Popular Posts

Tuesday, February 19, 2019

மஹாபெரியவாளின் அருள்வாக்கு (கூடுதல்) Part III பாகம் 3

மஹாபெரியவாளின் அருள்வாக்கு (கூடுதல்)  Part III பாகம் 3 



இந்த தலைப்பில் Part I and II  முன்பே பதிவு செய்திருந்தேன்.  இது 3வது பாகமாகும்.


27 09 2018
வித்யாரண்யர் ஏழை பிரமச்சாரி. திரவியத்தை யாசித்து கடும் தவம் இருந்தார். மஹாலக்ஷ்மி பிரசன்னமாகி "இந்த ஜன்மாவிலே உனக்கு ஐஸ்வர்யத்தை அனுபவிக்கிற லபிதம் இல்லே. அடுத்த பிறவியிலே உன் தபசுக்கான பலன் கிட்டும்' என்றாள்.  வித்யாரண்யர் ரொம்ப சாமர்த்தியமாக 'நான், இந்த க்ஷணம் முதல் சந்நியாசி ஆகிறேன். சந்நியாசம் மேற்கொண்டால் அது மறுபிறவி.   உன் வாக்கு பிசகாமல் செல்வத்தை தர வேண்டும்' என்றார்.  அலைமகளும் வாக்கு பிசகாமல் ஸ்வர்ண மலையாய் குவித்துவிட்டாள்.  வித்யாரண்யர் பிரமிச்சு போய்விட்டார். அடடா! சம்சார கஷ்டம் போக பணம் கேட்டோம்.  பணம் வந்தது.  குடும்பம் போய் விட்டது.  சந்நியாசி பணத்தின் மேல் ஆசை வைக்கக் கூடாது.   அதை சுயநலத்துக்குப் பிரயோஜனப் படுத்தக் கூடாது.  எதுக்கு இப்படி செய்தோம் என்று வருத்தப்பட்டார்.  அப்புறம் 'இதுதான் நம்மோட விதி' என்று மனசு சமாதானமாச்சு.

இந்த வித்யாரண்யர் தான், ஹரிஹரன், புக்கன் என்ற அண்ணன் தம்பி - ஆடு மேய்ச்சுண்டு இருந்தவாளைக் கொண்டு, துங்கபத்ரா நதிக்கரையிலே ஹிந்து சாம்ராஜ்யத்தை நிறுவியவர். வித்யாரண்ய நகரம் தான், பின்னால் விஜய நகர சாம்ராஜ்யமாச்சு.

04 10 2018
மனசு என்கிற அகத்திலே ஒட்டடை அடிக்கணும்.  அலம்பி விடணும். மன்னிக்கிறது, இரக்கம், அன்பு என்கின்ற கோலங்களைப் போட்டு ஞான விளக்கை ஏத்தி வைச்சா மஹாலக்ஷ்மி வந்து உடகார்ந்து கொள்வாள்.  காசியிலே தீபாவளியை ஒட்டி மூணு நாள் தங்க அன்னபூரணி தரிசனம்.  லோகத்துக்கெல்லாம்  படி அளக்கிறாள் அம்பாள்.  கிரகசன் என்ற காபாலிகன், ஆச்சார்யா கிட்டே வந்து. "ஒரு ராஜாதி ராஜனோட சிரஸையோ அல்லது ஒரு சந்நியாசி  தலையையோ பலி கொடுத்தால் சிவ தரிசனம் கிடைக்கும்" என்கின்றான்.  ஆச்சார்யாள், "அப்பனே! எல்லார் கிட்டேயும் இப்படிக் கேட்காதே!  ராஜாதி ராஜா சிரசுக்கு நீ அலையறேன்னு தெரிஞ்சா, உன் சிரசு கழுத்திலே நிற்காது.   சந்நியாசி தலை வேணும்னா என் தலையை வெட்டி எடுத்துக்கோ" ன்னார்.

இப்படி சரீர அபிமானம் இல்லாதவர் தான் 'பிட்சாந்தேஹி க்ருபா வலம்பநகரி' என்று அம்பிகை கிட்டே ஞானமும், வைராக்கியமும் வேண்டி யாசிக்கிறார்.   

