Popular Posts

Saturday, September 01, 2018

ஸ்ரீமஹாபெரியவளின் அருள்வாக்கு (கூடுதல்) - Part II - பாகம் இரண்டு

ஸ்ரீமஹாபெரியவளின்  அருள்வாக்கு (கூடுதல்)
- Part II - பாகம் இரண்டு

11 பாகங்களாக முன்பு ஸ்ரீமஹாபெரியவளின்  அருள்வாக்கு என்று இந்த blog -ல் பதிவு செய்திருந்தேன்.  இப்பொழுது அதற்கு பிறகு முகநூலில் பதிவு செய்திருந்ததை இங்கு ஸ்ரீமஹாபெரியவாளின் அருள்வாக்கு (கூடுதல்) என்று பதிவுசெய்துள்ளேன். Part Two - பாகம் இரண்டு - இங்கு தரப்பட்டுள்ளது.  பாகம் ஒன்று உள்ள லிங்க்:http://sarayutoayodhya.blogspot.com/2018/07/part-one-11-blog.html 




12 04 2018
திருஞானசம்பந்தர் அம்பாளின் க்ஷீரத்தை அருந்தியதால் முருகனாகவே போற்றப்படுபவர். மதுரையில் அவரோடு வாதிட்ட சமணர்கள் புனல் வாதமும்
, கனல் வாதமும் செய்ய வேண்டும் என்றனர். அதாவது இரு கட்சிக்காரர்களும் தங்களது கொள்கைகளை ஓலையில் எழுதி வெள்ளத்தில் விடவேண்டும்; பிரவாகத்தை எதிர்த்துக்கொண்டு எவரது ஏடு வருகிறதோ, அவர்களது கொள்கைக்கே வெற்றி என்பது வாதம்.  இதே போல் அவரவர் சித்தாந்தம் எழுதிய ஓலையை நெருப்பிலே போட்டால் எது எரியாமலிருக்கிறதோ, அதற்கே வெற்றி என்று கொள்வது கனல் வாதம். மதுரையில் சமணரும், சம்பந்தரும் கனல் வாதம்-புனல் வாதம் செய்ததில் சமணரின் ஏடுகள் ஆற்றோடு போயின; நெருப்பில் எரிந்தன. திருஞானசம்பந்தரின் ஓலை பிரவாகத்தை எதிர்த்து வந்தது. தீயிலும் எரியாமல் இருந்தது.

பிரவாகத்தில் போட்ட ஓலையில் சம்பந்த ஸ்வாமிகள் என்ன எழுதினார்

வாழ்க அந்தணர் வானவர் ஆவினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்க்கவே.

இதில் 'வையகமும் துயர் தீர்க்கவே' என்று உலகமெல்லாம் க்ஷேமமாக இருக்க வேண்டும் - 'சர்வே ஜனா ஸூகினோபாவந்து' என்ற தத்துவத்தை சொல்கிறார். மேலும் வாழ்க அந்தணர், வானவர் ஆவினம் என்பது விளக்குவது - லோகமனைத்தின் க்ஷேமத்துக்காகவும் யாகம் செய்கிற கடமையைப் பெற்றவன் பிராமணன். யாகத்தில் ஆஹுதி செய்ய அத்தியாவசியமான நெய், பால், மற்றும் அதில் பிரயோஜனமாகும் எரிமுட்டை முதலியன ஆவினிடத்தினின்றே வருகின்றன. வைதீக யாகங்களில் நம்பிக்கையற்ற சமணரை ஆட்சேபித்த சம்பந்தர், யாகத்தையே முதலில் முக்கியமானதாகச் சொல்லி, அதில் சம்பந்தப்பட்டிருப்பதால் தான் அந்தணரையும் ஆவினத்தையும் தனிப்பட வாழ்த்துகிறார். யாகம் செய்து மழை கண்டு சுபிட்சமாயுள்ள பூமியில், தர்மத்தை வளர்த்து அதர்மக்காரர்களை அடக்குவதற்காக வேந்தனை வாழ்த்துகிறார். இப்படிப்பட்ட தர்ம ராஜ்யத்தில் எங்கு பார்த்தாலும் 'அரன் நாமமே சூழ்க' என்கிறார்.  'ஹரஹர' என்று எங்கு பார்த்தாலும் ஜனங்கள் கோஷிக்கவேண்டும் என்று அந்த தெய்வ குழந்தை போட்ட ஆக்ஞா விசேஷத்தால் தான் இன்றளவும், 'நம: பார்வதி பதயே' என்று ஒருவர் சொன்னால், நாம் அத்தனை பேரும் 'ஹரஹர மகாதேவா' என்கிறோம்.

