ஸ்ரீமஹாபெரியவளின் அருள்வாக்கு
(கூடுதல்)
- Part One - பாகம் ஒன்று
11 பாகங்களாக முன்பு ஸ்ரீமஹாபெரியவளின் அருள்வாக்கு என்று இந்த blog -ல் பதிவு செய்திருந்தேன். இப்பொழுது அதற்கு பிறகு முகநூலில் பதிவு செய்திருந்ததை இங்கு ஸ்ரீமஹாபெரியவாளின் அருள்வாக்கு (கூடுதல்) என்று பதிவுசெய்துள்ளேன். Part one - இங்கு தரப்பட்டுள்ளது.
1. Additional
நவராத்திரிலே ஒவ்வொரு கன்னிகையும், ஒவ்வொரு சுமங்களையும் சக்தி அம்சம். அவாளை சுவாசினியா உருவகப்படுத்தி பூஜை செய்யலாம். சிவ-சக்தி வடிவமா தம்பதி பூஜை செய்யறதுக்கு விசேஷம். ஒரே நாளில் ஒன்பது பேருக்கோ, ஒவ்வொரு நாளில் ஒவ்வொருத்தருக்கோ, எண்ணெய் தேய்த்து நீராடக் சொல்லணும். நிறைய மஞ்சள், மருதாணி, புது வஸ்திரம் எல்லாம் கொடுக்கணும். சாட்சாத் லலிதையாவே வரிச்சு, குழந்தை உட்கார்ந்திருக்குமானால்,
ஸஹஸ்ரநாமமே பண்ணலாம்.
இல்லேனா திரிசதி,
அஷ்டோத்திரம், திருப்தியா போஜனம்-
பக்கத்திலே இருந்து அன்பா பரிமாறணும். யதா சௌகரியம் போல் இதைச் செய்துண்டு வந்தால் அம்பாள் அனுகிரஹத்தில் சக்தி பெருகும்.
கிரகத்துக்கு வர சுமங்கலிகளிலே வேணும்கறவா, உறவுக்காரா என்றெல்லாம் பார்க்காம சர்வ தாம்பூலம் கொடுக்கற சிந்தனை வரணும். அப்போதுதான் கிருஹத்திலே சுபிட்சம் பொங்கும். நவராத்திரிலே சுமங்கலிகள் எல்லாருமே ஸூவாஸினிகள்தான்.
"குரவ காக்யஸ்யதரோ புஷ்போத்பத்யர்த்தம்
ஸ்த்ரீ-ஸ்தான-லிங்கன-ரூப-தோஹத-குதூகலஸ்யா
சேதனஸ்ய வ்ருஷ-விசேஷஸ்யாபி அஸூலபா".
மரத்துக்கு உயிரிலேன்னு பலபேர் நினைப்பா. ஸ்த்ரீகள் தொட்டு பறிச்சா சில செடி, கொடிகள் அதிகமாப் பூக்குமாம். காய்க்குமாம். அதிலே ஒண்ணு மருதாணி. அதுக்கு சம்ஸ்க்ருதத்தில் குரவகம்னு பேரு. அசோக மரத்துக்கு கங்கேலி, காமகேலின்னு பேரு. அதோட பூ சிவப்பா இருக்கும். பூக்காம இருந்தா உத்தம ஸ்திரீகளை அதைத் தொடச் சொல்வா. மரம் கொள்ளாம பூத்துடும்.
'பாதாஹத: ப்ரம தயாவிக ஸத்ய சோக' ங்கறது பெரியவா வாக்கு.
தேவி நந்தவனத்தில் உலாவரும்,
அவளோட பாத துளி படாதான்னு அசோகமரம் ஏங்கறதா ஆதிசங்கர பகவத்பாதாள் ஸௌந்தர்யலஹரி-லே சொல்லி இருக்கா.
சர்வாலங்கார பூஷிதையா,
புன்சிரிப்போட, நல்ல குணங்கள் நெறைஞ்ச பல சுமங்கலிகள் பாதம் பட்டாலே கிரஹ தோஷங்கள் விலகறது. சம்பத்து கூடறது. அதனாலேதான் கொலுன்னு ஏற்படுத்தினா. பல ஸ்திரீகளை, கன்னிகைகளை அழைத்து தாம்பூலம் கொடுத்தா, வாங்கிண்டா நல்லது. வருஷம் பூராவும் ஸ்திரீகளை ஆராதிக்க முடியலேன்னாலும் இந்த ஒன்பது நாளாவது கடைபிடிக்கணும்னு வைச்சா. கிரஹஸ்தா இதைக் கைவிடப்படாது.
