Popular Posts

Thursday, January 15, 2015

SREE MAHAPERIYAVALIN ARULVAKKU PART VII

ஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வாக்கு பாகம் 7
(continuation of Part 6)




02 08 2014   61
பிரம்மாவோட வாகனம் அன்னபட்சி. அன்னம் பாலையும், நீரையும் பிரித்து பாலை மட்டும் குடிக்கும் அற்புத சக்தி கொண்டது.   பிரம்மாவும் நல்லது கெட்டதுகளைப் பிரிச்சுப் பார்த்து அவாவாளுக்கு ஏத்தபடி படைக்கிறார். நான்கு வேதங்களும் பிரம்மனது நான்கு தலைகள், பிரதான முகத்தின் இரண்டு கண்களும் சூரிய, சந்திரன். அவரது நாசியிலே இருந்து புறப்பட்டே வாயு தன் பணியைத் தொடங்குகிறான். தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் நான்கும் அவரது நான்கு கைகள். ஒரு கையில் வேதச்சுவடிகள். அடுத்த கையில் ஜபமாலை. மற்றொரு கையில் கருவா என்ற கருவி. நான்காவது கரத்தில் கமண்டலம். இவை மனம், புத்தி, அகங்காரம், சித்தம் இவற்றை உணர்த்துகின்றன.    
திருமாலுக்கும், பசுபதீஸ்வரருக்கும் ஆலயமும், வழிபாடும் இருக்கிறதே என்று பிரம்மன் பொறாமை கொண்டதில்லை. உத்யோகத்தில் இருப்பவர்கள் வேலை நிறுத்தம் செய்யாமல் பிரம்மாவைப் போல் கடமையை செய்ய பழகணும்.

06 08 2014     62
உணர்ச்சிகளற்று சிலையாய் அமர்ந்திருப்பவர்களைப் 'பரப்பிரம்மம்' என்கிறோம். 'பிரம்மமாயிருக்கா' என்கிறோம். சிவனாயிருக்கான், விஷ்ணுவாயிருக்கான், முருகனாயிருக்கான், அம்பாளாயிருக்கான், காணபதியாயிருக்கான் என்றெல்லாம் சொல்றதில்லே. அந்த தெய்வங்களுக்கெல்லாம் கோயில் இருக்கு. திருவிழா இருக்கு. பண்டிகை இருக்கு. பிரம்மாவுக்கு அதெல்லாம் கிடையாது. ஆனாலும் அவர் பாட்டுக்கு கடமையைச் செய்துண்டு இருக்கார். கோபிச்சுண்டு படைப்புத் தொழிலை நிறுத்தலே. பரமசிவனையும், விஷ்ணுவையும் போல தபஸ் பண்ணினவாளுக்கு வரம் தரும் சக்தியும் அவர் கிட்டே இருக்கு. அவர் தலையை கிள்ளின சங்கரனையும் அவர் பழிவாங்கலே. சிவன் பிள்ளை முருகன் தலையில் குட்டிச் சிறையில் தள்ளினதற்காகவும் வன்மம் வெச்சுக்கலே. சிறையிலே இருந்து விடுதலை பண்ணி 'மறுபடியும் படைப்பு தொழிலை நடத்து' என்ற போதும் அதுக்கும் 'சரி' என்கிறார்.

அதனாலே கோபத்தையும், பழி வாங்கற குணத்தையும் விட்டவாளை 'பிரம்மம்' என்கிறார்கள்.   

12 08 2014   63
கணபதி ஹோமம்னா அப்பம், கொழுக்கட்டை, கரும்பு, பழ வகைகள், அவல், பொரி எல்லாம் சமர்பிக்கிறோம்.  இது சுவைக்காக. அக்னி ஒளி. பழங்கள், பூக்கள், நெய், ஹவிஸ் இதெல்லாம் வாசனை; மந்திர வேத சப்தங்கள் ஓசை- நம்மோட ஐம்பொறிகளும் பகவான் விஷயத்துக்குப் பயன்படறதே பெரிய ஹோமம் தான். கை நெய்யையும், ஹவிசையும் சேர்த்து அக்னியிலே போட, கண் நன்னாத் தெரியணும். வியாதி வராம தேகம் ஒத்துழைக்கணும். வாய் மந்திரம் சொல்லணும். நாம சொல்லற மந்திர ஒலி நம்ம காதுலே கேட்டாத்தான் நம்ம ஆத்மா திருப்தியடையும். வேத மந்திரங்களை, உபந்யாசங்களை இரண்டு காதுகளாலேயும் வாங்கி மனசிலே நிரப்பிக்கணும். மனசு நிர்மலமாயிருந்தாதானே இதையெல்லாம் நிரப்பிக்கலாம். கெட்ட எண்ணம் வராமல் இருக்கறது மட்டுமே சுத்தமான மனசு ஆகாது. 