காசிக்கு இத்தனை மகத்துவம் எப்படி வந்தது?   அன்னபூரணி லோகத்துக்கே படி அளக்கிறவளா அங்கே அனுக்கிரஹம் பண்றா.  கங்கை லோக பாவத்தை எல்லாம் வாங்கிக் கொண்டு புண்ணியத்தைக் கொடுக்கிறா.   மனுஷாளுக்கு முக்கியமான தேவை பசி, தாகம் இரண்டும்.   இரண்டும் இரண்டு சக்திகளா அங்கே இருக்கிறதாலே காசிக்கு மகிமை அதிகம்.  கார்த்திகை மாதம் பௌர்ணமியன்று கங்கையின் பிறந்த நாள். அந்த நாளில் நாம் தீபமேற்றி சிவ பெருமான், முருகன் என்று அனைவரையும் வழிபடுகிறோம்.  கோலோகம், வைகுண்டம், கைலாசம், சத்திய லோகம், சூரிய மண்டலம், ஜனர் லோகம், மஹாலோகம், அமராவதி, பாதாளம் எல்லாவற்றையும் புனிதமாக்கும் கங்கை பூலோகத்திலும் பெருகி ஓடுகிறாள். அந்த கங்கையை பூஜித்து பாவத்தை போக்கிக் கொள்ள வேண்டும். அப்போது தான் மனசில் நல்ல எண்ணங்கள் உருவாகும்.

18 10 2018
சும்பன், நிசும்பன், ரக்தபீஜன், சண்டன்முண்டன்,   தூம்ராட்சன் போன்ற அசுராளோட கொடுமையை தாங்க முடியாம தேவர்களெல்லாம் இமயமலையிலே கூடி தேவியை ஸ்தோத்திரம் பண்ணினா.  "ஜராமரண வர்ஜிதையே! தாண்டவபிரியே! மும்மூர்த்திகளின் ஸ்வரூபியே!  கருணாகரீ! சாரதே! மாதங்கி!  வாக்பவாராதனப்ரியே! வாக்பவப்ரதிபாதினே! க்லீங்கார விக்ரஹே! க்லீங்கார ப்ரீதிதாயினி காமராஜ மனோமோத தாயினி! விஷ்ணு அர்க்க ஹரசக்ரா ஸ்வரூபே! போகவர்த்தினீ! ஈஸானீ! ஜயஜயே!" இப்படி அற்புதமான ஸ்லோகங்களால் அழைத்தார்கள்.

மேற்படி ஸ்தோத்திரங்கள் நவராத்திரி, பௌர்ணமி, அமாவாசை, வெள்ளிக்கிழமைகளில் ஸ்தோத்தரிப்பது ரொம்ப விஷேஷம்.   சாதாரண நாட்களிலும் சொல்லலாம். அப்போ தேவியிடமிருந்து சாரதை கையிலே வீணையோட வந்தா.  தங்க ஊஞசலிலே பாடிக் கொண்டே 'கச்சபீ" ங்கற அந்த வீணையை மீட்டினா.   அந்த பக்கமாய் வந்த சண்டனும், முண்டனும் தேவிகிட்டே வந்து "அம்மா! நீங்க யாரு? இத்தனை சௌந்தர்யத்தை யாராலே காப்பாத்த முடியும்?  எங்க சும்பராஜாவுக்கு ஏத்தவா நீங்க! உடனே புறப்படுங்கோன்னா. தேவி "என் சிநேகிதிகள் முன்னாலே ஒரு சபதம் போட்டிருக்கேன். என்னை ஜெயிக்கிறவாதான் எனக்கு புருஷனாக முடியும்"னா.  சும்பன் சுக்ரீவனை தூது அனுப்பினான். சுக்ரீவனும் அதே பதிலோடு வந்தான். மறுபடி தூம்ராட்சனை அனுப்பினான்.

ஒரு சிரிப்பாலே தூம்ராட்சனை எரிச்சுட்டா வாணி.  சரஸ்வதியோட சிரிப்புக்கே அத்தனை சக்தி உண்டு.  இப்படி ஒவ்வொரு ராட்சசர்களாக வதம் பண்ணினார் .அழகெல்லாம் திரண்டு வந்த வடிவம் தான் சரஸ்வதி.  சரத் காலத்திலே சாரதை என்று பெயர் வந்தது. மதங்க முனிவரோட பெண்ணாகப் பிறந்ததால் மாதங்கியானாள்.  அவளை ஆராதிக்கிறதாலே புரட்டாசி நவராத்திரிக்கு சாரதா நவராத்ரின்னு பேர்.