2. 23
02 2017
பிரதோஷ காலம் மிகவும் உத்தமமானது. அதிலேயும் சனிப்பிரதோஷம் ரொம்ப உகந்தது. ஏன்னா தேவர்களைக் காப்பாத்த, அவர்களுக்கு அமிர்தம் கிடைக்க,
பகவான் விஷம் சாப்பிட்ட நாள் சனிக் கிழமை. மார்க்கட நியாயம்,
மார்ச்சார நியாயம்பா..சிவபெருமானோட நியாயம் மார்ச்சாட நியாயம்.
மார்க்கட நியாயம்னா குரங்குக்குட்டி தாய்க்குரங்கு எங்கே தாவினாலும் கெட்டியா புடிச்சிண்டிருக்குமே அது. ஜனங்கள் விடாம
'அதைக் கொடு, இதைக் கொடுன்னு'
கோவிலுக்குப் போகிறமாதிரி.
மார்ச்சார நியாயம்னா பூனை வாயிலே குட்டியைக் கௌவிக் கொண்டு போய் காப்பாத்துகிறதே அது. சிவபெருமான் பக்தர்களைக் காப்பாத்த வலியப் போய் விஷம் சாப்பிட்ட மாதிரி.
3. 09
03 2017
தோற்றம் இரண்டாக இருப்பதை நாம் ஒப்புக் கொள்ளாமலிருக்க முடியாது. ஜகம் பல ரூபங்களை உடையதாகவே இருக்கிறது. கணக்கிட முடியாதது. ஆனால் இத்தனையும் ஒன்றே என்று நமது சாஸ்திரம் சொல்கிறது. எல்லையற்ற தெல்லாம் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு திருஷ்டாந்தம் சொல்லுகிறேன். ஒரு கண்ணாடி இருக்கிறது. அதற்கெதிரில் மற்றோரு கண்ணாடியை வைப்போம். அந்தக் கண்ணாடியில் பார்த்தால் பிம்பங்களைக் கணக்கிட முடியாது. சுமார் ஐம்பது அறுபது பிம்பங்கள் வரையில் நாம் பார்க்கலாம். இன்னும் எத்தனையோ உண்டு. அவைகளை பார்க்கக்கூட நமக்குச் சக்தியில்லை. அதுதான் அநந்தம். முடிவற்றது. அந்தமானவைகளில் ஸ்வாமியும் ஒருவர். அவருக்கு அனந்தன் என்ற பெயருண்டு. எல்லையற்றவர் என்று அர்த்தம். ஆகாயம் எவ்வளவு மைல் தூரமிருக்கிறது. எல்லையில்லை. எல்லையற்ற ஆகாயத்திற்குத் தேசமென்று பெயர். காலமும் தேசமும் எல்லையற்றவை. இப்படி அநந்தமாக உள்ளது வாஸ்தவத்தில் இராமல் தோற்றமாக மாத்திரம் இருக்கிறது. அநந்தமாகப் பிரதிபலித்தது ஒரு கண்ணாடி தான். ஒன்றாகவுள்ள பொருள் பலவாகத் தெரிகிறது. எதிரில் இருக்கும் கண்ணாடியை எடுத்துவிடின் ஆதாரமான கண்ணாடி ஒன்று தான் பாக்கியிருக்கும். பொருள்கள் கணக்கற்றவையாகத் தோன்றினும் எல்லாம் ஒன்று தான் என்று இந்த திருஷ்டாந்தம் காட்டுகிறது.
4. 18
05 2017
ஒரு சாமியார் ஒரு
மரத்துலே ஏறிப் பழம்
பறிச்சார். ஒண்ணைக் கடிச்சுத் தின்ன ஆரம்பித்தார். ஒரு முயல் நொண்டிண்டே வந்தது. நடக்க முடியாம கொஞ்ச தூரத்திலே படுத்துக்க கொண்டது. ஓடிப்போய் ஒரு
பழத்தை அதுக்குக் கொடுத்தார். இன்னொரு பழத்தை எடுத்துண்டார். பிரசிவிச்சிண்டிருந்த ஒரு ஒட்டகத்துக்கிட்டே கொடுத்தார். அவைகள் சாப்பிடறதை ஆனந்தமாக பார்த்துண்டிருந்தார்.
