Popular Posts

Monday, January 19, 2015

SREE MAHAPERIYAVALIN ARULVAKKU PART X

ஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வாக்கு பாகம் 10
(Continuation of Part 9)


03 12 2014      91
மழயை உண்டாக்கறது சூரியனோட நானூறு கிரணங்கள். ஹலாதினீன்கற முப்பது கிரணங்கள் பனியைக் கொடுக்கிறது. வஸந்தருது, கிரீஷ்ம ருது இரண்டிலேயும் முன்னூறு கிரணங்கள் ஒளி கொடுக்கறது. சரத்ருது, வர்ஷருது இரண்டிலேயும் நானூறு கிரணங்கள் பிரகாசத்தைத் தர்றது. ஹேமந்தருது, சிசிரருது இரண்டுக்கும் முன்னூறு கிரணங்கள் போஷணை பண்றது. உதயமாகறப்போ ருக் வேத புருஷனா இருக்கார். மாத்யான்னீகத்திலே யஜூர் வேத ரூபமாயிருக்கார். சாயாறட்சையிலே சாமவேத சொரூபியாயிருக்கார். க்ஷணம், முஹூர்த்தம், நாழிகை, பகல், இரவு, பக்ஷம், மாசம், ருது, அயனம், வருஷம் இதெல்லாம் சூரியனாலே தான் கணக்கிடப்படறது.
  
தீர்த்தானாம் பரமம் தீர்த்தம் மங்களானம் ச மங்களம் I
பவித்ராணாம் பவித்ரம்ச ப்ரபத்யேஹம் திவாகரம் II

இந்த ஸ்லோகத்தைச் சொல்லி, தினமும் முடிஞ்சவரை சொல்லி சூரிய நமஸ்காரம் பண்றவன் பாபங்களெல்லாம் தீர்ந்து முடிவில் மோட்சத்தை அடைவான். இதை நான் சொல்லலை. பிரம்மா சொல்லியிருக்கார். 

04 12 2014     92
மனம் ஒரு பூதம் போன்றது. விக்ரமாதித்தன் கதையில் சொல்லப்பட்ட வேதாளத்தைப் போன்றது. வேதாளம் கட்டுப்பட்ட பின்பு எவ்வளவு காரியங்களைச் செய்ததோ, அதைப் போலவே மனமும் செய்யும். அந்த மனத்தை ஸ்வாதீனப்படுத்துவதுதான் யோகமென்பது. அந்த யோகத்திற்கு அங்கம் அஹிம்சை. மனத்தை வசப்படுத்தியவர்கள், 'அஹிம்சையை அனுசரித்தோம், மனம் வசப்பட்டது' என்கிறார்கள். நித்தியம் மனத்தினாலும், வாக்கினாலும், உடம்பினாலும், பணத்தினாலும் நல்ல காரியங்களைச் செய்துவர வேண்டும். நமக்கு கிடைக்கும் பணத்தில் ஒரு தம்பிடியையாவது ஒவ்வொரு நாளும் தர்மத்துக்காக உண்டியல் கட்டிப்போடவேண்டும். அந்த பணத்தை குடும்பத்துக்கு பிரயோசனப்படுத்தாமல் தர்மத்துக்கு விநியோகப்படுத்தவேண்டும். நம்முடைய பணமெல்லாம் நம்முடையதல்ல என்ற ஞாபகம் இருக்க வேண்டும். இந்த உடம்பு போனவுடன் அது நம்முடைய சம்பந்தத்தை விட்டுவிடும். அந்த பணத்தை நம்முடையதாகச் செய்ய வேண்டுமானால் நாம் எங்கே போனாலும் செல்லக் கூடிய நோட்டாக மாற்ற வேண்டும். மேலுலகத்தில் இந்த நோட்டு செல்லாது. இந்த நோட்டை தர்ம நோட்டாக மாற்றிவிட்டால் அது எங்கேயும் செல்லும். அப்பொழுது இந்த பணமும் நமக்கு சொந்தமாகும். ஆகையால் குழந்தை முதல் பெரியவர்கள் வரையில் தனித்தனித் தர்மத்துக்காக ஒவ்வொரு உண்டியல் வைத்துக் கொள்ளவேண்டும். நாம் பிறந்தது முதல் இந்த மாதிரி பழக்கங்களை வைத்து கொண்டிருந்தால் இதற்குள் எவ்வளவோ செய்து இருக்கலாம். நம்முடைய காரியத்தை நாம் மறந்து விட்டோம். குழந்தைகளுக்கென்றே இப்போது தர்ம உண்டியல் ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்காக இன்சூர் செய்வது இல்லையா? இந்த இன்சூரன்ஸ் இந்த பிறவிக்கு பின்பும் (ஆஃப்டர் லைஃப்) உபயோகப்படுமாதலால், இதை வாழ்வுக்குப் பிறகுமுள்ள க்ஷேம நிதி (ஆஃப்டர் லைஃப் இன்சூரன்ஸ்) என்று கருத வேண்டும். 