19 04 2018
கோவிந்த நாமத்தை சொன்ன தெய்வக் குழந்தை, நம் பகவத் பாதர்களாகிய ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் அவர்களே.  எட்டு வயது குழந்தையாக இருந்தபோதே கோவிந்த பகவத்பாதர் என்கின்ற மகானிடம் சந்நியாசம் வாங்கிக்கொண்ட ஸ்ரீ ஆசார்யாளுக்கு 'கோவிந்த' நாமத்திலே விஷேஷ  பற்று.  காசியில் வயோதிக தசை வந்தும் பகவானைத் தேடாமல் இலக்கணத்தை உருவேற்றிக் கொண்டிருந்த ஒரு பண்டிதரைப் பார்த்ததும் பால சங்கரருக்கு மனம் உருகியது.  'இந்த வியாகரண சூத்திரம் மரணம் வந்த சமயத்தில் காப்பாற்றுமாஅப்போது வாக்கிலும் மனசிலும் கோவிந்த நாமம் இருந்தாலே அல்லவா சமஸ்காரத்திடமிருந்து விடுபடலாம்' என்று பண்டிதருக்கு முன்னிலைப்படுத்தி, உலகத்தையெல்லாம் பார்த்து, 'பஜகோவிந்தம், பஜகோவிந்தம்' என்று பாடினார் ஸ்ரீ சங்கர பகவத்பாதாள்.  பரமேஸ்வரரின் அவதாரமான அந்த குழந்தைகளின் கட்டளைப்படிதான் இப்போதும் நாம் "கோவிந்தா, கோவிந்தா" என்று  கூட்டத்திலே கோஷிக்கிறோம்.

31 05 2018
முன்பெல்லாம் அமைதியைக் காண நம் தேசத்திற்கு பலர் வேறு தேசங்களிலிருந்து வருவார்கள்.  இப்பொழுது நம் தேசத்திலேயே அமைதி இல்லாமல் போய் விட்டது.  இந்தியா என்றால் அமைதியின் பிறப்பிடம் என்ற நிலை மீண்டும் வரவேண்டும். இந்த அமைதி வீட்டில் தொடங்கி கிராமம், நகரம், தேசம், உலகம் முழுவதற்கும் பரவ வேண்டும்.  நல்ல பழக்க வழக்கங்கள் இளமையில் தானே படியும்? எனவே வீடுகளில் ஒய்வு நேரத்திலும், தனிப்பட்ட முறையிலும் நல்ல பழக்க வழக்கங்களைக் குழந்தைகளுக்குக் கற்று தர வேண்டும்.  நாமே கற்றுக் கொள்ளும் நிலையிலே தானே இருக்கிறோம்.  அவர்களுக்கு கற்றுக் கொடுப்பதின் மூலம் நாமும் கற்று கொள்ளலாமே!  பரம்பொருளின் அருள் பரிபூரணமாக கிடைக்க சத் சங்கத்தை, சான்றோர்களின் சேர்க்கையை நாடுவோம்.