18 08 2014    64
காசியிலே ஆதிசங்கரர் கிட்டே சிவபெருமான் சண்டாளனாக எதிர்ப்பட்டபோது, கூட நாலு வேதங்களும் நாய்களாக வந்தன. தத்தாத்ரேயர் படத்தை பார்த்தேள்னா நாய் இருக்கு. இந்திரன் நீச வடிவத்திலே உத்தவருக்கு அமிர்தம் கொடுக்கறபோதும் வேதங்களை நாய் வடிவிலே கூட்டிண்டு வருகிறான். இதிலிருந்து நாய் பிறப்பு கேவலமில்லைன்னு ஆகிறது. நாய் நன்றியுள்ளதாச்சே. வேதங்களை உபாசிக்கறவாளுக்கும் வேதம் நல்லதே செய்யுங்கறதை புரிஞ்சுக்கணும். வேதம் மனுஷாளுக்கு காவல் மட்டுமில்லே. நல்ல துணையாகவும் இருக்கும்.

24 08 2014  65
மானசீக பூஜை பண்றப்போ மனசுதான் எஜமானனாய் இருக்கணும். கெட்ட வார்த்தகளை காது வாங்கி மூளைக்கு அனுப்பிடாம வெளியே துரத்தணும். கண் கண்டதையும் வாங்கி உள்ளே ரசிக்க அனுமதிக்கபடாது. ஏன்னா பூஜை சமயத்திலே பகவானைக் கண் பார்க்கும். கை பூ எடுத்து போடும். வாய் ஸ்லோகம் சொல்லும். மனது மட்டும் சிலதை ரசிச்சிண்டிருக்கும். இது தெய்வம் தண்டிக்குமே என்கிற பயத்தாலே செய்கிற சடங்காயிடும். தேரை எத்தனை அலங்கரிச்சாலும் அதுக்குள்ளே ஸ்வாமி இருந்தாதான் அழகு.

02 09 2014    66
புண்யஸ்ய பலம் இச்சந்தி
புண்யம் தேச்சந்தி  மானவா:
என்றார் ஒரு பெரியவர். "புண்ய காரியத்தில் பலன் மட்டும் வேண்டுமென்பது மனித ஸ்வபாவம். ஆனால் அதுகளுக்கான சாதனத்தை (வழிகளை, அதாவது மரம் நடுவது, இந்திரன், வருணன் ஆகியோரை வணங்குவது, யாகம் செய்வது, நற்காரியங்களை  செய்வது, நல்லவர்களாக நடந்து கொள்வது) செய்வதில்லை." நம்மைப் படைத்த தெய்வமும், அதன் ஆக்ஞையான வேதங்களும் ஸ்மிருதிகளும், புராணங்களும், ஆசாரியார்களும் இவ்விஷயமாக நமக்கு உபதேசித்ததென்ன?    
உலக சிருஷ்டி கர்த்தாவாகிய பகவானாலேயே தேச க்ஷேமார்த்தமாக நமக்கு அருளப்பட்ட உயர்ந்த சாதனத்தை மறந்து விட்டோம். ஏன்? அதை நிந்தை செய்யக் கூடத் துணிந்து விட்டோம். அதனால் இந்த தர்ம தேசம், தெய்வ சாபம் பெற்றுப் பாழாகி வருகிறது. இதை நிவர்த்திக்க வேண்டுமானால் தெய்வத்தைச் சரணடைந்து அவர் கட்டளையை நிறைவேற்ற வேண்டும்.  
அது தான் சகல சக்தியும் வாய்ந்த உத்தம தர்மமாகிய நமது யக்ஞங்கள்.