07 12 2014      93
ஒரு மலையடிவாரத்தில் நாம் இருக்கிறோம். நம்முடைய கையில் ஆயிரம் ரூபாய் பணம் இருக்கிறது. அவ்வளவும் அரையணாக் காசாக இருக்கிறது. அப்பொழுது திருடர்கள் வருகிறார்கள். பலமான கலகம் நடக்கும் போலிருக்கிறது. மலை மேல் ஏறி அப்புறம் போய்விட்டால் நமக்கு பயமே இல்லை. அப்பொழுது ஒருவன் வந்து இந்த ஆயிரம் ரூபாய்க்கும் நோட்டு வேண்டுமா என்று கேட்கிறான்! நாம் என்ன செய்வோம்; உடனே அவனிடம் சில்லறை மூட்டையை தள்ளிவிட்டு ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்கிக் கொண்டு மலையேறி போய்விடுவோம். ஆனால் அந்த நோட்டு மலைக்கு அப்புறமுள்ள தேசத்தில் செல்லும் நோட்டாக இருக்க வேண்டும். உடம்பிருக்கும் பொழுது உபயோகப்படக்கூடிய காரியங்களைத் தவிர அதற்கு பின்பும், பலகோடி வருஷங்களுக்கும் எப்பொழுதும் உபயோகப்படக்கூடிய காரியங்களாக நாம் செய்ய வேண்டும். இந்த ஊர் நோட்டு ருஷ்யாவில் செல்லாது. எல்லா ஊருக்கும் ஒரு ராஜா இருந்தால் அவனுடைய முத்திரையுள்ள நோட்டு எங்கும் செல்லும். இந்த பதினான்கு லோகங்களுக்கும் ஒரு ராஜா இருக்கிறான். அவன் தான் பரமேஸ்வரன். அவனுடைய சகல ராஜ்யங்களிலும் செல்லும் நோட்டு ஒன்று இருக்கிறது. அது எப்பொழுதும் எவ்விடத்திலும் செல்லும். அது எது? அது தான் தர்மம்.