இவர் தனக்குத் தானே
தெய்வத்தை தரிசிண்டிருக்கார். தெய்வம் நேரிலே வந்திருக்கிறதா நினைக்கிறார். பகட்டுக்காக தர்மம் பண்ணலே. பூமியிலே விளைகிற எல்லாம் எல்லாருக்கும் சொந்தம்னு நினைக்கிறார். அவராலே முடிகிறது.
மரம் ஏறிப் பறிக்கிறார். மரம் ஏறிப் பறிச்சதாலே அது
தனக்கே சொந்தம் என்கிற சுயநலம் அவருக்கு இல்லை. நாம் அவரை
மாதிரி வாழ பழகணும்.
5.
08
07 2017
நல்ல குணசாலிகளுக்கு பொறுமை பலம். விடாமுயற்சி, புலனடக்கம்,
திறமை, எச்சரிக்கை, தைரியம்,
ஞாபகசக்தி, ஆலோசித்து செயலாற்றுவது இதெல்லாம் ஐஸ்வர்யா லோகத்துக்குப் போகிற பாதை. பொறாமை ஆயுளைத் தின்கிற கரையான். தற்புகழ்ச்சி, குருநிந்தனை ஆகிய
இரண்டும் வித்தைக்குச் சத்துரு. அதிகப் பேச்சு செல்வத்துக்கு பகை.
ரொம்பவும் அப்பாவியாக இருப்பவரை, அளவில்லாமல் அள்ளிவிடுபவரை, கர்வம் கொண்டவரை, எப்போதும் துக்கப்படுபவரை, சுறுசுறுப்பில்லாதவரை, அடக்கமில்லாதவரை மஹாலக்ஷ்மி நெருங்குவதில்லை. மஹாலக்ஷ்மி நெருங்கும்படியாக இருக்க வேண்டாமா? மனு சொல்லிக்கொடுத்திருக்கிறாரே!
6. தேவர்களைப் பற்றி இன்னும் சில நூதன
விஷயங்கள் சொல்கிறேன். தேவதைகளுக்கு வேத
அத்தியயனம், யக்ஞம் முதலிய கர்மானுஷ்டங்கள் கிடையாது. ஏன் தெரியுமா? நாம் தேவதைகளைக் குறித்து வேத
சூக்தங்களை ஓதுகிறோம்; யாகங்களும் செய்கிறோம். தேவதைகள் யாரைக் குறித்து அவற்றைச் செய்வார்கள்? நாம் இந்திரனையும் சூரியனையும் உபாசிப்பதுபோல் இந்திரனும் சூரியனும் தங்களையே உபாசித்துக்கொள்ள முடியாதல்லவா? அதனால்தான் அவர்களுக்கு வைதீக கர்மாவில் அதிகாரமில்லை.
வேதத்தை நம்மை போல்
அத்தியயனம் செய்யாவிட்டாலும் அவர்களுக்கு வேதம் தானாகவே தெரியும். அதனால் தான்
நாம் வேத மந்திரத்தை சொன்னால் அனுக்கிரஹம் செயகிறார்கள். மீன் குஞ்சுக்குப் பிறவியிலேயே நீந்தும் சக்தி இருப்பது போல், தேவர்களுக்கு பிறவியிலேயே வேத ஞானம் உண்டு. இதனால் அவர்களுக்கு
'ஸ்வயம் பிரதிபாதித வேந்தர்கள்' என்று ஒரு
பெயர் உண்டு.
7. 29
07 2017
தேவர்களும் ஆத்ம விசாரம் செய்து, அத்வைத ஞானத்தை அடைந்து பிரம்மத்துடன் ஐக்கியமாகலாம். கர்மமும் உபாசனையும் இல்லா விட்டாலும்,
அவர்களுக்கும் ஞான மார்க்கத்தில் ஈடுபடுவதற்கு அதிகாரம் உண்டு என்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.
நமக்குள் இருக்கும் பரமேச்வரன் தேவர்களுக்குள்ளும் இருக்கிறான். நம்மில் பெரும்பாலோர் நமக்குள் ஈஸ்வரன் இருப்பதை உணராததைப் போலவேதான் தேவர்களும் இருக்கிறார்கள். நம்முடைய அதிகாரிகளில் பெரும்பாலோர்க்கு ராஜாவை அல்லது ராஷ்டிரபதியை நேரில் தெரியதல்லவா?