07 09 2014   67
"ஸ்வாமி ஒருவர் தானே! உங்களுக்கு மட்டும் என்ன முப்பது முக்கோடி தேவதைகள்?" என்று மற்ற மதஸ்தர்கள் நம்மைப் பரிகாசம் செய்கிறார்கள். ஸ்வாமி ஒருவர் தான். அவரைத் தான் நாம் பேச்சு வழக்கில் 'தெய்வம்', 'தெய்வம்' என்கிறோம். தெய்வம் என்றால் விதி என்றே அர்த்தம். நாம் சுவாமி என்ற அர்த்தத்தில் அந்த பதத்தை உபயோகிக்கிறோம். தெய்வமும் தேவர்களும் ஒன்றுயென்று நினைத்துக்கொண்டு 'முப்பது மூன்று கோடி தெய்வமாவது?' என்று நாமும் மற்ற மதஸ்தர்களோடு சேர்ந்து கொண்டு  கேலியாக எண்ணுகிறோம். "தெய்வம் வேறு, தேவர்கள் வேறு, ஸ்வாமி ஒருவர் தான்!" என்பதே நமது மதம். அவரே மூன்று ரூபங்களை எடுத்துக்கொண்டு பிரம்மாவாகச் சிருஷ்டிக்கிறார்; விஷ்ணுவாகப் பரிபாலிக்கிறார்; ருத்திரனாக சம்ஹாரம் செய்கிறார். உண்மையில் இவர்களும் வேறு வேறு இல்லை.  

கோர்ட்டுக்கு போகும்போது தாசில்தார் சூட்டுப் போட்டுக்கொண்டு இருக்கிறார். பூஜை செய்யும் போது அவரே பஞ்சகச்சம் கட்டிக் கொள்கிறார். பத்தினி அகத்தில் இல்லாமால் அவரே சமையல் செய்யும்போது துண்டை மட்டும் இடுப்பில் சுற்றிக் கொள்கிறார். நாம் சாமானிய ஜீவர்கள்- வேலைக்கு தகுந்தபடி உடுப்பை மட்டும் மாற்றிக்கொள்கிறோம். சர்வ சக்தனனான ஸ்வாமி வேலைக்கு ஏற்ப ரூபத்தையும் மாற்றிக்கொள்வார். 

14 09 2014     68
உயிரினங்கள் பலவற்றைக் நாம் நேருக்கு நேர் கண்ணால் பார்க்கிறோம். நாம் மனித இனம். இன்னும் விலங்கினம், புள்ளினம், தாவர இனம் என்று பலவற்றைப் பார்க்கிறோம். சிருஷ்டியில் கீழே போகப் போகக் கிரியா சக்தி அதிகம். யானை, சிங்கம் போன்ற பலம் மனிதனுக்கு இல்லை. ஒரு குருவியை போலவோ, தேனியைப் போலவோ, கூடுகட்ட இவனுக்கு தெரியவில்லை. ஆயினும் அவற்றைவிட மனிதனுக்கு ஞான சக்தி அதிகம். கிரியா சக்தி, ஞான சக்தி இரண்டுமே மிக அதிகமாகப் படைத்த உயிரினங்களுக்குத் தேவர்கள் என்றும் பெயர். மனிதர்களுக்கு உள்ளேயே race இனம் இருப்பது போல் தேவர்களுக்கும் கின்னரர், கிம்புருஷர், யக்ஷர், சித்தர், சாரணர், கந்தர்வர் என்று பல வகைகள் உண்டு. தேவர்களை ஊனக் கண்களால் பார்க்க முடியவில்லை. அதனால் இல்லை என்று சொல்லிவிடக்கூடாது. காற்று கண்ணுக்குத் தெரியாதது போல், அவர்கள் தெரியாமல் இருக்கிறார்கள். ஆனால் விசிறிக் கொண்டால் காற்றை நாம் அனுபவிப்பது போல, கர்மானுஷ்டங்களைச் செய்தால் தேவர்களின் அநுக்கிரகத்தை அனுபவத்தில் நிச்சயமாகப் பெறலாம். 