13 12 2014      94
பக்தியின் லட்சணத்தையும் பகவத் பாதர்கள் சிவானந்த லஹரியில் வெகு அழகாக வர்ணித்திருக்கிறார். ஐந்து உதாரணங்களைக் கொடுத்து வர்ணித்திருக்கிறார். "அழிஞ்சில் விதை எப்படித் தாய் மரத்துதானே ஒட்டிக் கொள்கிறதோ, ஊசி எப்படிக் காந்தத்தால் கவரப்படுகிறதோ, பதிவிரத்தை எப்படித் தன் பத்தியின் நினைவிலேயே ஆழ்ந்திருக்கிறாளோ, கொடி எப்படி மரத்தைத் தழுவி வளருகிறதோ, நதி எப்படி சமுத்திரத்தில் கலக்கிறதோ, அப்படியே பசுபதியின் பாதாரா விந்தங்களில் சதா சர்வ காலமும் மனத்தை அமிழ்த்தியிருப்பதுதான் பக்தி என்பது!" என்கிறார் ஸ்ரீ ஆசார்ய சுவாமிகள்.  
ஏறு அழிஞ்சில் என்று ஒரு மரம் உண்டாம். அதன் காய் முற்றியவுடன் பூமியில் விழுந்து உடையும். உடனே உள்ளே இருக்கிற விதைகள் ஏதோ ஆகர்ஷ்ண சக்தியால் நகர்ந்து வந்து மறுபடியும் தாய் மரத்தோடேயே ஒட்டிக் கொள்ளும். ஒட்டிக்கொண்ட பின் மூலமான மரத்துக்குள்ளேயே மறைந்து விடும் என்கிறார்கள். பகவானிடமிருந்து பிரிந்து வந்திருக்கிற நாம், இப்படியே எப்போதும் அவன் பக்கமாக நகர்ந்து நகர்ந்து போய், முடிவில் அவனிடம் ஓட்டிக்கொண்டு ஒன்றாகி விடவேண்டும். ஊசி காந்தத்தை நோக்கிப் பாய்ந்து ஒட்டிக் கொள்வது அடுத்த உதாரணம். காந்தததில் சேர்ந்த ஊசிக்கும் காந்த சக்தி உண்டாகி அது மற்ற இரும்பு பொருட்களை இழுப்பது போல், பக்தனுக்கும் பகவானின் குணங்களும் சக்திகளும் உண்டாகும் என்று இந்த உதாரணத்தால் காட்டுகிறார். அடுத்தது பதிவிரதையின் உதாரணம். பதிவிரதையின் நினைவு, பேச்சு, காரியம் அனைத்தும் பதியை சுற்றியே இருப்பது போல், நம் மனோ, வாக்கு, காரியங்கள் பகவானையே பற்றி இருக்க வேண்டும் என்பது இதிலிருந்து தெரிகிறது. பதியை மூல ஸ்லோகத்தில் 'விபு' என்கிறார். சர்வ வியாபகன் என்பது இதன் பொருள். இதனால் பகவான் ஏதோ ஓர் இடத்தில் மட்டும் இல்லாமல் எங்குமாக, எல்லாமாக இருப்பதாகப் பாவிக்க வேண்டும் என்று உணர்த்துகிறார். அடுத்த படியாகக் கொடியின்
உதாரணம். கொழுகொம்பைச் சுற்றிக்கொள்கிற கொடியை நாம்  
சிறிது விலக்கிப் பிரித்துவிட்டால் கூட அது படாதபாடுபட்டுக் கொஞ்ச நேரத்திலே மறுபடியும் கொம்பை வளைத்து சுற்றி கொண்டு விடும். நம் மனசை ஈஸ்வர ச்மரணியிலிருந்து அழைக்கழிக்கிற இடைஞ்சல்கள் எத்தனை வந்தாலும், நம் லட்சியத்தைப் பிடிவாதமாகப் பிடித்திருக்க வேண்டும் என்பதை இந்த திருஷ்டாந்தம் உணர்த்துகிறது.  கடைசியில் நதி சமுத்திர உபமானம். இதுவே பரம அத்வைதம். கடல் நீர் தான் மழையாக விழுந்து பிறகு ஆறாகியிருக்கிறது. இரண்டும் வேறு அல்ல. ஒரு நதியானது எந்த மலை உச்சியில் பிறந்தாலும் அலுக்காமல் சளைக்காமல் ஓடி வந்து கடைசியில் கடலில் கலந்து, தன்னுடைய தனி பெயரையும் உருவத்தையும் இழந்து கடலாகவே ஆகி விடுகிறது. கடல் அதை எதிர்கொண்டு, அக்கடல் எதிர்க்கிறது. இதனால் தான் நதி சங்கமங்களுக்குச் சிறிது தூரம் இப்பாலே அந்த ஆற்றின் ஜாலம் உப்புக்கரிக்கிறது. இப்படியே நாமும் உண்மையான பக்தி செலுத்தினால் கருணா சமுத்திரமான பகவான் முன்னே வந்து நம்மை ஆட் கொண்டு தானாக்கி கொள்வான்.