07 06 2018
ஏதோ ஒரு மரத்தில் காய்க்கும் காய்களில் சில வெதும்பிப் போகின்றன.  அப்படி எல்லாம் பழுத்தால் உலகத்தில் கஷ்டம் தான்.  ஒரே மரமாகத்தான் இருக்கும்.  ஆனால் ஏதோ ஐம்பதாயிரத்தில் ஒன்றுதான் நல்லதை அடைய முடியும்.  'நமக்கு ஏன் பாபம் வருகிறது? கோபம் வருகிறது? காமம் வருகிறதுஇவை எல்லாம் ஏன் வரவேண்டும்எப்போதும் ஆனந்தமாக சந்தோஷமாக இருக்கக்கூடாதா?' என்று தோன்றுகின்றது.  இதற்கு பதில் ஒன்றும் புரிவதில்லை. 
ஒரே மரத்திலே புஷ்பித்ததிலிருந்துதான் காயும், பழமும் உண்டாகின்றன. புஷ்பமாக இருக்கும் போது மூக்குக்கும், பழமாக இருக்கும்போது நாக்குக்கும்  உபயோகப்படுகின்றன.  பழம் நல்ல மதுரமாக இருக்கின்றது.  இந்த மதுரம் வருவதற்கு முன்பாக  எப்படியிருந்ததுபூவில் கசப்பாகவும், பிஞ்சில்  துவர்ப்பாகவும், காயில் புளிப்பாகவும், பிறகு மதுரமாகவும் இருக்கிறது.  மதுரம் என்பது தான் சாந்தம்.  சாந்தம் வந்தால் எல்லா பற்றும் போய்விடுகிறது. உடனே கீழே விழுந்து விடுகிறது.  அதுபோல இதயத்தில் எல்லா இடத்திலும் மதுரம் வந்துவிட்டால் தானாகவே எல்லா பற்றும் போய்விடுகிறது. 

21 06 2018
மஹாபெரியவாளின் அருள்வாக்கு
கற்பகோடி காலம் கழிஞ்சது.  பிரளயம் ஏற்பட்டு அமைதியானது.  பிரம்மன் புல்பூண்டு, உயிரினங்கள் எல்லாத்தையும் படைச்சார்.  தேவர், அசுரர், மனுஷர் எல்லாரையும் உண்டாக்கினார்.  எங்களுக்கு ஏதாவது உபதேசிக்கணும் என்று தேவர்களெல்லாம் கைகட்டி வாய்பொத்தி நின்றனர்.  '' என்றார் பிரம்மா.  'தன்னடக்கமாய் இரு, புலன்களைக் கட்டுப்படுத்தினால் அபாயம் இல்லை' என்கிறதை 'தமனம்' என்கிற அர்த்தம் வரும்படி ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டீர்கள்!  புலனடக்கம் இல்லாததால்தான் இந்திரனும் சந்திரனும் சாபம் வாங்கிக் கொண்டார்கள். நகுஷன் என்கிற ராஜா தவசு பண்ணி இந்திர பதவியை அடைஞ்சார். ஆனாலும் இந்திராணி மேல் ஆசைப்பட்டு சர்ப்பமாகக் கிடந்தான்.  இப்படியெல்லாம் நடக்காமல் ஜாக்கிரதையாய் நடந்து கொள்ளுங்கள்' என்ற உங்கள் உபதேசப்படி நடக்கிறோம், என்று சொல்லிவிட்டு போனார்கள்.

அடுத்தது அசுரர்கள் எல்லாம் வந்து பிரம்மாவை நமஸ்காரம் பண்ணினர்.  எங்களுக்கும் உபதேசம்  பண்ணணும்னு பிரார்த்திச்சுண்டா.  அவர்களை பார்த்து '' என்றார் பிரம்மா. அவர்கள் ஆச்சரியப்பட்டு எங்களுக்கும் அதே '' வா..புரியலையே..என்று கேட்டா.  நன்னா யோசிச்சு பார்த்தா புரியும் என்று சொன்னார் பிரம்மா.  அவர்கள் கலந்து பேசினா. ஒருத்தன் சொன்னான்.  "நம்மளுக்கும் புலனடக்கம் இல்லை. அம்பாளையே பொண்டாட்டிய ஆசைப்பட்டவா பலபேர் அதனாலே அழிஞ்சா" என்றான். இன்னொருத்தன் 'நாம பங்காளி! ஒத்துமையா இருக்கமாட்டோம். அது அவருக்கு புரியும். இந்த '' வேறே! நாம் தவசு பண்றோம். அபூர்வமான வரங்களை கேட்கிறோம்.  அடுத்ததா என்ன பண்றோம்.   ரிஷிகளையும், ஜனங்களையும் இம்சை செய்கிறோம்.  அதனால் தவம் பண்ணின புண்ணியமெல்லாம் வீணாய் போய்விடறது.  'தயையாய் இரு - எல்லா உயிர்களிடமும் தயை செய்' என்று சொல்லியிருப்பார்.  அப்படி நடந்து கொண்டால் அழிவில்லை. ஆபத்தில்லை - என்கிறார். பிரம்மன் புன்னகையோடு தலை அசைத்தார்.  அசுராலும் வாலோகத்துக்கு போயிட்டா. 

