29 12 2014 101
வருகின்ற திங்கட்கிழமை 05 01
2015 ஆருத்ரா தரிசனம். நடராஜ நர்த்தன தரிசனம் நேரில் கிடைக்கும் பாக்கியம் பெற்றவர்கள்
சிலரே - பதஞ்சலி முனிவர் அதை எவ்வாறு விவரிக்கிறார்.
ஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வாக்கு
ஈஸ்வரனின் காலிலே போட்டிருக்கும்
சலங்கை நர்த்தனமாடும்போது எப்படி ஜல் ஜல் என்று ஒலிக்குமோ, அந்த சப்தததையே பதஞ்சலி
இந்த ஸ்லோகத்தில் காட்டுகிறார். ஸ்லோகத்தின் நடைகூட ஈஸ்வரனுடைய நர்த்தன தாளகதிக்கு
ஏற்ப அமைந்திருக்கிறது.
அநந்தநவரத் விலஸத் கடக கிங்கிணி
ஜலஞ்ஜலஜலஞ்ஜலரவம்
முகுந்த விதிஹஸ்தகதமத்தலலயத்வநி
-
திமித்திமிதநர்த்தநபதம்
சகுந்தரதபர்ஹிரதநந்திமுக
தந்திமுகப்ருங்கிரிடிஸங்கநிகடம்
ஸநந்தஸநகப்ரமுகவந்திதபதம்
பரசிதம்பரநடம் ஹ்ருதி பஜ
முகுந்தன்-விஷ்ணு, விதி-பிரம்மா,
பதஞ்சலி சொல்கிறார் - பிரம்மாவும் விஷ்ணுவும் தங்களின் ஹஸ்தத்தினாலே மத்தளம் வாசித்துத்
தாளம் போட அவற்றுக்கு ஏற்ப ஈஸ்வரன் திமித்திமி திமித்திமி என்று நர்த்தனம் செய்கிறாராம். இப்படி, திமித்திமி திமித்திமி என்று அவர்கள் வாசிக்கிற
மத்தளம், லயம், கரதாளம் இவற்றோடு ஈஸ்வரன் நடனம் ஆடும்போது அவரது கால்களில் உள்ள சலங்கைகள்
ஜல் ஜல் என்று ஒலிக்கின்றன. இந்த நர்த்தன பாதத்தை யாரெல்லாம் கூடி இருந்து பார்த்துக்
கொண்டிருக்கிறார்கள் என்பதையும் பதஞ்சலி சொல்கிறார்:
நந்தி முகதந்தி முகப்ருங்கிரிடி
ஸங்க நிகடம்!
நந்தி, தந்திமுகன், ப்ருங்கி,
ரிடி இவர்கள் எல்லாம் கூடியிருக்கிறார்கள். இவர்கள் தாம் பதஞ்சலியைப் பரிகாசம் செய்தவர்கள்
என்றாலும் கூட பதஞ்சலி இவர்களையும் சேர்த்தே ஸ்லோகத்தில் சொல்லியிருக்கிறார். ஸங்கம்-கூட்டம்,
நிகடம்-சமீபம், நந்தி, தந்திமுகன், ப்ருங்கி, ரிடி இவர்கள் எல்லாம் கூட்டமாகச்
சமீபத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும்படியான நர்த்தன பதம் அது. அந்தப் பதத்திற்க்கு
'குஞ்சித சரணம்' என்று பெயர்.
பரசிதம்பரநடம் ஹ்ருதி பஜ - 'பரதத்துவமாக
இருக்கும்படியான நடராஜனை ஹிருதயத்தில் பஜி' என்று சொல்லுகிறது இந்த ஸ்லோகம். இதே மாதிரியாகப்
பத்து ஸ்லோகங்கள் பண்ணியிருக்கிறார் பதஞ்சலி.
02 01 2015 102
பொங்கல் விழாவை ஒரு நாளோடு கொண்டாடுவதை
நிறுத்த வேண்டாம். என்றும் பொங்கும்படியான விழாவாக என்றும் கொண்டாடிக் கொண்டிருப்போம்.
நாடு மங்கும் பழக்கங்களைக் களைந்தெறிவோம். நாடு பொங்கும் பழக்கங்களை மீண்டும் கைக்கொள்வோம்.
நாம் மாத்திரம் பொங்குவது போதாது. நமது கால்நடைகளும் பொங்க வேண்டும்.