15 12 2014      95
கார்த்திகை சோமவாரம் 
சிவனுடைய விரதங்களிலே சிறந்தது சிவராத்திரி. மாசி மாதத்துலே வருகிற கிருஷ்ணபட்ச சதுர்த்தியன்று அர்த்த ராத்திரி வரை ஒருவன் ருத்திர பாராயணம் பண்ணி சிவலிங்கத்துக்கு அபிஷேகம் பண்ணினால் மகாபாபங்களும் நிவர்த்தி ஆகிறது. சூர்ய அஸ்தமனமானதும் ஸ்நானம் பண்ணனும். துவைத்து உலர்த்திய வஸ்திரத்தைத்தான் கட்டிக்கணும். அந்தக் காலத்திலே ஒவ்வொரு ஜாமத்திலேயும் மண்ணாலே லிங்கம் பண்ணித்தான் பூஜை பண்ணுவா. களிமண் லிங்கத்துக்குத் தான் அபிஷேகம் நடக்கும். லிங்கம் கரையாமல் அப்படியே இருக்கும். ஒவ்வொரு ஜாம பூஜையும் ஒவ்வொருவிதமாக நடத்தறது விஷேஷம். அவாவா சக்திக்கு ஏற்றபடியும் பூஜை பண்ணலாம். ஸ்ரீம் பவாய நம: ஸர்வாய நம: ருத்ராய நம: பசுபதையே நம: மஹாதேவாய நம: பீமாய நம: ஈசானாய நம: பரமாத்மனே நம
என்கிற 
அஷ்ட மந்திரங்களையாவது சொல்லி பூப்போட வேண்டும். பூஜை சீக்கிரமே முடிந்துவிட்டால் பிறரைப் பற்றி வம்பு பேசக்கூடாது. இதர விஷயங்களிலும் மனதைச் செலுத்த கூடாது. சிவபெருமானுடைய புண்ணியக் கதைகளை படிக்க வேணும். படிக்க முடியாதவர்கள் பிறத்தியாரைப் படிக்க வைத்தும் கேட்கலாம்.

17 12 2014      96
பஞ்சாயதன பூஜையைப் பற்றி 
ஈஸ்வரன், அம்பாள், விஷ்ணு, விநாயகர், சூரியன் - இந்த ஐந்து பேருக்கும் மூர்த்தி வைத்துப் பூஜை செய்ய வேண்டும். இதற்குப் பஞ்சாயதன பூஜை என்று பெயர். அங்கங்களோடு கூடிய விக்ரஹங்களாக இல்லாமல், இந்த ஐந்தையும் இயற்கையாகவே கிடைக்கும் ஐந்து வஸ்துக்களில் ஆவாகனம் செய்து, பூஜை செய்வது ஒரு சம்பிரதாயம்.
ஈஸ்வரனுக்கு உள்ள பாண லிங்கம் நர்மதை நதியில் ஓங்கார குண்டத்தில் கிடைக்கிறது. அம்பிகையின் சுவரூபமான ஸ்வர்ணமுகி சிலா என்ற கல் ஆந்திராவில் ஸ்வர்ணமுகியாற்றில் கிடைக்கிறது. அது தங்க ரேக் ஓடிய கல். விஷ்ணுவின் வடிவமான சாலக்கிராமம் நேபாளத்தில் கண்டகி நதியில் அகப்படுகிறது. சூரியனுக்குரிய ஸ்படிகம் தஞ்சாவூரில் வல்லத்துக்குப் பக்கத்தில் கிடைக்கிறது. விநாயகருக்கு உருவமான சோணபத்ரக் கல், கங்கையிலே கலக்கிற சோணபத்ர நதியில் அகப்படுகிறது. ஆக, இந்த ஐந்தையும் ஓரிடத்தில் வைத்தால் இந்த தேசம் முழுவதையுமே வைத்தது போலாகும். 
இந்த ஐந்தில் ஒன்றுக்காவது கண், மூக்கு, காது இல்லை. எனவே, இடுக்களில் அழுக்கேறுவது கிடையாது. அபிஷேகம் செய்து துடைக்க நாழியே ஆகாது.  எல்லாம் சின்ன சின்ன கற்கள்.  எல்லாமாகக் கொஞ்சம் இடைத்தைத்தான் அடைத்துக் கொள்ளும். பெரிய பூஜா மண்டபம் கூடத் தேவை இல்லை. ஒரு சின்ன சம்படத்தில் போட்டு வைத்து விடலாம். ஆவாஹனம் பண்ணி, நாலு உத்திரிணி தீர்த்தத்தில் அபிஷேகம் பண்ணிச் சந்தனம், குங்குமம், அக்ஷதை வைத்து அர்ச்சனை செய்து, நைவேத்தியம் காட்டலாம். வெளியூருக்கு போகும்போது கூடப் பத்து நிமிஷம் இப்படி பூஜை செய்வதில் சிரமமில்லை. வெளியூரில் அர்ச்சனைக்கு பூ கிடைக்குமா என்று கவலைப்பட வேண்டாம்.  வில்வத்தையும், துளசியையும் உலர்த்தி வைத்துக் கையில் எடுத்து போனால் ஈஸ்வரணையும், விஷ்ணுவையும் அதனாலே அர்ச்சிக்கலாம். மற்றவர்களுக்கு அக்ஷதையால் அர்ச்சனை செய்யலாம். நைவேத்தியத்திற்க்குச் சுத்தமான அன்னம் வெளியூர்களில் கிடைக்குமா என அலட்டிக் கொள்ளவேண்டாம். காய்ந்த திராக்ஷைப் பழத்தைக் கையோடு வைத்திருந்து நிவேதித்து விடலாம். 
ஐந்து மூர்த்திகளை, துளசி-வில்வ பத்திரங்கள், திராக்ஷை, அக்ஷதை இந்த எல்லாவற்றையுமே கையடக்கமாக ஒரே சம்படத்தில் போட்டு வைத்துக் கொண்டு விடலாம். பூஜை என்பதற்காக சிரமம் எதுவுமே இல்லை. மனசு இருந்தால் வெகு சுலபத்தில் எல்லாரும் எங்கேயிருந்தாலும் பூஜை செய்யலாம்.

