Popular Posts

Monday, January 12, 2015

SREE MAHAPERIYAVALIN ARULVAKKU PART III

ஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வாக்கு  பாகம் 3
(Continuation of Part 2)



25 02 2014     21
தஞ்சாவூரிலே பெரிய கோவிலை ராஜா கட்டிக்கொண்டிருந்தார். எங்கிருந்தெல்லாமோ சிற்பிகள் வந்து வேலை செய்தார்கள். அங்கே வேலை செய்கிறவர்களுக்கெல்லாம் நீர்மோர் கொடுத்து உதவுகிறாள் ஒரு பாட்டி. ஒரு நாள் அந்த பாட்டி, பிரதான சிற்பிக்கிட்டே என்னிடம் ஒரு கல் இருக்கு. "என்னோட உபயமா கோவில் கட்ட வைத்துக்கொள்கிறீர்களா?" என்று கேட்டாள். "கொண்டு வாருங்கள்" என்று வாங்கிக்கொண்டான் சிற்பி. அந்தக் கல் ரொம்ப நாளா மருந்து உரைச்ச கல்...வழுவழுன்னு இருந்தது. அதைக் கூம்பு மாதிரிப் பண்ணி மேலே வைச்சுட்டான் சிற்பி. கச்சிதமா ஆயிடுத்து. கும்பாபிஷேகத்துக்கு நாள் குறிச்சாச்சு. ராஜா சந்தோஷமா சிவபெருமான் கிட்டே "நான் அமைச்சு தந்த கோபுர நிழல்லே விச்சிராந்தியா இருக்கீரா"ன்னு கேட்டான்.   
அன்னிக்கி ராத்திரி சொப்பனத்துலே சுவாமி வந்து "கிழவியம்மா தந்த நிழல்லே ஆனந்தமா இருக்கேன்னார்". ராஜாவுக்கு நித்திரை விலகித்து. தொப்பமா வேர்த்து போச்சு. அடுத்த நாள் சிற்பி கிட்டே போய் "கோபுரத்தை அமைச்சதுலே யாராவது கிழவியம்மா உபகாரம் பண்ணினாளான்னு கேட்டான். ஒரு சின்ன கல்  கொடுத்தா மோர்கார கிழவின்னான் சிற்பி. பாட்டியை அடையாளமும் காட்டினான். கிழவியின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்துட்டான் ராஜா. பகவானுக்கு தெரியும். யார் யார் எப்படின்னு...இந்த லோகத்தை படைச்சவன் அவன். நாம் அதுலே ஒரு தூசி. தூசிகள் யார் கண்ணையும் உறுத்தப்படாது.

28 02 2014     22

விநாயகர் மஹிமை
சிவபெருமானைத் தரிசிக்க வருகிறவர்களையெல்லாம் தன்னையும் தரிசிக்கிறார்கள் என்று ஆதிஷேஷனுக்கு கர்வம் வந்துவிட்டது. அவன் லட்சுமணனா அவதாரம் எடுத்தபோதும், பலராமனா முன்னாலே பிறந்தப்பவும் ஆஞ்சநேயரோட மோதவிட்டு ரசிச்சவர் பகவான். ஏன்னா ஆஞ்சநேயனும் நவ வியாகரண பண்டிதன். பதஞ்சலியா வந்தப்போ அவனுக்காக நாட்டியமே ஆடிக்காட்டினார் சோமசுந்தர பெருமான். திரையைப் போட்டுண்டு பாடம் சொல்லி கொடுத்தவருக்கு கர்வம் வந்துவிட்டதை பகவான் புரிஞ்சுண்டு எடுத்து வீசிவிட்டார். தலை மலைப் பாறையிலே அடிபட்டு ஆயிரம் பிளவாயிடுத்து. அது தான் ஆயிரம் தலை. அவனும் மறுபடி பதவி கிடைக்கிறதுக்காக சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தான். நாரதர் தான் உபதேசம் பண்ணினார்.   
பத்து கைகளோடு சிம்ம வாகனத்திலே சித்தி புத்தி கணபதியாக காட்சி தந்து ஒவ்வொரு பிளவையும் ஒரு தலையாக்கினார். உதரபந்தனமா வயிற்றை சுற்றிக் கட்டிண்டு பழைய மரியாதையையும் கிடைக்கும்படி செய்தார்.   