01 11 2018
ஸ்ரீமஹாபெரியவாளின் அருள்வாக்கு
கம்பன்ன உடையாரின் பாரியை கங்காதேவி. புருஷன் யுத்தம் செய்ய போனால் அவளும் போவாள். போன இடத்தில் நடந்த, பார்த்த சமாச்சாரங்களை ஒன்று விடாமல் கோர்வையாக ஸமஸ்க்ரிதத்தில் சுவாரஸ்யமாக, காவிய நயத்தோடு 'கங்காதேவி மதுரா விஜயம்' என்ற பெயரில் எழுதி இருக்கிறாள். இது நடந்தது 600 வருஷங்களுக்கு முன். விஜயநகர சாம்ராஜ்யத்தின் முக்கிய அதிகாரி கம்பன்ன உடையார். எபிக்ராபிக்ஸ் டிபார்ட்மெண்டில் உடையாரின் இல்லாள் எழுதிய திக்விஜய நூல் அச்சிடப்பட்டிருக்கிறது. உடையாருக்கு மீனாக்ஷி கடாட்சம். அவர் பத்தினிக்கு சரஸ்வதி கடாட்சம். இருவரும் லட்சுமி கடாட்சமும் பெற்று வாழ்ந்தார்கள்.
லலிதா சகஸ்ர நாமத்தில் 'ஸ்ருஷ்டி கர்த்ரி-பிரம்மரூபா' என்றும் வருகிறது. 'ஸம்ஹாரிணி-ருத்ரரூபா' என்றும், 'கோப்த்ரீ கோவிந்த ரூபிணி' என்றும் வருகிறது. லட்சுமி, சரஸ்வதி அஷ்டோத்திரங்களிலும் பிரம்ம-விஷ்ணு சிவாத்மிகாயை நம என்று வருகிறது. மூன்றுமே பராசக்தி தான்.

08 11 2018
ஒரு மனுஷன் கிட்டே இருக்கிற நல்ல குணத்தை பாராட்டணும். ஸ்ரீராம நவமி ஏன் கொண்டாடுகிறோம்?  ராமன் ஏக பத்னி விரதன்.     பித்ருவாக்கிய பரிபாலனம் பண்ணினவன்.  வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும் சகோதரனாக ஏத்துண்டான்.  பெண்டாட்டியை தூக்கிண்டு போய் நம்மை அலைய  வைச்சவனுடைய தம்பிங்கிற பழி உணர்ச்சி இல்லாமல் விபீஷணனை சுவீகரிச்சுக்கணும்னு நமக்கு வாழ்ந்து காட்டினான்.  இத்தனை கலியாண குணங்கள் ஒருத்தருக்கு இருக்குமானால் அவனும் பகவான்தான்.

அதை விட்டுவிட்டு ராமன் வாலியை மறைஞ்சிருந்து அம்பு விட்டானே! நிறை மாச கர்ப்பிணியான சீதையை காட்டிலே விடச் சொன்னானே! சீதையை தீக்குளிக்க சொன்னானேன்னு  குற்றம் கண்டுபிடிக்கிறதிலே இருக்கா சிலர்! 

ஸ்ரீ ராமன் ஜனங்களுக்காகே வாழ்ந்தவன்.  ஏகாலி வாசகத்துக்கும் மரியாதை கொடுத்து, நிறைமாச கர்ப்பிணியை காட்டிலே விடச் சொன்னான்.  

நரம்பில்லாத நாக்கு. சதா ஈரமா இருக்கிறதால எது பேசினாலும் குளித்து சுத்தமாயிடும்.   அதனாலே அது எதையும் பேசும்.  புத்திதான் அதை கட்டுப்படுத்தணும்.  முப்பத்திரண்டு பற்களை இரண்டு வரிசையாய் அமைச்சு அழகாக அரண் கட்டி விடறார் பகவான்.  அது சமயம் பார்த்து நாக்கைக் கடிக்கிறது.  ஆனாலும் நாக்குக்கு விவஸ்தை கிடையாது.