வீட்டில் இருந்ததால் 'மகா நைவேத்தியம்' எனப்படும் அன்னத்தை சுவாமிக்குக்  காட்ட வேண்டியது அவசியம்.

19 12 2014      97
சாவதற்குள் இந்த மனத்தை அடக்க ஒரு வழி தேடியே ஆக வேண்டும். இல்லாவிட்டால் மறுபடி பிறப்பு தான். மறுபடி ஓயாத ஓட்டம் தான்; எனவே இந்த ஜன்மாவிலேயே, காமமும் குரோதமும் ஏற்படுவதற்கு எவ்வளவோ ஹேதுக்கள் இருக்கும்போதே, இவற்றின் நடுவில் மனத்தை அடக்க முழுப் பிரயத்தனமும் பண்ண வேண்டும்! "அப்படிப் பண்ணினவன் தான் 'யுக்தன்' என்கிற யோகி; அவன் தான் 'ஸூகி' என்கிற உண்மையான ஆத்மா!" என்கிறார் கிருஷ்ண பகவான். யோகமெல்லாம் ரிஷிகள் சமாச்சாரம், நமக்கு வருமா?" என்று விட்டுவிடலாகாது. மருந்து யாருக்கு வேண்டும்? வியாதி உள்ளவனுக்குத் தானே? நமக்குத் தான் மனோவியாதி. அதாவது மனம் என்ற வியாதி - இருக்கிறது. எனவே நாம் தான் அதை அடக்குகிற மருந்தைச் சாப்பிட்டாக வேண்டும்.

மனத்தை அடக்க இரண்டு சாதனங்கள் உண்டு. ஒன்று பகிரங்க சாதனம்; மற்றது அந்தரங்க சாதனம். வெளிமுகமாகச் செய்வது பகிரங்க சாதனம். உள்ளுக்குள்ளேயே செய்து கொள்வது அந்தரங்க சாதனம். இரண்டையும் கொண்டு மனத்தை முதலில் நல்லத்தில் ஒருமுகப்படுத்தி, பிறகு நினைவற்ற நிலைக்கு வரவேண்டும். தான தர்மம் செய்வது, சந்தியாவந்தனம், யாகம், பூஜை, பரோபகாரம் எல்லாம் நல்லதில் மனத்தை செலுத்தும் பகிரங்க சாதனம். தியானம் மிகச் சிறந்த அந்தரங்க நிலை. அதற்கு அனுகூலமாக இருக்கிற மற்ற அந்தரங்க சாதனங்கள் ஐந்து. அவை அஹிம்சை, சத்தியம், அஸ்தேயம், சௌசம், இந்திரிய நிக்ரஹம் என்பவை. எவருக்கும், எவற்றுக்கும் கெடுதலே எண்ணாதபடி மனத்தை அன்பு மயமாகச் செய்துகொள்வது அஹிம்சை. மனம், வாக்கு, காயம் மூன்றையும் உண்மையிலேயே ஈடுபடுத்துவது சத்தியம். அஸ்தேயம் என்றால் 'திருடாமல் இருப்பது' என்று அர்த்தம். அதாவது, பிறர் பொருள்களில் ஆசையே எழாதபடி மனத்தை வைராக்கியமாக்கிக் கொள்வது. சௌசம் என்றால் தூய்மைப்  படுத்திக்கொள்வது. இந்திரிய நிக்ரஹம் என்பது புலன்களை அவற்றின் போக்கில் விடாமல், ஒவ்வோர் இந்திரியத்துக்கும் இவ்வளவு தான் ஆகாரம் கொடுப்பது என்று நிர்ணயமாக வைத்துக்கொள்வது. கண் இதைப் பார்க்கக்கூடாது, காது இதைக் கேட்கக் கூடாது, வாய் இதைத் தின்னக்கூடாது - பேசக்கூடாது, உடம்பு இந்த பாவத்தைச் செய்யக் கூடாது என்று தடுத்து நிறுத்துவதே இந்திரிய நிக்ரஹம்.