கடைசியிலே மனுஷா வந்தா.  எங்களுக்கும் நல்ல வார்த்தை சொல்லலும்னு கேட்டுண்டா.  '' ன்னு சொல்லி ஆசீர்வாதம் பண்ணினார். எங்களுக்கும் '' வா? தயவா இருக்கணுமா, தன்னடக்கமா இருக்கணுமா?   "இரண்டும் வேணும்.  அதோடு மூணாவது 'உங்களுக்கு.  தருமம்.  சம்பாதிக்கிறதை தரும வழியிலே செலவழிக்கணும்.  சுயநலமில்லாம தயாவோட ஏழைகள் தேவையை பூர்த்தி செய்யணும்.  புலனடக்கமும் சேந்துட்டா அவா வாழ்க்கை அர்த்தமுள்ளதா ஆகிறது.  இந்த ஜன்மாவில் புகழப்படறா.  தருமத்தால் அடுத்த ஜென்மாவிற்க்கும் புண்ணியம் சம்பாதிச்சுடறான்" - என்றார் பிரம்மா.

26 07 2018
"அங்கமே பூண்டாய், அனலாடினாய், ஆதிரையாய், ஆனிழலாய், ஆனேறூர்ந்தாய்,
பங்கமொன்றில்லாத படர் சடையினாய், பாம்பொடு திங்கள் பகைதீர்த் தாண்டாய்,
சங்கையொன்றின்றியே தேவர் வேண்ட சமுத்திரத்தினஞ்சுண்டு சாவா மூவாச் சிங்கமே,
உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே."

(அப்பரின் திருப்புகலூர் தில்ருத்தாண்டகத்தில் வரும் இரண்டாவது செய்யுள்.)
இனி -
ஸ்ரீமஹாபெரியவாளின் அருள்வாக்கு
ஹகரி என்றழைக்கப்படும் இடத்தில் (அகஹரி -பாபா நாசினி, அகம் என்றால் பாபம், ஹரி என்றால் அதை நாசம் செய்வது) நதியின் கரையில், புதிதாக கட்டப்பெறும் ஒரு கோவில் வளாகத்தில் ஸ்ரீமகாப்பெரியாவா சிலகாலம் தங்கியிருந்தார்கள்.  அது சமயம், டன்லப் கிருஷ்ணன் என்ற அத்யந்த சிஷ்யரை தேவாரம் படிக்கச்சொல்லி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

அப்பர் சித்திரை மாதம் சதய நக்ஷத்திரத்தன்று முக்தி அடைந்தார்.  அவர் முக்தி அடைந்த இடம் திருப்புகலூர்.
இதைப்பற்றி மஹாபெரியவா பேசினார்கள்.  "உனக்கு தெரியுமோ? அப்பருக்கு திருப்புகலூரில் முக்தி.  கர்ப்பகிருஹத்தினில் அப்பர் புகுந்தார். பின் திரும்பி வரவில்லை. இது எல்லோருக்கும் தெரியும்.  ஆனால் தெரியாத ஒன்று உண்டு.  சுவாமி சிங்கமாக வந்து அவரை அப்படியே கடித்து சாப்டுட்டார்."   (பெரியவர்  உபயோகித்த வார்த்தை).  "அப்பனே எனக்கு வலிக்கிறதே" என்று நாவுக்கரசர் சொன்னார்.  "அப்பனே, நீ எனக்கு இனிக்கிறாய்" என்று ஸ்வாமி சொன்னார்.  (கர்பகிருஹத்தில் சிவலிங்கத்தின் பின்னால் இதைக்காட்டும் புடைப்பு சிற்பம் -bas relief - இருந்ததாகவும் அண்மைக் காலத்தில் எடுக்கப்பட்டு விட்டதாகவும் தெரிகிறது).  திருப்புகலூர் பதிகத்திலும் ஸ்வாமியை "சிங்கமே" என்றே அப்பர் விளிக்கிறார். 
- மகா பெரியவாளின் தரிசன அனுபவங்கள் வானதி பதிப்பகம் இரண்டாம் தொகுதி -டி.எஸ். கோதண்டராம சர்மா