 
15 08 2018
சரி, வாலி வதத்துக்கு போவோம். சுக்ரீவன் முதல்லே சரணாகதி ஆயிட்டான். -வாலியும் வந்து கால்லே விழுந்தா என்ன செய்கிறது என்றெல்லாம் பட்டிமன்றத்தில் படிச்சவா நிறைய அலசிட்டா-.  தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் கடைவதென்று முடிவாகி ஒளஷதிகளெல்லாம் திருப்பாற்கடலில் போட்டாகி விட்டது.  மந்தர பர்வதத்தை மத்தாக்கி, வாசுகியை வேண்டி கயிறாக மூன்று சுற்று சுற்றி கடைய ஆரம்பித்து விட்டார்கள். அசுரர்கள் பகுதியில் நின்று பெருமாளுக்கு எதிராக வாலி கடைகிறான்.  கூர்மாவதாரமே இப்பொழுதான் ஏற்படப் போகிறது.  வாலி அத்தனை பழையவன். வாலியின் கூர்மையான நகங்கள் குத்தி வாசுகியின் உடல் புண்ணானது. அவன் முரட்டுத்தனமாய் இழுத்ததில் வாசுகிக்கு உடம்பெல்லாம் வலி. வாசுகி அமிர்தம் கடைய உதவினாய்! உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார் பெருமாள். வாசுகி யுகம் யுகமாய் தூங்க வேண்டும் என்றார். சரி, இன்னொரு வரம் கேள் என்றார். வாசுகி கண்ணீரோடு என்னை போலே வாலிகிட்ட மாட்டிக்கொண்டு யாரும் அவஸ்தை படக்கூடாது, உங்க கையாலேயே அவனை வதைக்கணும் என்று வேண்டிக் கொண்டான். ஆகட்டும் என்றார் பகவான். இரண்டு வரத்திற்கும் பகவானின் அவதாரத்திற்கும் சங்கிலி மாதிரி ஒரு பிணைப்பு. 

பகவான், தசரத குமாரனாக சுக்ரீவனைச் சந்தித்தபோது, அவனுக்கு நம்பிக்கை உண்டாக்க ஏழு மரா மரங்களையும் ஒரே அம்பாலே துளைச்சார். இது எப்படி சாத்தியமாச்சு? பூமிக்கு அடியிலே தூங்கிக் கொண்டிருந்த வாசுகி அவர் கண்களுக்கு தெரிஞ்சான்.  அவனோட வாலைப் பெருவிரலால் அழுத்திண்டார்.  தூக்கம் கலைஞ்ச வாசுகி உடம்பை நெளிச்சு சீறி எழுந்தான். முதலில் நாலு மரம் ஒரு வரிசையாகவும், மூன்று மரம் கொஞ்சம் தள்ளி வரிசையாகவும் வாசுகியோட உடலுக்கு தக்கபடி இருந்தது. சீறி எழுந்ததில் உடல் நேரானதாலே மரங்களும் ஒரே வரிசையில் வந்தன.

கும்பகோணம் ஸ்ரீராமசாமி கோவிலிலே இந்த நாலும் மூணும் ஆனா வளைவோட வாசுகி படுத்திருக்கின்ற சித்திரத்தை காணலாம்.
 
சுக்ரீவனுக்கு முன்னாலேயே வாலியை அழிக்க வாசுகிக்கு வாக்கு கொடுத்திருந்தார் ரங்கராஜன்.  ராஜாராமன் அயோத்திக்கு மட்டும் ராஜா.  கோவிந்தராஜனோ இந்த ப்ரிதிவிக்கே ராஜா. அதுவே வாலியின் வதத்துக்கும் காரணமாயிற்று.   

22 11 2018
"ஸ்வாமி! இரண்டாவது குழந்தையும் புது ஜீவன் தானே?  அதுக்கு ஏன் ஸீமந்தம் பண்றது இல்லை" ன்னு ஒருத்தர் கேட்டார்.  தாய், தகப்பன் என்கிற பெருமையை தர சிசுவிற்கு காட்டற உபசரணை, கர்ப்ப பையிலுள்ள சில குறைகளை நீக்கற சடங்குளெல்லாம் இரண்டாவது ஜீவனுக்கு பழகின இடமாகிவிடுகிறது.  ஒரு ஜீவன் குடியிருந்து அனுபவப்பட்ட வாசஸ்தலமாயிடறது. 