பொடியும் புகையிலையும், சினிமாவும்
சிகரெட்டும், குடியும் குதிரைப் பந்தயமும், சீட்டாட்டமும் பருத்தியாட்டமும் மற்றுமுள்ள
வீணாட்டங்களும், காப்பியும் பட்டுபுடவையும் மங்கினால், நாம் மங்காமல் நமது ஒவ்வொரு
குடித்தனமும் பொங்கி வழியும். நாம் நித்தியம் பொங்கும் அரிசியில் கஞ்சியும் கழுநீரும்
பழுக்கும் வாழைப்பழத்தின் ஒவ்வொரு தோலும், நறுக்கும் கறிகாயின் தோலும் கண்டமும் துண்டமும்
கால்நடைகளுக்கே சேரும்படி சிறு கவனம் செலுத்தினாலே போதும்; கன்று சாகாது, மாடு சாகாது.
உழவனின் விளைவு பொங்கும்.
"ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர்
ஆடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்
மும்மாரி பெய்து
ஓங்குபெருஞ் செந்நெல் ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு
கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்தமுலை
பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல்
பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர்
எம்பாவாய்."
தைப்பொங்கலுக்கும் தை நீராடலுக்கும் பூர்வாங்கமாக
அமைந்தது, இந்த மார்கழிப் பாவைப்பாட்டு. மஞ்சள் சௌபாக்கியத்தை குறிக்கும். பொங்கல்
காலத்தில் பூங்கும் பரங்கிப்பூ, பூசணிப்பூ, செவ்வந்திப்பூ, துவரைப்பூ, கருவேலம் பூ
ஆகிய பூக்கள் எல்லாம் காய்க்கும் மஞ்சளைப் போலவே சௌபாக்கியத்தின் சின்னங்கள். உடலை
அரித்துவிடும் உப்பையும் உறைப்பையும் குறைக்க குறைக்க, ஒவ்வொரு புன்செய் தானியத்திலும்
அடங்கியுள்ள இனிப்பு சுவைக்கப்படுகிறது. பழங்காலத்தில் எல்லாரும் நன்செய் தானியத்தையே
சாப்பிடுவது என்ற பழக்கத்தைக் கைக்கொள்ளவில்லை. அதனால் எவ்வளவு விளைந்தாலும், பஞ்சம்
தான் என்ற நிலமை அவர்களுக்கு ஏற்படவில்லை. மழையை அதிகமாக அபேக்ஷிக்காத புன்செய் தானியங்களை
நிறைய விளைவித்து அதனையே அதிகமாக உட்கொள்ளும் பழக்கம் மீண்டால்தான் நாடு மங்காது பொங்கும்.
கஞ்சியும், கூழும், களியும் அடையும் மோரும் தயிருமே பொங்கவைக்கும் பொருள்கள்.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கலன்று கதிர்களை
வைத்துக் கதிரவனை வழிபடும்போது, நாட்டையும், குடித்தனத்தையும் பொங்க வைக்கும் இவ்வெண்ணங்களையும்
மூன்று முறைக்கு குறையாமல் எண்ணி எண்ணி வலம் வருவோமாக.
இங்கனம் பொங்கிய மங்களம் எங்கணும்
தங்குக.
03 01 2015 103
நம்மிடமிருக்கும் ஒரு காயத்ரீ
மந்திரத்துக்காவது வீரியமிருக்க வேண்டுமானால் உபாகர்மா என்னும் கர்மாவைத் தாத்பர்யங்களை
மனத்தில் வாங்கிக்கொண்டே மந்திர லோபமில்லாமல் அனுஷ்டித்தாகவேண்டும். சிரத்தையோடு உபாகர்மா
செய்யாத குறையினால்தான் இக்காலத்தில் செய்யப்படும் சில கர்மாக்கள் கூட மந்திர வீரியமில்லாததால்
பலனளிக்காமல் போய்விடுகின்றன. ஆகையால் உபாகர்மா அவசியம் செய்ய வேண்டும். ஒரு மந்திரத்தை
நாம் ஆரம்பிக்க வேண்டுமானால் அந்த மந்திரத்தை நமக்கு ஆதியில் கொடுத்த ரிஷிகளையும் தேவதைகளையும்
பூஜித்து, அவர்கள் அனுக்ரஹத்தைப் பெற்றுக்கொண்டு ஆரம்பித்தால் பலன் தரும். அவர்களுடைய
தபம், சக்தி அந்த மந்திர மூலமாய் அவர்களை ஓரிடத்தில் ஆவாஹனம் செய்து (தர்ப்ப கூர்ச்சத்திலோ,
பூர்ண கும்பத்திலோ, எலுமிச்சம் பழத்திலோ, பாக்குப்பழத்திலோ, பிடித்து வைத்த மணலிலோ)
ஷோடசோபசாரங்களால் பூஜிப்பது ஒரு முறை. அந்த ரிஷிகளை உத்தேசித்து தீர்த்தத்தினால்
தர்ப்பணம் செய்வது ஒரு முறை. இரண்டையும்விட வீர்யவத்தான முறை அவர்களை உத்தேசித்து
அக்னி முகத்தில் ஹோமம் செய்வது.