06 03 2014     23
முன்னேறணும்னு நெனைக்கறது தப்பில்லே. முயற்சி பண்ணணும். பகவானை நினைக்கணும். இப்படி ஒடிண்டே இருந்தா எப்போ பகவானை நெனைப்பே? யாரப் பார்த்தாலும் நேரமில்லேங்கறா. குழந்தைகள், சம்சாரம்னு எல்லோரும் வெளியே போயிடறா. கிரஹஸ்தன் தனியா இருக்கான். என்னடா பண்ணலாம்னு யோசிக்கறான். போன் பண்ணி சிநேகிதனை வரவழைச்சு சீட்டு விளையாடலாமா? இல்லே க்ளப்புக்குப் போகலாமான்னு யோஜனை ஓடறதே ஒழிய கையை காலை அலம்பிண்டு ஸஹஸ்ரநாமம் படிக்கலாம்னு தோன்றதில்லே. திருவிழாக் காரியங்களை இழுத்து போட்டுண்டு செய்யாட்டாலும் முடிஞ்ச வரை ஒத்தாசை செய்யலாமே. நாலு கால் சேர்ந்தா பந்தல். அது போல நாலு நல்லாவா ஒண்ணு சேர்ந்தா நல்ல காரியம் நடக்கும்.

09 03 2014    24

ஒரு மஹான் ஒரு நவரத்ன வியாபாரியோட கிரஹத்திலே பிக்க்ஷை ஏத்துக்க ஒத்துண்டார். பூஜை முடிந்தது. நைவேத்தியம், தீபாராதனை, அன்னதானம் எல்லாம் முடிஞ்சு வியாபாரியும் மஹானும் மட்டும் தனியா இருக்கா. மஹான் கேட்கிறார். "உனக்கு கற்களில் தோஷம் பார்க்கத் தெரியுமா?" "தெரியும் சுவாமி" பவ்யமாக பதில் சொன்னான் வியாபாரி. "தோஷமான கல்லை என்ன செய்வே?" மஹானோட அடுத்த கேள்வி. "நம்ப கடையிலே கல் வாங்கிட்டு பாதகம் ஏற்பட்டா ஜனங்க நம்மளை நம்புவாங்களா? அதனாலே தோஷமான கல்லை ஒதுக்கிடுவேன்" கைகட்டி வாய் புதைத்து பதில் சொன்னான். "இன்னிக்கு அன்னம் ரொம்ப நன்னா இருந்தது. அரிசி மூட்டை என்ன விலை?" இன்னொரு கேள்வி. "நம்ம நிலத்துலே வெளஞ்சது சுவாமி! ரொம்ப உயர்ந்த ரகம். உங்களைப் போல் மாஹான்கள் சாப்பிடற விஷயத்திலே நான் மத்தவாளை நம்பறதில்லே..காய்கறிகளும் அப்படித்தான். சொத்தை, அழுகல் இல்லாமே நானே பார்த்து வாங்கினேன்."
மௌனமாய் கேட்டு கொண்டிருந்தார் மஹான். அவன் பேசி முடிந்ததும்- "அது போலத்தான் அர்ச்சனைப் பூக்களும். வில்வத்திலேயும், துளசியிலேயும் எத்தனை ஓட்டை தெரியுமா? நெறைய அழுகல் பூ இருந்தது. இவன் வீட்டு பூஜையில் தோஷமுள்ள பூக்கள் தான் இருக்கும் என்று பகவான் நினைக்க மாட்டாரா? தேவதைகள் நம்ப வேண்டாமா! பகவானோட நெருக்கத்தை நாடறவா எல்லாத்திலேயும் கவனமா இருக்கணும்" என்றார்.  

11.03.2014   25

செயலற்ற நிலை தம்மொருவரை மட்டும் குறித்த விஷயம். செயல் என்று ஏற்பட்டுவிட்டால் அது பிறரையும் குறித்த விஷயமாகும். செயல் என்று உண்டாகும்போது அந்தச் செயலை புரிபவர் இருப்பதோடு, அச்செயலின் விளைவுக்கு ஆளாகும் ஒருவரும் இருக்கத்‌தான் வேண்டும். நீங்கள் எதைச் செய்தாலும் அதற்கு அன்பு ஒன்றே ஆதாரமாக இருக்க வேண்டும். அன்பின்மீதே செயல்படும்போதுதான் செயல் புரிபவர், அச்செயலால் பாதிக்கப்படுகிறவர் ஆகிய இருவருக்கும் நன்மை விளையும். அன்பே செயலின் ஆதாரம் எனும்போது நான் காந்திய அஹிம்சைத் தத்துவத்தை குறிக்கவில்லை. அஹிம்சைக்கு மாறுபட்ட நடவடிக்கைகள் தேவைப்படுகிற சந்தர்ப்பங்களும் உண்டு. போர்கள் புரிவதற்குக்கூட அவசியம் ஏற்படலாம். ஆயினும் செயலின் தோற்றம் ஹிம்சையாயினும் சரி, அஹிம்சையாயினும் சரி, அச்செயலைப் புரிகிறவனுடைய உள்ளத்தில் அன்பு இருக்க வேண்டும். விருப்பு, வெறுப்பு, கோபம், தீய எண்ணம் இவற்றை அறவே களைந்துவிட்டு அன்பொன்றையே எல்லாச் செயல்களுக்கும் வழிகாட்டியாகக் கொண்டோமாயின் உலகத் தீமைகளில் பெரும்பாலானவை மறைந்தே போகும். இதுவே பாரதத்தின் ஞானிகளும் முனிவர்களும் உலகுக்கு தந்த உபதேசம்.