ராமனின் பாட்டனார் அஜன்.  அஜனின் தந்தை ரகு. ரகுவின் தகப்பனாரான திலீபன் ஒரு பிள்ளை பிறக்க காமதேனுவின் பெண் நந்தினியை கண் போல் காத்து, அதன் குளம்படி மண்பட்டு புனிதனாகி தந்தை என்ற பேற்றை அடைந்தான்.  திலீபன் பசுவை ரட்சித்து அதன் தூளிபட்ட புண்யம் அவன் பாரியை ஸூதக்ஷிணை குலம் விளங்க ரகுவைப் பெற்றெடுத்தாள். அதனால் தான் 'தவறாத சந்தானம்' என்று அதை பதினாறு பேறுகளில் ஒன்றாக வைத்தார்கள். 

நல்ல மனுஷாளை ஒவ்வொரு ஜீவனும் 'நான் இவனுக்கு பிள்ளையாக போக அனுகிரகம் பண்ணுன்னு ஈஸ்வரனை வேண்டிக்குமாம்.  ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் பகவான் அனுக்கிரகம் பண்றார்.  குடும்பத்தில் ஒரு குழந்தை பிறந்து அவன் தலைக்கு ஸ்நானம் செய்து தலையை சிலுப்பிக் கொள்ளும்போது சிந்தும் ஒவ்வொரு நீர்த்துளியும், நரக வாசம் செய்யும் பித்ருக்களைக் கரையேற்றும் கம்பிகளில் கோர்க்கப்படுகிறதா வியாசர் எழுதி வச்சிருக்கார்.

இந்த மாதிரியான முதல் குழந்தைக்கு ஸீமந்தம் வேணுமான்னு கேட்கலாமா?


29 11 2018
திருநாவுக்கரசர் முதல்லே சமண மதத்திலே இருந்தார். அப்போ அவர் பேர் தருமசேனர்.   அப்புறம் கடுமையாக வயித்து வலி வந்து விபூதியால் குணமாச்சு.    அதனாலே அவர் அக்கா திலகவதி சொல்படி சிவ பக்தனாக மாறிட்டார்.  

இதை அறிந்த சமணர்கள் அரசனும் சைவமாகிவிட்டால் நமது பிழைப்பு கெடுமேன்னு பார்த்தா.  ராஜாகிட்டே போய் - தருமசேனர் வயித்து வலின்னு பொய் சொல்லி சைவத்துலே சேர்ந்துட்டார் -ன்னு சொன்னா. 

அந்த ராஜா முதலாம் மகேந்திர வர்ம பல்லவன்.   அவனுக்கு குண நாதன்னும் ஒரு பேர் உண்டு.   தருமசேனனை அழிக்காட்டா நிறைய பேர் இப்படிக் கிளம்பிடுவான்னும் தூபம் போட்டா. ராஜாவும் சரியா விசாரிக்கலை. 

திருநாவுக்கரசரை சுண்ணாம்பு காளவாயிலே போடா கட்டளையிட்டார்.   ஈசன் அருளால் நீற்றறையில் இருந்த ஏழு நாட்களும் பனி மலையில் இருப்பது போல சுகமாக இருந்தார் நாவுக்கரசர்.   'சமணத்திலே இருந்த போது கற்ற மந்திரம் இப்ப உபயோகப்பட்டிருக்கு   இதெல்லாம் சரிப்படாது.  கொடிய விஷத்தைக் கொடுக்கணுமின்னு' சொன்னா சமணர்கள்.

சிறையிலே தள்ளி நஞ்சு கலந்த பால் சாதத்தை கொடுத்தா. "நஞ்சும் அமுதமாகும் நாதன் அடியாருக்கே"ன்னு சிரிச்சுண்டே சாப்பிட்டார் அப்பர்.  நஞ்சுண்டவன் துணை இருக்கும் போது நஞ்சு அவரை என்ன பண்ணும்?  சௌக்கியமாக இருந்தார்.