09 08 2018
ஸ்ரீமஹாபெரியவாளின் அருள்வாக்கு
ஒரு வயசானவர் ரொம்ப கஞ்சத்தனமாக காலட்சேபம் நடத்தினார். அவர் காலமும் ஒரு நாள் முடிஞ்சது.  நரகத்திலே கொண்டு போய் தள்ளுங்கோ என்றான் எமன்.  நரகத்திலே அவஸ்தைப் பட்டிண்டிருந்த கஞ்சன் அந்த பாதையிலே போறவா வரவாகிட்டெயெல்லாம், 'ஒருத்தருக்கு கூட இரக்கமில்லையா..என்னை கை தூக்கி விடப்படாதா' என்று கத்திக் கொண்டிருந்தான்.  அதிலே ஒருத்தனுக்கு இரக்கம் வந்து "நீ கோயில்,  குளமே போனது இல்லையா?" என்றான்.   "அதுக்கெல்லாம் பணம் செலவாகும்னு முட்டாள்தனமா அப்போ கணக்கு போட்டேன்.. நான் குருவியாட்டம் சேர்த்ததை இப்போ என் பிள்ளைங்க தாம்தூம்னு செலவு பண்றாங்கன்னு பெருமூச்சு விட்டான்.  
"தான, தர்மமே பண்ணினது இல்லையா? நன்னா யோசிச்சு பாரு.. யாருக்காவது படிப்பு சொல்லி கொடுத்திருக்கியாகன்யாதானம் பண்ணியிருக்கியா?" ன்னு கேட்டான்.  எனக்கு மூணு பிள்ளைங்கதான்.  பொண்ணே  பிறக்கல்ல ..யாராவது ஸ்த்ரீகள் கன்யாதானம் பண்ணனும்னு யாசகத்துக்கு வந்தாக்கூட அகம்பாவமா பேசிருவேன் ....பணம் சேர்க்கரத்திலே குறியா இருந்துட்டேன்.  ஆங்.. ஒண்ணே ஒண்ணு ஞாபகத்துக்கு வந்துடுத்து!  ஒரு நாளைக்கு ரொம்ப பசி. பேரம் பண்ணி ஒரு வாழைப்பழம் வாங்கினேன்.  உரிச்சா பாதி அழுகல்... அந்த நேரம் ஒரு பிச்சைக்காரன் 'ஐயா சாமி'ன்னு கையேந்தினான்.  எரிச்சலோடு அவன் கையில் போட்டுட்டேன்.  பாதி நன்னாயிருந்தது.  அது தானத்தில் சேர்ந்தது இல்லையா? என்று ஆர்வமா கேட்டான்.

தேவன் கையை நீட்டி ஏதோ மந்திரம் சொன்னான்.  பாதி வாழைப்பழம் வந்து விழுந்தது.  "அதை நீளமா இழுத்து பிடித்து மேலே ஏறிவா" என்றான்.  "வழுக்கறதே" ன்னு சொல்லிட்டு கெட்டியா பிடிச்சுண்டு மேலே ஏறினான் கஞ்சன்.  கஞ்சனுடைய ஒரு காலை ரெண்டு பேர் வீதம் நாலு பேர் பிடிச்சுண்டு மேலே வரா.  கஞ்சனுக்கு மகா கோபம்.  "அடேய், என் தருமத்தில்  நீங்க பங்குக்கு வரேளாநான் எத்தனை கஷ்டப்பட்டு  ஒரு ஆளை  கண்டுபிடுச்சு மேலே ஏறினா..."  வார்த்தை முடியறத்துக்குள்ளே தொப்புனு விழுந்துட்டான் கஞ்சன்.  அவனோட நாலு பெரும் விழுந்தா.  இப்படி ஆயிடுத்தே என்று அழுதான்.