ஆதலால் ஆவணியவிட்டம் நடக்கும்போது
ஹோம காலத்தில் ஒரு உபாத்தியாயர் ஹோமம் செய்து கொண்டிருந்தால் மற்றொரு உபாத்தியாயர்
இப்பொழுது இன்ன ரிஷி, தேவதைக்கு ஹோமம் நடக்கிறது என்று கிருஹஸ்தர்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கும்படி
ஏற்பாடு செய்ய வேண்டும்.
06 01 2015 104
ஸ்ரீ சங்கர பகவத்பாதர்கள் அத்வைதத்தைப்
பரம தத்துவமாக ஸ்தாபித்தார். நாமும் "எல்லாம் ஒன்று, பேதமேயில்லை", என்று
பிரமாதமாக வேதாந்தம் பேசுகிறோம். ஆனால் யதார்த்ததில் இந்த ஏகமான ஸத்வஸ்துவின் ஞானம்
நமக்கு வரவில்லை. ஆசாரியாள் பக்தி மார்க்கத்தையும் நிலைநிறுத்தினார். க்ஷேத்திரம் க்ஷேத்திரமாகச்
சென்று ஸ்தோத்திரம் செய்தார். நாமும் பக்தி பண்ணுகிறோம். எப்படி? கஷ்டம் வந்தால் அது
நிவிருத்தியாகப் பெரிய பூஜை, சாந்தி எல்லாம் செய்கிறோம். நமக்கு உண்மையான ஞானமும் பக்தியும்
வருவதற்கு வழி என்ன? இதற்கெல்லாம் அடிப்படையாக ஆசாரியாள் கர்மானுஷ்டானத்தை விதித்தார்.
அதை விட்டு விட்டு நாம் செய்கிற பத்தி, ஞானம் எதுவுமே நிலைத்து நிற்கக் காணோம். அவரவரும்
உரிய கர்மத்தை ஆசாரங்களோடு பின்பற்றினால்தான் மனசில் ஒழுக்கம், கட்டுபாடு, சித்த சுத்தி
எல்லாம் உண்டாகிப் பிறகு பக்தியும் ஞானமும் சித்திக்கும். பகவத் பாதர்கள் அத்வைத ஞானம்,
உபாசனை இவற்றைச் சொன்னதோடு வைதிக கர்மானுஷ்டானத்தை விதித்து, தாமும் யதி தர்மங்களைப்
பூரணமாகப் பின்பற்றிக் காட்டியதால் தான் 'ஆசாரியாள்' என்பதன் பூரண லட்சணத்தையும் பெற்றிருக்கிறார்.
07 01 2015 105
பக்தர்கள் அன்பில் செய்யும் ஒவ்வோர்
உபசாரமுமே எனக்குக் கனகாபிஷேகம் மாதிரித்தான் இருக்கிறது. இதெல்லாம் போதாது என்று இன்று
வாஸ்தவமாகவே பொற்காசுகளை என்மேல் வர்ஷித்து அசல் கனகாபிஷேகம் செய்திருக்கிறீர்கள்.
இவற்றைபெற எனக்கு என்ன யோக்கியதை என்று யோசித்தால் ஒரே ஒரு காரணம்தான் தெரிகிறது.
'சங்கரர்' என்ற பெயரை நான் வைத்து கொண்டிருப்பது தான். அவர் பெயரைச் சூட்டிக்கொள்ளும்
பாக்கியம் பாக்கிய வசத்தினாலேயே கிடைத்திருக்கிறது.