14.03.2014   26
கர்மாவைப் பண்ணி பூமியிலே ஜெனனமெடுத்த எல்லா சரீரத்திலேயும் பகவான் தன் சக்தியை வைச்சுதான் அனுப்பறார். பாவி, அப்பாவின்னெல்லாம் பாக்கிறதில்லே. மழையும், பனியும், சூரியனும், சந்திரனும், காற்றும் மாதிரிதான் பகவத்கிருபையும். ஏரி, குளம், கிணறு வெட்டினா ஊரில் மழை பெய்யறச்சே நிரம்பறது. பக்தி என்ற குளத்தை, கிணறைத் தோண்டி வைச்சுக்கணும்.
வெய்யிலில் வடாம், அப்பளம், ஊறுகாய் போட்டு உலர்த்தி வைச்சுக்கறா. தீய நெனைப்புகளை தினமும் சூரிய நமஸ்காரம் செய்கிறபோது அழிச்சிடணும். எலிக்கு தினமும் பல் வளர்ந்துண்டே இருக்கும். அது தினமும் எதிலாவது ராவி குறைச்சுக்கும். இல்லேனா எலியின் பற்கள் எலியைவிட பெரிசாக வளர்ந்து பார்க்கவே பயங்கரமாகிவிடும். எலியின் பல் மாதிரி தான் மனசிலே வளருகிற குரோதங்களும். பகவன் நாமாவிலே அதை உரசிக் அப்பப்போ குறைச்சிக்கணும்.   

17 03 2014   27

கசியபரோட பத்தினிகள் கத்ருவும் வினதையும். கத்ருவுக்கு நாகங்கள் பிறந்தன. வினதையின் கரு இரண்டு ஜாடீகளில் இருந்தது. அவசரப்பட்டு திறந்ததாலே அருணன் முடவனானன். சூரியனுக்கு தேரோட்டியானான். 'அவசரப்படாதே! ஜாடீ தானே வெடித்து தம்பி வந்தா உன் கஷ்டம் தீரும்னா'. ஜாடீ வெடிச்சு கருடன் வந்தான். சப்தரிஷிகளிலே ஒருத்தரான கிருதுவோட பிள்ளைகள் வாலகில்யர்கள். கட்டை விரல் அளவு பருமன் உயரம். ஆனா 60000 பேர்கள். ஒரே மரத்திலே தலைகீழே தவம் செய்தவா. மஹா தேஜஸ்விகள்! நாம கட்டை விரல் அளவுக்கு இருக்கோம்னு நினைக்காம கஸ்யப முனிவரோட யாகத்துக்கு சமித்து சேகரிச்சுக் கொடுத்தா. ஆளுக்கு இரண்டுன்னாலும் லட்சத்து இருபதாயிரமாச்சே. கருடன் ஒரு சமயம் வாலகில்யர்கள் தவம் பண்ணின மரத்திலே உட்கார்ந்தான். மரக்கிளை முறிந்த சத்தம். அதுலே தொங்கிண்டிருந்த முனி குமாரர்களை அப்படியே தாங்கி கந்தமாதன பர்வதத்துலே கொண்டுவிட்டான். கிருது புத்திரர்கள் சந்தோஷப்பட்டு தங்களோட தவப்பயனை எல்லாம் கருடனுக்கு கொடுத்துட்டா. கருடன் அதனாலே தான் இந்திரனை ஜெயிச்சு அம்ருதம் கொண்டுவந்து தாயாரை அடிமைத்தனத்திலிருந்து மீட்டான்.
நமக்கு தெரியாம தப்பு நடந்துடலாம். அதுக்கு என்ன நிவர்தின்னு யோசிச்சு செய்யறதை விட்டுட்டு அதிலேர்ந்து தப்பிக்க நினைக்கிறது பாவம். பகவான் பார்த்துண்டே இருப்பார். கருடன் பறந்து போயிருந்தா தவப்பயன் கிடைக்குமா? பகவானையே சுமக்கற பலம் தான் வருமா? அதனாலே சோம்பேறித்தனத்தையும், பயத்தையும் விட்டுட்டு யோசிச்சு செயல்பட்டோம்னா பாதி பிரச்சனைகள் பறந்துபோயிடும்.