"சொர்க்கம் உங்க பாட்டன் சொத்து இல்லை!  புண்ணியவான்கள் தங்கற இடம்.  பாதிப்பழத்திற்க்கே 'என் தருமம், நான் கஷ்டப்பட்டேன் என்கிற அகங்காரம் வந்துடுத்து.  பாவம் அவாளும் வரணும்கிற இரக்கம் வரலே...  அந்த இரக்கம் தான் நீ மேலே வருகிற நூலை கனப்படுத்தும்!

உனக்கு புத்தி வரும் வரை நரகத்திலேயே இரு.  நல்லவனா பாத்து பிடிச்சுண்டு இருந்தா அந்த நாலு பேரும் சொர்க்கம் போயிருப்பா...அவங்க பிடிச்சிண்டு இருந்தது கஞ்சனா இருந்ததாலே அவாளும் விழுந்தானு சொல்லிட்டு போயிட்டான்.

அதனாலே இங்கேயிருக்கிற பணத்தை தானம், பூஜை, இரக்கம், க்ஷேத்ராடனம் என்கிற புண்ணியமா மாத்தி வச்சுண்டா தான் அந்த பயணம் சௌகரியமாய் இருக்கும்.

16 08 2018
ஸ்ரீராமனுடைய பட்டாபிஷேகம், 'பிரபு, மஹாராஜா' என்ற கோஷங்கள் வானை முட்டுகின்றன.  'அடே ராமா' என்ற குரல் எல்லோரையும் திடுக்கிட வைக்கிறது.   கந்தலாடையுடன் நரைத்த மீசை தாடியுடன் ஒருவர் ஓடிவந்து ராமனைக் கட்டிக்கொள்கிறார்.  "யார் இது" என்று வசிஷ்டர் கேட்கிறார்.  "குருநாதா! இவனைத் தெரியவில்லையா? இவன் நம் அனந்தன்.  எனக்கு புதிய ஏடுகள் எடுத்து வைத்து, அஸ்திரங்களை ஒழுங்கு பண்ணி, தாயைப் போல் உணவு பரிமாறி எத்தனை பணிவிடை செய்திருக்கிறான்" என குருநாதருக்கு அறிமுகம் பண்ணிவிட்டு, "அனந்தா! இத்தனை காலமாய் எங்கிருந்தாய்என்ன செய்து கொண்டிருந்தாய்?" என்று அனந்தனிடம் கேட்டான். "ராமா! நான் தர்ப்பை பறிக்க காட்டிற்கு சென்றபோது, நீ என்னிடம் சொல்லாமல் பாடம் முடிந்ததென்று அயோத்திக்கு திரும்பி விட்டாயா! எனக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது.  நடந்தே அயோத்திக்கு வந்துவிட்டேன். அங்கே  வந்தால் நீயும், லக்ஷ்மணனும் விசுவாமித்திரர் பின்னால் வேள்வி காக்கப் போயிருப்பதாக கூறினார்கள். 'உனக்கு தர்பை, ஸமித்து இதெல்லாம் யார் தருவார்கள்? புலி, சிங்கம், கரடி இதெல்லாம் தாக்கினால் என்ன செய்வாய்? காட்டிலே நல்ல சாப்பாடு கிடைக்குமா' ன்னெல்லாம் கவலையா இருந்தது.  வெறுமனே வருத்தப்பட்டார் ஆச்சா - நீ காட்டிலே கஷ்டப்படாமல் இருக்கணும்னு பகவானை நினைச்சு தவம் பண்ணினேன்" என்றுசொல்லிக் கொண்டிருந்தபோது மேலே பேசமுடியாமல் அவருக்கு தொண்டை அடைத்தது. 