அவர் எப்படிப்பட்டவர்? சுருதிகள்,
ஸ்மிருதிகள், புராணங்கள் எல்லாம் அவருக்குள்ளேயே அடக்கம். சகல ஜீவராசிகளிடமும் பாய்கிற
கருணை வெள்ளம் முழுவதும் அவருக்குள் அடக்கம். அப்படிப்பட்டவரின் பெயரைத் தாங்குவதற்கே
இத்தனை பெருமை என்றால், எப்படி வாழவேண்டும் என்று அவர் ஆக்ஞை இட்டிருக்கிறாரோ, அப்படியே
வாழ்ந்து காட்டிவிட்டால், சாசுவத கனகாபிஷேகமாக, நித்திய பொன்மாறியாக இருக்கும்.
மக்கட் பிறவி எடுத்த ஒவ்வொருவரும் எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் வழி
காட்டியிருக்கிறார். அவர் சொற்படி வாழ்ந்து காட்டுகின்ற பெரிய பாக்கியம் யாவருக்கும்
பொது. அதன்படி ஒழுகினால் என்றென்றைக்கும் கனகாபிஷேகமாக, நித்யானந்த உத்சவமாக இருக்கும்.
அறம், பொருள், இன்பம், வீடு என்று
கூறப்படுகின்ற நான்கு புருஷார்த்தங்களும் ஆசார்யரின் அநுக்கிரஹத்தில் கிட்ட அவர் வழி
நடப்போமாக.
09 01 2015 106
ஹிந்துவாகப் பிறந்த நாம் ஒவ்வொருவரும்
தத்துவத்தில் (பிலாஸஃபியில்) பிரிந்திருப்பதால் தோஷமில்லை. பிலாஸஃபி
என்று வருகிற போது நான் அத்வைதி- எனக்கு சங்கரர்; நீ த்வைதி உனக்கு மாத்வர்; அவர் விசிஷ்டாத்வைதி
அவருக்கு ராமானுஜர் என்று இருந்துவிட்டுப் போவோம். பல அபிப்பிராயங்கள் இருப்பதால் அவற்றை
ஆராய்ந்து பார்த்தால் தப்பில்லை. ஆனாலும் எந்த பிரிவாய் இருந்தாலும் சரி, ஹிந்துவாகப்
பிறந்த சகலரும் ஒன்று சேர்ந்து வேத வியாச பகவானின் படத்தைத் தோளில் ஏற்றிக்கொண்டு வீதி
பவனி எடுத்துவர கடமைப்பட்டிருக்கிறோம். பல பேருக்குச் சிலை வைக்கிறோம். படத்திறப்பு விழாக்கள் செய்கிறோம். எனக்கு ஆசை வருஷத்துக்கு ஒரு நாளாவது ஒவ்வொரு பேட்டையிலும் இருப்பவர்கள் வியாஸாசாரியாளின்
படத்தை ஐக்கியமாகக் கூடி ஊர்வலமாக எடுத்துவந்து, ஓரிடத்தில்
எழுந்தருளப்பண்ணி, அங்கே சகலருக்கும்
பொதுவான வேத தர்மங்களைப் பற்றி சம்மேளனம் நடத்த
வேண்டும் என்பது. இது வரை இப்படி செய்யாத அபராதத்துக்குப் பிராயச்சித்தமாகச் சேர்த்து
வைத்து இனிமேலாவது இப்படி வியாஸாசாரியாளுக்கு உத்சவம் செய்ய வேண்டும். ஹிந்து
என்ற பேரில் உள்ள நம் எல்லோருடைய நமஸ்காரங்களுக்கும் பாத்திரமாக இருக்கிறவர் அவர்.
அவர் இன்றைக்கும் சிரஞ்சீவியாக
இருக்கிறவர். ஆஞ்சநேயர், அசுவத்தாமா, மகாபலி இவர்கள் மாதிரி இப்போதும் சிரஞ்சீவியாக
அனுக்கிரகம் பண்ணி வருகிறார். வைதீக தர்மத்துக்குப் பல விதங்களில் உறுதி தந்து ஆதார
ஸ்தம்பம் போல் நிற்கிற ஸ்ரீ வேதவியாச மஹரிஷி ஒருத்தர் இல்லாவிட்டால் நம் மதமே இல்லை.
அந்த மகா புருஷரை ஹிந்துவாகப் பிறந்த ஒவ்வொருவரும்
ஸ்மரிக்க வேண்டும். நமக்கு சாசுவத சௌக்கியத்துக்கான வழியைக் காட்டிய வேத வியாசருக்கு
நம் நன்றியைக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.
