில் எழுந்தருளியிருக்கும் திருமுருகப்
பெருமானை அவருடைய திருக்கோயிலுக்குச் சென்று கண்குளிரக்
கண்டு வணங்கும் பொருட்டு அந்தப் பிரம்மதேவன் அடியேனுக்கு
நாலாயிரம் கண்களைப் படைக்கவில்லையே!



ராஜகோபுரத்திற்கு பின்புறம் ஐந்து தலை நாகத்தின் கீழே சிவன் லிங்க வடிவில் அழகிய சிற்பமாக காட்சி தருகிறார். சிவனை கலியுகத்தில் வழிபடும் ஆதிஷேஷனை இங்கு குங்குமம் கொண்டு அர்ச்சிக்கிறார்கள். கிழக்குப் பக்கத்தில் தெற்கு நோக்கிய தக்ஷிணாமூர்த்தி உள்ளார்.

ஸ்தல விருக்ஷம் - இலுப்பை மரம்..

      
அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பது முந்தமக் கூனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுதும் நாமடியோம்
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

- திருஞானசம்பந்தர்
பொருள்:  நாம் முற்பிறவிகளிற் செய்த வினைகளுக்கேற்பவே, இப்பிறவியில் வினைகளைச் செய்து அவற்றாலாய பயன்களை நுகர்கிறோம்` என்று சொல்லப் பெறுவதை நீங்கள் அறிவீர்கள். இவற்றிலிருந்து விடுதிபெறும் வழியை நீவிர் தேடாதிருப்பது உமக்குக் குறையன்றோ? நாம் அனைவரும் சிவபிரானுக்கு அடியவர்கள் ஆவோம். அவ்விறைவனை நோக்கிச் சரியை, கிரியை முதலான சிவப்பணிகளைச் செய்து அவ்விறைவன் கழலைப் போற்றுவோம். அவ்வாறு செய்யின் நாம் செய்த பழவினைகள் நம்மை வந்து அணுகா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.

கோவில் திறந்திருக்கும் நேரம்:
6.00 AM to 6 PM