அப்போது ஒரு ரிஷி முன்வந்து "ராமா! பட்டாபிஷேகம் காண அவரசரமாக  வரும்போது என் கால் பட்டு இவரை மூடியிருந்த புற்று கலைந்துவிட்டது.  இவரும் நினைவுப்பெற்று 'ராமா' என்றார்.  நடந்தவற்றைச் சொல்லி, இங்கே அழைத்து வந்தோம்" என்றார்.

அனந்தன் தடுத்தும் கேட்காமல், அவரை சிம்மாசனத்தில் அமர வைத்து மாலை மரியாதைகள் செய்தார் ராமர்.   தகுந்தவர்களை பெருமைப்படுத்த அவதரித்தவர் ராமன்.  சுக்ரீவனை, விபீஷணனை தூக்கி விட்டான்.    அனந்தனுக்கு பாத பூஜை செய்தான்.  நாமும் அவனோட சரித்திரத்தை நினைச்சு எளிமையா இருக்க கத்துக்கணும்.

23 08 2018
ஜோதிமயமான சிவபெருமானுடைய பாதத்தையும் சிரஸையும் பார்க்க பிரும்மாவும் விஷ்ணுவும் புறப்பட்டுப் போய் ஆயிரம் வருஷமாச்சு.   வராகமூர்த்திக்கு தொடை பாகமே இன்னும் முடியலையேன்னு களைப்பா வந்தது. அதனாலே திரும்பி வந்து தன்னாலே முடியலேன்னு சொல்லிட்டார். பிரம்மாவுக்கு மார்பு பகுதியே முடியலே. ஆனாலும் பெருமாள்கிட்டே தோற்க்கறதான்னு நெனைச்சு மெல்ல அன்ன வாகனத்திலேயே போயிண்டிருக்கார். அப்போ தாழம்பூ கீழே வந்திண்டிருக்கு. "எங்கிருந்து வரே?" ன்னு விசாரிச்சார்.   சிவனாரோட முடியிலேயிருந்து வரேன்னது தாழம்பூ.  "நீ எப்போ விழுந்தே?" ன்னு கேட்டார். இரண்டு யுகமாச்சுன்னது தாழம்பூ.  பிரம்மா திகைச்சு போயிட்டார்.
தாழம்புகிட்டே, எனக்கும் பெருமாளுக்கும் நடந்த விவகாரத்திலே நான் சிரஸைப் பார்த்துட்டு வரேன்னு புறப்பட்டு ஆயிரம் வருஷங்களுக்கு மேலாச்சு.  இனிமேயும் சிரமப்பட விரும்பலே. நீ சிரஸிலிருந்து வரே.  நீ சொன்னா நம்புவா. நான் சிரசை பார்த்ததா நீ சொல்றியா? ன்னு கேட்டார்.
பெரிய மனுஷா தப்பு பண்ணினா சாட்சிக்கு நிறையே பேர் வருவா. அவா எனக்கு வேண்டியவான்னு சொல்லிக்கிறதிலே ஒரு சந்தோஷம். எந்த கேள்வியும் கேட்காம தாழம்பூ சாட்சி சொல்றதுக்கு ஒத்துக் கொண்டது. சிரஸைப் பார்த்தேன்' னு பிரம்மா சொன்னதுக்கு 'ஆமாம்' னு சாட்சி சொன்னது தாழம்பூ.

அன்னிக்கு சாபம் வாங்கிண்டது தான்.  அதிலிருந்து சிவ பூஜைக்கு தாழம்பூ நிஷ்களங்கமாக ஒதுக்கப்பட்டது.   பின்னாலே வரும் விளைவுகளை நினைச்சுப் பார்க்காமல் சில பேர் தாழம்பூவைப் போல பொய் சொல்லிட்டு காலம் பூரா வருத்தப்படுவா.  பிரம்மாவுக்கு பூலோகத்திலே கோவிலும், பூஜையும் இல்லாமப் போச்சு.

தோத்து போறது கேவலமில்லே. பொய் சொல்றதும், ஏமாத்தறதும் பெரிய மோசம் என்கிறதை நிரூபிக்கிறது இந்த கதை.