இந்த ஐந்தும் 'சாமானிய தர்மங்கள்' எனப்படும். அதாவது நமது வைதீக மதத்தைச் சேர்ந்த சகல பிரிவினரும் இவற்றை அனுஷ்டிக்க வேண்டும் என்பது மனுதர்மம். 

22 12 2014      98
ரயிலடியில் பிரயாணிகள் வந்திறங்கியதும் ஜட்காக்காரன், ரிக்க்ஷாக்காரன், டாக்ஸிக்காரன் என்று பல பேர் வந்து சூழ்ந்து கொள்கிறார்கள். எவனுடைய வண்டியில் ஏறிக்கொண்டாலும் போக வேண்டிய இடத்துக்கு போய் சேரலாம். வண்டிக்காரன் கிராக்கி பிடிப்பதற்க்காகப் போட்டி போடுவதைத் தவறு என்று சொல்வதற்கில்லை. அது அவர்கள் பிழைப்பு. ஆனால் ஒரு லட்சியத்துக்கு அழைத்து செல்வதற்காக வெவ்வேறு மதஸ்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு மதமாற்றத்தில் முனைவது அர்த்தமற்ற காரியம். நதியின் மேல் பாலம் போட்டிருக்கிறது. அதில் பல வளைவுகள் இருக்கின்றன. எல்லா வளைவுகளிலும் ஒரே அளவாக கட்டப்பட்டவைதாம். ஆனாலும் ஒவ்வொரு வளைவுக்கும் கிட்டத்தில் இருப்பவனுக்கு அந்தந்தே வளைவே பெரிதாகவும், மற்றவை சின்னதாகவும் தெரியும். இப்படியே அந்தந்த மதஸ்தர்களுக்கும் தங்கள் மதமே பெரிதாகத் தெரிவதால், பிறரை அதற்கு அழைக்கிறார்கள். ஆனால் எல்லா வளைவுகளும் ஒரே அளவு தான். யாரும் தங்கள் பிறந்த மதத்தைவிட்டு விலக வேண்டியதில்லை. 
மதங்களுக்கிடையே கோட்பாடுகளிலும் அனுஷ்டானங்களிலும் சில வித்தியாசங்கள் இருப்பதில் தவறில்லை. எல்லா மதங்களையும் ஒரே போல் ஆக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே மாதிரி ஆக்காமலே, எல்லா மதஸ்தர்களும் மனத்தில் ஒற்றுமையோடு இருப்பது அவசியம். 'யுனிஃபார்மிடி' அவசியமில்லை. 'யுனிடி' இருப்பதே அவசியம்.  

24 12 2014      99
சங்கம் என்கிற சொல்லுக்குக் கூட்டம் என்று பொருள். 'சத்-சங்கம்' என்றால் சாதுக்கள்-சான்றோர்களின் கூட்டம் என்று பொருள். 'சத்' என்பது மெய்ப்பொருளைக் குறிக்கும். 'அசத்' அதற்கு நேர்மாறானது. "என்ன அசத்தாக இருக்கிறானே!" என்கிறோம், ஒன்றும் பிரயோஜனம் இல்லாதவன் என்ற பொருளில். 'சத்' பயனுள்ளது. அசத் பயனற்றது. பயனுள்ள விஷயங்களைத் தெரிந்து கொண்டால் தானே பிறவிப்பயனை அடையமுடியும்? அதற்குச் சான்றோர் சேர்க்கை தேவைப்படுகிறது. அதுவே சத்சங்கம். பரம்பொருளுடைய அருள் எல்லோருக்கும் கிடைக்க வழிகாட்டக்கூடிய இடம்.
முன்பெல்லாம் வீடுகளும் கோவில்களும் சத்சங்கமாக இருந்தன. ஆனால் இப்போது..? குழந்தைகளுக்குக் காலை முதல் இரவு தூங்கும் வரை சிறந்த வாழ்க்கை முறைக்குத் தேவையான நல்ல குணங்களை எடுத்துரைக்கவும், தெய்வ வழிபாட்டில் ஈடுபடுத்தவும் வீடுகளில் வாய்ப்பு அரிதாகிவிட்டது. பள்ளிக்கூடம் அல்லது வேறு எங்காவது அனுப்பி வைத்து அன்றாட வாழ்க்கைக்குத் தேவயானவற்றை மட்டும் கற்றுக்கொடுக்கிறோம். பெரிய பெரிய நகரங்களில் வாழும் சில குடும்பங்களில் குழந்தைகளை 'ஆயா' மூலம் கவனிப்பதால், குழந்தைகள் யார் தாயார், யார் தகப்பனார் என்றுகூடத் தெரியாமல் வளர்ந்துவிடுகிறார்கள். மற்ற இடங்களில்கூடக் குழந்தைகள் காலையில் எழுவதற்கு முன்பே பெற்றோர்கள் வேலைக்கு சென்று, இரவு குழந்தைகள் தூங்கிய பிறகே வீடு வருவதால், இது போல் நிலைமை ஏற்படுகிறது. 