21 09 2014     69
நாம் கர்மானுஷ்டானம் செய்வதற்கும், தேவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்கள். ராஜாங்கம் நியமித்துள்ள அதிகாரிகளுக்கு ராஜாங்கம் சம்பளம் தருகிறது. ஆனால் சம்பளம் தருவதற்கு ராஜாங்கம் எங்கிருந்து பணம் பெற்றது? பிரஜைகளிடம் இருந்துதான் வரியாகப் பெறுகிறது. அப்படியே ஸ்வாமி நம்முடைய கர்மானுஷ்டங்களில் இருந்தே தேவர்களுக்கு வேண்டிய ஆகாரத்தை பிரித்து தருகிறார். நமக்கு பஞ்ச பூதங்களை அனுகூலமாக்கித்ரும் தேவர்களுக்கு பிரதியாக நாம் யாகம், யக்ஞம் செய்து ஆகாரம் தருகிறோம். கர்மானுஷ்டான வரி செலுத்தினாலே தேவ அதிகாரிகளின் சகாயத்தை பெற முடியும். பல விதமான உயிரினங்களில் புழுவுக்கும் மனிதனுக்கும் இடையில் எத்தனை வித்தியாசம் இருக்கிறது? மனிதனுடைய பழக்கங்களை புழு புரிந்து கொள்ள முடியுமா? அப்படியே தேவர்களின் வழி முறைகளை நாம் புரிந்து கொள்ள முடியாது. தேவ வகையை சேர்ந்தவர்களுக்கு நம்மைப் போல் மூப்பு, மரணம் இவை இல்லை. அவர்களுக்கு நம்மை விட சக்தி மிகவும் அதிகம். இருந்தாலும் அவர்கள் நம்மிடமிருந்தே ஆஹூதி பெறுமாறு பகவான் வைத்திருக்கிறார்.
Top of Form


25 09 2014     70
உயிரினத்தில் உச்ச நிலையில் உள்ள தேவர்களுக்கு மூன்று ரூபங்கள் உண்டு. தேவலோகத்தில் ஒவ்வொரு தேவதையும் திவ்விய சரீரத்துடன் இருப்பதை ஆதிதைவிக ரூபம் என்பார்கள்.   மனிதர்கள் தபசினால் பெரிய சக்தி பெற்றுவிட்டால் இந்த தேவ ரூபங்களைப் பார்த்து பேசமுடியும். தேவர்கள் தேவலோகத்தில் ரூபத்துடன் இருப்பது மட்டுமல்ல, பஞ்சபூதங்களில் கரைந்தும் அரூபமாக இருப்பார்கள். இவ்வாறு பூதங்களில் கரைந்து இருப்பதற்கு ஆதிபௌதிக ரூபம் என்று பெயர். எல்லா ஜலத்திலும் வருணனின் ஆதிபௌதிக ரூபம் கரைந்திருக்கிறது. எனவே எங்கே நாம் ஜலத்தை அசுத்தம் செய்தாலும் அவனுக்குத் தெரிந்துவிடும். நம் ராஜாங்க அதிகாரிகளுக்கும், ஈஸ்வரனின் அதிகாரிகளான தேவர்களுக்கும் இது பெரிய வித்தியாசம். நாம் பெட்டிஷன் கொடுத்தால் தான் ராஜாங்க அதிகாரிகளுக்கு குற்றம் தெரியும்.   ஆனால் எந்த இடத்தில் எந்த பாபம் செய்யப்பட்டாலும் அது ஆங்காங்கு கரைந்திருக்கிற குறிப்பிட்ட தேவதைக்கு தெரிந்துவிடும். நம் உடம்பிலே ஒருவர் கிள்ளினால் பெட்டிஷன் கொடுத்தா அது நமக்கு தெரிய வேண்டும்? அது போல அத்தியாத்மிகம் என்றும் தேவர்களுக்கு மூன்றாவதாக ஒரு ரூபம் உண்டு. அதாவது பிராணிகளின் ஒவ்வொரு அங்கங்களிலும் ஒவ்வொரு தேவதை தங்களுக்கு வாசஸ்தானம் வைத்திருக்கிறார்கள். மனிதன் இழைக்கிற குற்றத்துக்கு ஆளாகும் பஞ்சபூதங்கள்  குற்றம் செய்கிற அங்கங்களிலும் இருப்பதால் தேவர்களை ஏமாற்ற முடியாது. தர்மங்களை மீறாமலும், கர்மங்களை அனுஷ்டானம் பண்ணிக் கொண்டும் இருக்கிற வரைதான் அவர்கள் நம்மை ரக்ஷிபார்கள். இல்லாவிட்டால் சிக்க்ஷிக்கவே செய்வார்கள்.

(CONTINUED in  Part VIII)


No comments:

Post a Comment