20 03 2014    28
சூரியன் அஸ்தமிக்கிற அதே நேரத்திலே சந்திரன் வர்ற நாளைத்தான் பௌர்ணமிங்கறோம். மூணாம்பிறை அதாவது அமாவாசை கழிஞ்ச திரிதியை அன்னிக்கு சந்திரனோட பிரகாசத்தை விசுவேதேவர்கள் கிரஹிச்சுக்கறா. அதனாலே மூன்றாம்பிறையைப் பார்க்கிற வாரிசுகள் மேலே அவளோட பார்வைபடறது. அவா ஆசீர்வாதம் கிடைக்கும். அதனாலேதான் மூனாம்பிறையைப் பார்க்கணும்னு ஏற்படுத்தி வைச்சிருக்கா. பஞ்சமி சந்திரனைத் தரிசனம் பண்ணினா ஜலரோகங்கள் வராது. வந்திருந்தவாளுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக குணமாகும். நவமி சந்திரனைப் பார்க்கும்படி ஏற்பட்டால், சிவனை தரிசனம் பண்ணனும். வளர்பிறை தசமியன்னிக்கு சந்திர தரிசனம் பண்ணினால் வியாதிகள் குணமாகும். திரியோதசி சந்திரன் ஐஸ்வர்யத்தைக் கொடுப்பார். ஏன்னா அன்னிக்கு குபேரன் சந்திரக் கலையிலுள்ள அம்ருதத்தை  ஆகர்ஷிச்சுகிறார். அமாவாசைக்கு முந்தின ராத்திரி பிதுர்க்கள் சந்திர கலையை பருகறா. அதனாலே தான் பூலோகத்துக்குப் பக்கத்திலே வந்திருக்கிற பிதுர்க்களுக்கு மறுநாள் காலையிலே தர்ப்பணம் பண்ணி ஆசீர்வாதம் வாங்கிக்கறோம்.

23.03.2014    29

இராம அவதாரத்திலே அனுமாருக்கு அவரோட பலத்தை ஞாபகப்படுத்தின ஜாம்பவான், சஞ்சீவி பேரையெல்லாம் சொன்னவர். ராமரை மாப்பிள்ளையாக்கிக்கணும்னு ஆசைப்பட்டார். இந்த ஜென்மாவுலே முடியாது, அடுத்த ஜென்மத்துலே உன் ஆசையை நிறைவேத்தறேன்னார் ராமர். அந்த ஜாம்பவான் அமிர்தம் கடையவே ஒத்தாசை பண்ணினவர். அதனாலேதான் ரொம்ப பழைய சாமானை ஜாம்பவான் காலத்ததுன்னு சொல்ற வழக்கம் வந்தது. அந்த ஜாம்பவான் கிருஷ்ணர் காலத்திலேயும் இருக்கார். சிங்கத்தோட சண்டைபோட்டு ஜெயிச்சு மணியைக் கொண்டுவந்து தன் பிள்ளையோட தொட்டிலுக்கு மேலே கட்டினார். தாதா உக்கிரசேனருக்காக அந்த மணியைக் கொடுன்னு ஒரு தடவை கிருஷ்ணர் கேட்டார். தம்பியைக் கொன்று அந்த மணியை ஏன் கிருஷ்ணரே எடுத்துண்டிருக்கக்கூடாதுன்னு ராஜா சத்ராஜித் புலம்பினார். ஊரிலேயும் இதே பேச்சு. பழியைத் துடைக்கறத்துக்காக கிருஷ்ணர் ஒரு சின்ன படையோட காட்டுக்கு போனார். பிரசேனன், அவன் ஏறிண்டு வந்த குதிரை இரண்டும் செத்து கிடந்தது. அங்கிருந்த சிங்கத்தோட காலடியைத் தொடர்ந்து நடந்தார். கொஞ்ச தூரத்திலே சிங்கமும் செத்து கிடந்தது. பக்கத்திலே கரடி காலடி இருந்தது. மணி அங்கேயும் அகப்படலே. கரடியோட காலடியைத் தொடர்ந்தார். கரடியோட குகை வாசல்லே கூட வந்தவாளை நிறுத்திட்டு தான் மட்டும் உள்ளே போனார். ஏழெட்டு நாள் கழிஞ்சதும் கூட வந்தவா கிருஷ்ணர் செத்துட்டார்னு துவாரகைக்கு திரும்பி போயிட்டா. ஒருத்தருக்கு கூட உள்ளே போய் பார்க்கிற தைரியம் இல்லே. சுயநலம் எப்பவுமே நல்லது செய்யாது. இராமாயணத்திலே சுக்ரீவன் வாலி செத்துட்டான்னு குகை வாசலை மூடினான். இங்கே அப்படி செய்யல்லே. இருபத்தோரு நாள் சண்டை நடந்து ஜாம்பவான் சரணாகதியடைஞ்சுட்டார். பகவான் ராமனாக காட்சி தந்தார். ஜாம்பவான் தன்னோட பெண்ணை ஜாம்பவதியை அவருக்கு கல்யாணம் பண்ணி கொடுத்து சியமந்தக மணியோட அனுப்பினார்.  
கிருஷ்ணர் ராஜாகிட்டே "உயர்ந்த பொருளை பத்திரமாக வைச்சுக்கணும். இனிமேலாவது பொறுப்பில்லாதவா கிட்டே கொடுத்துட்டு அப்பாவி மேலே பழி போடாதேன்னார்".     