பட்டத்து யானையை ஏவி விடச் சொன்னா.  அது பேரு கோபாதிசயம்.  அதோட கோபம் கூட அதிசயமாய் இருக்கும் என்கிறதாலே அந்த பெயர்.  தேவாரம் பாடிக்கொண்டு திருநாவுக்கரசர் நிற்க அவரை வலம் வந்து வணங்கியது  யானை.  யானைப் பாகன் அவரைக் கொல்லும்படி அங்குசத்தால் குத்தினான்.  அது அவனை கீழே தள்ளி கொன்னுடுத்து.  சூழ்ந்து   நின்ற சமணர்களை மிதித்தும், கிழித்தும் அழிச்சுடுத்து.  தப்பி பிழைச்சவா ராஜா கிட்டே - இவன் இங்கே இருக்கறச்சே மிருக வசிய மந்திரத்தை கத்துண்டதை மறந்துட்டோம், யானையை வசியம் பண்ணிட்டான்  - என்றார்கள்.  இவனைக் கல்லோடு கட்டிக் கடலில் இறக்கினால் ஒழிஞ்சுடுவான் -ன்னா.  ஒரு படகில் கடலாழத்துக்கு கொண்டு போய் தள்ளிட்டு வந்தா.  "கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே" ன்னு பாடினார்.  உடனே கல் தெப்பம் மாதிரி மிதந்தது.   கயிறும் அறுந்தது.  திருப்பாதிரிபுலியூரிலே கரை ஏறினார் நாவுக்கரசர்.  இதைக் கேட்ட ராஜா சைவமாகி திருவதிகையில் குணபரவீஸ்வரம் என்கிற சிவன் கோயிலையும் கட்டினார். 
தெய்வ நம்பிக்கைக்கு சின்னவா பெரியாவான்னெல்லாம் கிடையாது.  ஒரே வழியாய் உறுதியாய் நம்பணும்.


06 12 2018
பொங்கல் என்றதுமே, நம்ம எல்லோருக்கும் ஞாபகம் வர்றது சூரியன் தான்.  நிதர்சனமா கண்ணுக்கு தெரியற தெய்வம் அவர்.  நம்மோட பார்வை தான் சூரியன்.  இருட்டா இருக்கறபோது எதையும் நம்ம பாக்க முடியறதில்லே.  சூரியன் ஆகாசத்தில் ஒளி வீசறப்போ அது முன்னாலே எத்தனை பவர் உள்ள விளக்கும் பிரகாசிக்கிறதில்லே! 
சதா நீர் ஊருண்டிருக்கிற நாக்கு தான் வருணன்.  நாக்கு வறண்டு போனா ஜலம் குடிக்கிறோம்.  தினமும் முடிந்த அளவு வருண ஜபம் பண்ணினா நாக்கு வறளாது.  நம்மோட மூச்சு தான் வாயு.  பிறந்த உடனே சூரியனை கனின்னு நெனைச்சு தாவினார் அனுமார்.  அப்போ கிரஹணம் பிடிக்கிற நேரம்.  ராகு, ராஜாவான இந்திரன் கிட்டே  போய் புகார் பண்ணினார்.  இந்திரன் வஜ்ராயுதத்தை  ஆஞ்சநேயர் மேலே எறிஞ்சான். முகவாய் கட்டையிலே அடிபட்டு விழுந்துட்டார் அனுமார். பேச்சு மூச்சில்லே. பிள்ளை அடிபட்டு விழுந்ததும் வாயு பகவான் கோபத்தோடு ஆஞ்சனேயரை தூக்கிண்டு ஒரு குகைக்குள்ளே போய் ஒளிஞ்சிண்டிருந்தார். இதனால் எல்லா லோகத்துக்காராளும் மூச்சு விட சிரமப்பட்டா. அப்புறம் பிரம்மா, இந்திரன், வருணன், அக்னி, குபேரன்னு எல்லா தேவாளும் வந்து நிறைய வரங்களை கொடுத்தா.  சிருஷ்டிக்கிறவரே பிரம்மா தானே!  கமண்டல நீரைத் தெளித்து தடவி விட்டார்.
அனுமார் பிறந்தது ஸ்வாதி நக்ஷத்திரம்.  அடிபட்டு விழுந்து மறுபடி பிழைத்து எழுந்தது மூல நக்ஷத்திரம்.   நடுவிலே மூணு நாட்கள் வாயு சஞ்சாரம் இல்லாம லோகம் சிரமப்பட்டிருக்கு.  நம்ம மூக்கு தான் பூமி.  பூமாதேவியோட கடாக்ஷம் இல்லேன்னா நம்மாலே வாசனைகளை பிரித்து அறிய முடியாது.  பசி தான் அக்னி.   ஜீரணமாகலேன்னா அக்னி ஸூக்தம் சொல்ல வைக்கணும். இந்திரியங்களுக்கும், கைகளுக்கும் அதிருஷ்டமான  தேவதை  கர்மேந்த்ரியான இந்திரன்.  பாபங்கள் இருப்பிடம் அபானம்.  மனசு தான் ஜீவன்.  உயிர் போன பின்பு நினைப்புகள் வர்றதில்லே.  இதை உணர்ந்தவாளாலே தான் மானசீக பூஜை செய்ய முடியும்.  மனசாலேயோ, பேச்சாலேயோ, சரீரத்தாலேயோ யாருக்கும் எந்த கஷ்டமும் கொடுக்கப்படாது.  இதைத் தான் மானசீக பூஜையில் முதல் புஷ்பமாக சொல்லப்பட்டிருக்கு.