பிரம்மாச்சாரிகளும், கிருஹஸ்தர்களும்
ஆவணி அவிட்டத்தின் போது புதுப் பூணூல் போட்டுக்கொள்ளும் முன் வேத வியாசரைக் கும்பத்தில்
ஆவாஹனம் செய்து பூஜை செய்கிறார்கள். சந்நியாசிகளில் பூணூல் போட்டுக்கொள்கிற பிரிவினர்கள்
இருந்தாலும், பெரும்பாலும் பூணூலை அறுத்துப் போட்ட சந்நியாசிகளே இருக்கிறார்கள். மற்ற
ஆசிரமக்காரர்கள் உபாகர்மத்தின் போது வியாசருக்குத் தர்பணம், ஹோமம் செய்து நன்றி செலுத்திவிடுகிறார்கள்
என்றால் சந்நியாசிகள் மட்டும் அப்படிச் செய்யாமல் இருக்கலாமா? பிரம்மா சூத்திரம் என்ற
வேதாந்தப் பிரமாண நூலே இவர் செய்ததுதானே! அப்படி நன்றி தெரிவித்துச் செய்வதுதான் சாதுர்மாசியா
விரத ஆரம்பத்தில் சந்நியாசி செய்யும் வியாச பூஜை.
10 01 2015 107
வியாசரைவிட நமக்குப் பரம உபகாரம்
செய்த இன்னொருவர் இல்லை. அவர் வேதங்களை விபாகம் செய்ததோடு நிற்கவில்லை. வேதங்களைச்
சில பேர் தான் நியம ஆசாரங்களோடு ரக்ஷிக்க முடியும். ஆனால் வேதத்தின் தாத்பர்யமான அஹிம்சை,
சத்யம், தர்மம் முதலியவை சகல ஜனங்களுக்கும் திரிந்து, அவர்கள் அவற்றைக் கடைப்பிடிக்க
வேண்டும் என்று மிகுந்த கருணை கொண்டார் வியாசர். இதற்காகவே வேதத்தில் ஒவ்வோர் இடத்தில்
நுணுக்கமாகச் சொல்லியிருக்கிற விஷயங்களைச் சகல ஜனங்களும் ரசிக்கிற கதா ரூபத்தில்
விளக்கிக் காட்டுவதற்கு நுண்ணிய வஸ்துவை பூதக்கண்ணாடியால் காட்டுகிறது போல்,
பதினெட்டுப் புராணங்களையும், மகா பாரதத்தையும் எழுதி அனுகிரஹம் செய்தார் ஸ்ரீ வியாச
பகவான். அவரவர்கள் இஷ்ட தேவதயை முழு முதல் தெய்வமாக ஆராதிப்பதற்கு சௌகரியமாக விசால
மனசு வாய்ந்த வியாசர் பதினெட்டு புராணங்களையும் தந்திருக்கிறார். ஈஸ்வரன், விஷ்ணு,
அம்பாள், சுப்பிரமணியர் என்று ஒவ்வொரு தெய்வங்களைப் பற்றியும் ஒவ்வொரு புராணமாகக் கொடுத்தார்.
சமீப காலம் வரையில் நம் தேசத்தில் எழுதப்படிக்கத் தெரியாத கிராம ஜனங்கள் கூடப் பொய்,
புனைசுருட்டு, திருட்டு, லஞ்சம், நாஸ்திகம் இவற்றுக்குப் பயந்து கூடிய வரையில் ஒழுக்கத்தோடு,
தெய்வபக்தியோடு, திருப்தியோடு இருந்து வந்தார்கள் என்றால் அதற்கு முக்கியமான காரணம்
வியாச பகவானின் பிரசாதமான பாரதமும் புராணங்களும் தான்.
11 01 2015 108
தக்ஷிணாமூர்த்தி ஆதி குரு என்றாலும்
அவர் பேசாத குரு. பேசி உபதேசிக்கிற குரு என்று வருகிற போது நம் அத்வைத வேதாந்த ஸ்மார்த்த
சம்பிரதாயத்தில் முதல் குரு சாக்ஷாத் நாராயணன்தான். அப்புறம் அவரது பிள்ளையான பிரம்மா.