26 03 2014   30 


'சூரியன் பிறந்தான்' என்று யாரும் சொல்றதில்லே! ஏன்னா தினமும் தோன்றும் சூரியன் புதுசா பிறக்கறதில்லே. நேற்று மாலை மறைஞ்சவன் இதோ மறுபடியும் உதித்துவிட்டான். அதுபோல சனத்குமாரனாக இருந்து வேதாந்தங்களை கரைச்சுக்குடித்தவன், ப்ரம்மண்யத்தை வளர்க்க சுப்ரமண்யமாக அவதரிச்சான். 'சு' என்றாலே சுபம், சுகம் என்று அர்த்தம். 'கந்தம்' என்றால் வாசனை. சுகந்தம் என்றால் வாசனை மேலும் சிறப்படைகிறது. ப்ரமண்யத்திற்கு விஷேஷத்தை தந்ததால் கார்த்திகேயன் சுப்ரமண்யனானான். சுப்ரமண்யரின் அவதாரம் தான் ஞான சம்பந்தர். "வேத வேள்வியை நீந்தனை செய்துழல் ஆதாமிமல்லியமண்" என்றும் மறை வழக்கமிலா மாபாவியர்" என்றும் சம்பந்தரே சொல்லியிருக்கிற சமணர்களை வென்று வைதீகத்தையும் சைவத்தையும் நிலைநாட்டத்தான் அவர் அவதாரம் பண்ணினார். இல்லாட்டா அம்பாள் அவருக்கு பால் கொடுத்திருப்பாளா?
ப்ரம்யண்யத்தை-வைதீக தர்மத்தை வாழ வைப்பதை லட்சியமாகக் கொண்டதினால் தான் 'வாழ்க அந்தணர்' என்கிற தேவாரப் பாடலால் சமணரை ஜெயித்தார். சமணர்கள் 'விப்ரக்ஷயம்'ன்னு எழுதி ஆற்றில் போட்டார்கள். விப்ரக்ஷயம் என்றால் பிராமணன் ஒழிக என்று அர்த்தம். அதை வெள்ளம் அடித்து கொண்டு போயிற்று. சம்பந்த பெருமான் 'வாழ்க அந்தணர்' என்று ஆரம்பிக்கும் பாடலை எழுதிப் போட்டார். ப்ராம்மண்யம் இருந்தால்தான் லோகத்துக்கு க்ஷேமம்னு அவர் திட்டவட்டமாக நினைச்சார். அதற்காக யாகம் செய்துண்டு வேதம் ஓதிண்டு இருக்கறவா மட்டும் நன்னா இருக்கணும்னு நினைச்சாரா? "வையகமும் துயர் நீங்கவே"ன்னு முடிக்கிறார். எல்லாரும் க்ஷேமமாயிருக்கணுங்கறது தான் அவர் நோக்கம்.

(CONTINUED in Part IV)

No comments:

Post a Comment