இப்படியேதான் தேவர்களிலும் பலருக்கு பரமேஸ்வரனைப் பற்றி தெரியாது. ஆத்ம விசாரம் செய்தால், நமக்கு ஈஸ்வரனே நம்மில் நாமாக இருப்பது தெரியும். அதற்க்கு பிறகு தேவர்களால் நமக்கு ஆக வேண்டியது எதுவும் இல்லை. அப்போது எல்லாக் காரியமும் நம்மை விட்டுவிடும். ஆனால் அதுவரை தேவர்களை உத்தேசித்த கர்மங்களை நாம்
செய்யத்தான் வேண்டும்.
8. 08.03.2018
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா
லோகத்தை விட்டு போனவுடன் லோகம் முழுவதிலும் கலியின் இருட்டு வீரியத்துடன் பரவக்கூடிய
நிலைமை ஏற்பட்டது. வரப்போகிற அதர்ம இருட்டில், வேதம் என்கின்ற தீபம் சில
இடங்களிலாவது அணையாமல் இருக்க செய்ய வேண்டுமே என்று ஒரு பெரியவர் விசாரப்பட்டு, அதற்கான காரியங்களில் இறங்கினார்.
கலிகால மநுஷ்யர்களுக்கு வேதம் முழுவதையும் அத்யயனம் செய்கிற சக்தி இருக்காது என்று
அவருக்குத் தெரியும். ஆனால் வேத மந்திர சப்தம்
லோகத்தில் கொஞ்சமாவது இருந்தால் தான் ஸமஸ்த பிராணிகளுக்கும் க்ஷேமம் உண்டாகும். இதற்காக கலிகாலத்தில் வரப்போகிற அற்ப சக்தர்களுக்கு
ஏற்றபடி அதுவரை கங்கு கரை இல்லாமல் இருந்த வேதத்தை நான்காகப் பிரித்தார். தம் சிஷ்யர்களில்
பைலர் என்பவருக்கு ரிக் வேதத்தையும், வைசம்பாயனருக்கு யஜுர் வேதத்தையும், ஜைமினிக்கு சாம வேதத்தையும், ஸூமந்துவுக்கு அதர்வண வேதத்தையும்
உபதேசித்தார். "உங்களிடம் இந்தப் பெரிய
சொத்தை ஒப்படைத்தேன். வேதத்தின் இந்த ஒவ்வொரு
கிளையையும் சிஷ்ய பரம்பரை மூலம் ரக்ஷித்து வர ஏற்பாடு செய்யுங்கள்" என்று அந்த
நால்வரையும் ரோந்து சுற்றுகிற மாதிரி அனுப்பி வைத்தார். அனந்தமாக இருந்த வேதங்கள் இப்படி கலிகால அற்ப சக்தர்களுக்கும் ஒரு ஆயுளில் கற்று அத்யயனம் செய்கிற அளவுக்கு நாலாக
வகுத்துத் தரப்பட்டன.
அந்த நாலு சிஷ்யர்களின்
வழிவந்த சிஷ்யர்களின் மூலமாக பல ஆயிரம் வருஷங்களாக காதால் கேட்டு கேட்டே, நம் காலம் வரை வந்துவிட்டது.
அதனால் கலியின் கோலாஹலமும் அடங்கியே இருந்தது.
வேக அத்யயனம் குறைந்த கடந்த நூற்றாண்டில் கலி எப்படி முற்றிவிட்டது என்று பார்க்கிறோம்.
கலியுக ஆரம்பத்தில்
லோக ரக்ஷணத்துக்காக வேதத்தை இப்படிக் காத்துத் தந்த அந்த மஹா பெரியவரைத்தான் 'வேதவியாசர்' என்கிறோம். 'வ்யாஸ' என்றால் பகுத்து வைப்பது என்று அர்த்தம்.
வேதத்தை நான்காக பகுத்தவர் வேதவியாசர்.
நன்றி - காஞ்சி மஹாஸ்வாமிகளின்
அருள் வாக்கு
திருவரசு புத்தக நிலையம்
9. 15 03 2018
சூட்சுமமான தத்துவங்களையும்,
சிரம சாத்தியமான சடங்குகளையும் சொல்கிற வேதங்களை நான்காகப் பிரித்து
நான்கு சிஷ்யர்களுக்கு போதித்தார் வியாசர்.
அந்தச் சூட்சுமங்களைப் புரிந்து கொண்டு, வேதம் விதிக்கிற யக்ஞ அனுஷ்டானங்களை ஏராளமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுச் செய்யக்கூடியவர்களுக்கு, இந்த சிஷ்யர்கள் வேதங்களைப் போதித்தார்கள். வியாசர் வேதங்களின் பராமதாத்பர்யத்தை அனைவருக்கும்
ரஞ்சகமான புராணங்களாக இயற்றினார். இவற்றை பொது ஜனகளுக்கெல்லாம் பிரச்சாரம் செய்கிற பணியை சூதர் என்பரிடம் ஒப்புவித்தார். புராணங்களைப் பிரச்சாரம் செய்து கொண்டே இருந்ததால்
அவர் சூதபௌராணிகர் என்றே பெயர் பெற்றார்.