நல்ல விஷயங்களைக் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லி அவர்களைச் சமூகப் பிரக்ஞை உள்ளவர்களாக செய்வது ஒரு புறம் இருக்கப் பெரியவர்களுக்குமேகூடப் பொழுது இருப்பதில்லை. ஆயினும் திருப்தி தரும் ஒரு விஷயம் என்னவென்றால் 'சத்சங்கம்', 'ஆஸ்திகசபை' போன்றவை ஏற்பட்டு ஈடுசெய்ய முயல்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாரத்திற்க்கு ஒரு நாளோ, இரண்டு நாளோ, ஆபீசுகளில் லீவு விடுகிற மாதிரி, எப்பொழுதெல்லாம் சௌகரியப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் நமது மதத்தையும், நல்ல குணங்களையும் தெரிந்துகொள்ள இந்த மாதிரி சத்சங்கங்களைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

27 12 2014      100
காமத்தை வென்றாலும் குரோதத்தை வெல்லமுடியாமல் போவதுண்டு. நளசரித்திரத்தில் கோபத்தின் பிரதாபத்தைப் பற்றிப் பிரமாதமாக சொல்லியிருக்கிறது. நளனை அதரும ரூபமான கலிபுருஷன் பீடித்தான் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்த கலிக்கு பல சேனாதிபதிகள் இருப்பதாக நளசரித்திரத்தில் சொல்லி இருக்கிறது. யார் அந்த சேனாதிபதிகள்? காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்சரியம் இவை எல்லாம் தாம் கலியின் சேனாதிபதிகள். இவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சக்தியை பிரகடனப்படுத்திப் பேசிக்கொள்கிறார்கள். அப்போது குரோதன், "காமனுடைய அம்பும் நுழைய முடியாத ஒரு கோட்டையை நான் பிடித்திருக்கிறேனாக்கும்" என்று தன் பிரதாபத்தைச் சொல்லிக்கொள்கிறான்.


அது என்ன கோட்டை? துர்வாச மஹரிஷியின் ஹிருதயம் தான் அந்த கோட்டை. பெண்ணாசை என்கிற காமம் துர்வாசரை நெருங்கவே முடியாது. ஆனால் அப்படிப்பட்டவரும் மகாகோபிஷ்டராக இருந்தாரல்லவா? இதனால் தான், "காமன் அம்பு புகாத கோட்டையும் தன்வசத்தில் இருக்கிறதாக்கும்" என்று குரோதன் பெருமையடித்துக்கொண்டான். மகா பெரியவரான துர்வாசரே கோபத்திடம் கோட்டைவிட்டார் என்பதிலிருந்து நாம் எல்லோரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். துர்வாசர் மகாத்மா; அம்பாளின் பரமா பக்தர்; பரமசிவ அம்சம் என்றே அவரைச் சொல்வார்கள். இத்தனை மஹிமை இருந்தாலும் இப்போது அவரைப்பற்றி சொன்ன மாத்திரத்தில் அந்த மஹிமை எதுவும் தெரியாமல், அவருடைய கோபம்தான் நமக்குத் தெரிகிறது.

(continued in Part XI)

No comments:

Post a Comment