அப்புறம் பிரம்மாவின் பிள்ளையான வஷிஷ்டர். வஷிஷ்டருக்குப் பின் அவருடைய புத்திரரான
சக்தி. சக்திக்குப் பிறகு அவரது புத்திரரான பராசரர். பராசரர் தான் விஷ்ணு புராணம் எழுதி
உபகரித்தவர். இவருடைய புத்திரர் தான் வியாசர். வியாசருக்குப் பின் நம் சம்பிரதாயத்தின்
குரு அவருடைய புத்திரரான சுகர். மகா பிரம்ம நிஷ்டர் இவர். பிறந்ததிலிருந்தே பரப்பிரும்மமாக
இருந்ததால் கல்யாணமே பண்ணிக் கொள்ளாதவர். அதனால் இவருக்கு பிள்ளையும் இல்லை. அப்படியானால்
இதுவரை தகப்பனார் பிள்ளை என்று தொடர்ந்து வந்த குருபரம்பரை இவரோடு நின்று விட்டதா?
இல்லை. இவருக்கப்புறம் அது குரு-சிஷ்யர் என்ற புதுக்கிரமத்தில் விருத்தியாயிற்று. சுகருடைய
சிஷ்யர் தான் கௌடபாதர். கௌடபாதர் சந்நியாச ஆசிரமம் சுவீகரித்தவர். இனிமேல் சந்நியாச
பரம்பரையிலேயே வேதாந்த சம்பிரதாய ஆசாரியர்கள் வருகிறார்கள். கௌடபாதருடைய சிஷ்யர் கோவிந்த
பகவத் பாதர். கோவிந்தரின் சிஷ்யர்தான் நம் சங்கர் பகவத் பாதர்கள். சங்கரருடைய நாலு
முக்கியமான சிஷ்யர்கள் பத்மபாதர், ஹஸ்தாமலகர், தோடகர், ஸூரேசுவரர் ஆகியவர்கள். இதற்ககப்புறம்
ஒவ்வொரு சங்கர பீடத்திலும் இன்று வரை வரிசையாக வந்திருக்கிற ஆசாரியார்கள் எல்லோரும்
நம் ஆசாரியர்கள் ஆவார்கள். இந்த குரு பரம்பரையைச் சொல்லுகிற ஸ்லோகத்தை எல்லோரும் சொல்லி
நமஸ்கரிக்க வேண்டும். அதைச் சொல்லுகிறேன்.
நாராயணம் பத்ம புவம் வசிஷ்டம்
சக்தீம் ச தத்புத்ர பராசரம்ச
வியாசம் சுகம் கௌடபாதம் மஹாந்தம்
கோவிந்த யோகீந்த்ரம் அதாஸ்ய
சிஷ்யம்
ஸ்ரீ சங்கராச்சார்யம் அதாஸ்ய
பத்மபாதம்ச
ஹஸ்தாமலகம் ச சிஷ்யம்
தம் தோடகம் வார்த்திக காரம்
அன்யான்
அஸ்மத் குரூன் சந்ததம் ஆனதோஸ்மி.
இதில் 'பத்மபுவன்' என்பது பிரம்மா. 'வார்த்திககாரர்' என்பது 'ஸூரேச்வரர்'.
மற்ற பெயர்கள் உங்களுக்கே புரியும்.
12 01 2014 முதல் 11 01 2015 வரை Sage of Kanchi-ல் எழுதி
வந்த மஹாபெரியவாளின் அருள்வாக்கு இன்றுடன் (11 01 2015) 108 பூர்த்தியாகிறது. முன்பே கூறியிருந்தபடி
என்னிடம் உள்ள பல புத்தகங்களிலிருந்து எனக்கு பிடித்தவற்றை ஸேஜ் ஆஃப் காஞ்சியில் பதிவு
செய்து வந்தேன். இம்முயற்சிக்கு ஆதரவு அளித்த எல்லோருக்கும் என் நமஸ்காரங்கள். இந்த
108 ஐயும் தொகுத்து இப்போது இங்கு blog-ல் பதிவு செய்து உள்ளேன் --sarayutoayodhya.blogspot.in
படிப்பதற்கு வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு பக்கத்தில் பத்து என்று 11 பாகங்களாக 108 - ஐ பிரித்து பதிவு செய்துள்ளேன்.
An interesting thing emerged during this is that several passages in new books by recent authors claiming copyright find a place even in books printed in 1960s by other institutions.
நன்றியும் நமஸ்காரங்களும்.
படிப்பதற்கு வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு பக்கத்தில் பத்து என்று 11 பாகங்களாக 108 - ஐ பிரித்து பதிவு செய்துள்ளேன்.
An interesting thing emerged during this is that several passages in new books by recent authors claiming copyright find a place even in books printed in 1960s by other institutions.
நன்றியும் நமஸ்காரங்களும்.
ramachandranvenkataraman