 
13 12 2018
மானசீக பூஜை – Contd .
அடுத்தது நாசி.  புஷ்பங்களை வாசனைக்கு கூட தான் முகரக் கூடாதுன்னு மூக்கை கட்டிண்டு பூப்பறிச்சாராம் வ்யாகரபாதர்.  அத்தனை இல்லாட்டாலும் சமயற்கட்டிலிருந்து வரும் எண்ணெய், பாகு வாசனையை மூக்கு இழுத்து மனசை அலையவிடக் கூடாது.  சர்க்கரை பொங்கல் மனசை இழுத்தப்புறம் எச்சத்தையா நெய்வேத்யம் பண்றது..  பூஜைக்கு நடுவிலே வராதவர் வந்திருக்கான்னு மனசு சொல்லும்.  இதோ அஞ்சு நிமிஷத்தில் வந்துடுவேன்னு வாய் சொல்லும்.  அதை விட எழுந்து விடுவதே மேல்.  வந்திருக்கிறவர் ராஜான்னு தெரியாமல் மானசீக தரிசனத்தில் மூழ்கி இருந்தவர் அபிராமிபட்டர்.  அமாவாசைன்னு புத்திக்கு தெரியும்.  ஆனாலும் வாய் பௌர்ணமி என்றது.  அவர் வாக்கை நிஜமாக்க அகிலாண்டேஸ்வரி தன் தடாகத்தையே ஆகாயத்தில் வீசினாள்.  பூர்ண சந்திரனுக்கு ஏது இவ்வளவு பிரகாசம்னு ராஜா ஆச்சரியப்பட்டார்.

மனதாலேயே கோவில் கட்டியவர்கள், வாயிலார் நாயனாரும், பூசலாரும்.  காஞ்சிபுரத்தில் பல்லவ ராஜா கோவில் கட்டினார்.  கும்பாபிஷேகத்தை இன்னொரு நாள் வைத்துக்கோன்னு  சொப்பனத்தில் சாமி வந்து சொல்லிட்டார்.  அதனாலே பஞ்சேந்திரியங்களையும் அடக்கினா மனசாலே செய்கிற பூஜை தான் பெரிசு.  இந்த கட்டுப்பாடு தான் இரண்டாவது புஷ்பம்.    மனசையோ, சரீரத்தையோ பூஜை பண்றப்போ யார் கஷ்டப்படுத்தினாலும் கலங்காமல் தைரியமாக இருக்கிறது தான் மூணாவது புஷ்பம்.  சண்டிகேஸ்வரரை அவரது தகப்பனார் எத்தனை அடிச்சும், திட்டியும் கூட அவர் அசையவே இல்லை.  அபிஷேகப் பானையை காலாலே உதைச்ச பிறகு தான் அவருக்கு கோபம் வந்தது.  அதனால் தான், பிள்ளையார் முருகனைப் போல் அவரும் ஒரு பிள்ளையாகி பஞ்சமூர்த்திகளாய் திருவிழாவில் பவனி வரார்.

கீழே நெருப்பு; கயிற்று உறியிலே தைரியமாய் அந்தாதி பாடினார் அபிராமபட்டர்.   அம்பிகை தரிசனம் கொடுத்து அவர் வாக்கைக் காப்பாத்தினாள்.  இந்த அவருடைய பொறுமை தான் நான்காவது புஷ்பம். 

No comments:

Post a Comment