30 08 2018
சிவ புராணத்தை எடுத்துண்டா சிவனோட வலது பக்கத்திலே பிரம்மாவும், இடது பக்கத்துலே மஹா விஷ்ணுவும், இருதயத்திலிருந்து ருத்ரனும் வந்ததாச் சொல்றது.   விஷ்ணு புராணத்தை படித்தா லோகமே பிரளயத்தில் அழியறப்போ ஆலிலை மேலே கிருஷ்ணன் படுத்திருந்ததா சொல்றது.  அப்படியே பிரம்மாவின் நாபித் துவாரத்திலேர்ந்து வராக மூர்த்தி வெளிப்பட்டு பெரிசாகி லோகத்தை மீட்டு இரண்யாட்சனை அழிச்சதா படிக்கிறோம்.  தேவி பாகவதத்தில் தேவியின் கட்டில் காலா இருக்க மும்மூர்த்திகளும் ஆசைப்பட்டதாக படிக்கிறோம்.  அம்பாளே மும்மூர்த்திகளை உண்டாக்கியதா எழுதியிருக்கு.  விநாயக புராணத்திலே விநாயகரே மும்மூர்த்திகளையும், பதினாலு லோகங்களையும் வயிற்றிலிருந்து வெளிப்படுத்தினதாப் போட்டிருக்கு.  எது நிஜம்? எது பொய்? எதை எடுக்கிறதுன்னு முதல் தடவை படிக்கிறவா குழம்புவா.
வாய் பெரிசா? கண் பெரிசா? கை, கால் பெரிசா? கண்ணாலே பார்க்க முடியல்லேன்னா பிறந்ததற்க்கே அர்த்தமில்லைன்னு  குருடர்கள் வேதனைப்படறா.  பேச முடியாத ஜென்மம் ஒரு ஜென்மமான்னு ஊமை நொந்துக்கறான்.  மத்தவா சொல்றதைக் கேட்க முடியாத காதுகள் ஒரு அலங்கார வளைசல் தான்.   தன்னோட காரியத்தைத் தானே செய்ய முடியாமல், விரும்பின இடத்துக்கு போக முடியாமல், மல ஜலம் கழிக்கக் கூட மத்தவா தயவை எதிர்பார்த்திண்டு நொண்டியா பல பேர் கஷ்டப்படறா.  இதனாலே எல்லாமே முக்கியம்தான்.  பேசறப்போ வாய், கேட்கறப்போ காதுகள், பார்க்கறப்போ கண்கள் அவசியம். அதே போல் தான் மற்றவையும்.
திரிபுர சம்ஹாரம் பண்றச்சே சிவன் பெரியவராகிறார். இரண்ய கசிபு, இராவணன்  அழிக்கிறப்போ பெருமாளோட பெருமை பிரமாதமாய் இருக்கு.  சும்ப நிசும்பனை, மகிஷாசுரனை, பண்டாகரனை வதைக்கறப்போ அம்பாளை தேவர்களோடு மும்மூர்த்திகளும் பிரார்திக்கிறா.   பிரம்மாவோட சக்தி பிராம்மணியா வரது.   இந்திரனோட சக்தி ஐந்திரியா வரது.  விஷ்ணுவோட சக்தி வைஷ்ணவியா, குமாரனோட தேஜஸ் கௌமாரியா, மஹேஸ்வரனோட சக்தி மஹேஸ்வரியா, வருணனோட பலம் வாருணியா, வராக மூர்த்தியோட சக்தி வாராஹியா வரது.  இப்படி எல்லாரோட சக்தியும் சேர்ந்து தான் மகிஷாசுரனை நிர்மூலம் பண்றது.
காது, கண், கை, கால், எல்லாம் சேர்ந்தாலும் மூச்சு விட முடியாது.  அதுக்கு மூக்கு தான் வேண்டும்.  கஜமுகாசுரனை அழிக்க அம்பிகை தன் உடம்பிலிருந்து மஞ்சளை எடுத்து பிள்ளையார் உண்டு பண்ணினாள்.  நமக்குள்ளேயே இத்தனை தத்துவங்களை படைச்சவன் எந்த தெய்வமாய் இருந்தாலும் பெரியவன் தான்.



No comments:

Post a Comment