வேதத்தில் 'சத்தியம் வத' என்று
ஒரு விதி இருக்கும். அந்த விதியைக் கதாரூபமாக்கி
ஜனங்கள் யாவரும் ஏற்குமாறு செய்கிறது ஹரிச்சந்திரன் வரலாறு. 'தர்மம் சர' என்கிற
வேதத்தின் கட்டளைக்கு மஹாபாரதம் முழுவதும் விளக்கமாகிறது. 'மாத்ரு தேவோபவ', பித்ரு
தேவோபவ' என்கிற
வேத வாக்கியங்களுக்கு ஸ்ரீ ராமனின் சரித்திரம் அற்புதமான பாஷ்யமாக இருக்கிறது. ஆத்ம விருத்திக்காக வேதத்தில் சொல்லியிருக்கிற
சூக்ஷ்மமான விஷயங்கள் எல்லாம் இப்படிப் பொது ஜனங்கள் எல்லோருக்கும் சூதபௌராணிகர் வாயிலாக
மிகவும் சுவாரஸ்யமான முறையில் பிரச்சாரம் செய்யப்பட்டன.
கல்வெட்டுகளைப் பார்த்தால் கோயில்களில் புராணப் பிரவசனம் நடந்து வந்திருப்பது தெரியும். நித்ய பூஜை போலவே புராணப் பிரவசனமும் கோவில்களில்
அன்றாடம் நடந்து, ஆலயத்தில்
வழிபட்டும், புராணங்களை
சிரவணம் செய்தும், சமீப
காலம் வரையில் நம்முடைய மக்கள் சூதுவாதில்லாமல் யோக்கியர்களாக இருந்து வந்திருக்கிறார்கள்.
அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கும் வரை எல்லாக்கல்வியும் வாய்மொழியாகச்
சொல்லியே வளர்ந்து வந்திருக்கிறது. பனை ஓலையில் எழுதுகிற தேர்ச்சி பெற்றவர்கள் சிலரே
இருந்தார்கள்.
10. 22 03 2018
வியாசரின் இன்னொரு பெயர் பாதராயணர். தீவில் (த்வீபம்) பிறந்ததால் அவருக்கு 'த்வைபாயனர்' என்றும் ஒரு காரணப் பெயர் உண்டு. அவர் ஸ்யாமள வர்ணம் ஆதலால் 'கிருஷ்ணர்' என்றும் பெயர் உண்டு. 'கிருஷ்ண த்வைபாயனர்' என்று
சேர்த்தே சொல்வார்கள், கிருஷ்ண
பரமாத்மாவிடமிருந்து வித்தியாசம் தெரிவதற்காக.
வாஸ்தவத்தில் அவரும் கிருஷ்ண பரமாத்மாவும் வேறல்ல. வேத வியாசர் மஹா விஷ்ணுவின் அம்ஸாவதாரம் தான். பிற்காலத்தில் நம் ஆதி சங்கர பாகவத்பாதாளுடைய மஹிமையை
வெளிப்படுத்துவதற்காக விளையாட்டாக அவரிடம் கோபித்து அவரிடம் விவாத சண்டை போடுவதற்காக
கிழப் பிராமணராக வியாசர் வந்தார். இருவரும்
உக்கிரமாக விவாதம் செய்த பொழுது ஆச்சார்யாளின் சிஷ்யர் பத்ம பாதருக்கு இரண்டு பேரும்
உண்மையில் யார் யார் என்று தெரிந்து , "சங்கர: சங்கர: ஸாக்ஷாத்: வியாசோ நாராயண ஸ்வயம்'
என்று அவர் சொன்னதாக ஸ்லோகம் இருக்கிறது. ஆச்சார்யாள் ஸாக்ஷாத் பரமேஸ்வரன், வியாசர் நாராயணனே' என்று
அர்த்தம். முனிவர்களில் நான் வியாசர் என்று
கிருஷ்ணரே கீதையில் சொல்லியிருக்கிறார். 'வ்யாஸாய விஷ்ணு ரபாய, வ்யாஸ ரபாய விஷ்ணவே' என்றும் ஸ்லோகம் இருக்கிறது.
To be continued.