Popular Posts

Wednesday, January 14, 2015

MAHAPERIYAVALIN ARULVAKKU PART V

ஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வாக்கு பாகம் 5
(continuation of part 4)




25 04 2014  41
காசிக்கு பஞ்சக்குரோச க்ஷேத்திரம்னு ஒரு பேருண்டு. இது நாலு பக்கத்திலேயும் ஐந்து குரோச தூரம் விஸ்தீரணம் கொண்டதாலே அந்த பேர் வந்தது. பூர்வ ஜென்மத்தில் செய்த வினைகள் சஞ்சிதம். இதனாலே அடுத்த ஜென்மா ஏற்படறது. நல்லது கெட்டதுகளை ஜீவன் அனுபவிக்கறது ஆகாமியம். இந்த ப்ராரத்வத்தை அனுபவிக்காமல் யாரும் தப்பிக்க முடியாது. பாபத்தாலே தான் மனுஷாளுக்கு கஷ்டமும், துக்கமும் ஏற்படறது. சுபமே நடந்திண்டிருக்கணுமின்னா மத்தவாளுக்குக் கெடுதலை மனசாலேயும் நினைக்கப்படாது. அநியாய வழியிலே பணம் சேர்க்கப்படாது. கூலியை குறைச்சுக் கொடுக்கக்கூடாது.
ஆகாமியம், சஞ்சிதம், பிராப்தம் காசி மண்ணை மிதித்ததுமே நசித்து விடுவதாக சிவபெருமான் சொல்லி இருக்கிறார். பிராயகைக்கு போன பிறகு காசிக்கு போக வேண்டும். திரிவேணி சங்கமத்தில் திருமால் இஷ்ட சித்திகளை பூர்த்தி செய்கிறார். காசிக்கு போன பிறகு திரிவேணி யாத்திரை போனால் காசி யாத்திரை பலன் வீணாகிவிடும். காசியிலேயே வசிப்பவர்களுக்குக் கூட லபிதம் இருந்தால் மட்டுமே அங்கு மரணம் கிட்டும்.

28 04 2014    42
ஒருவர் காய்ச்சல், வயித்துவலின்னாலும் பணக்காரன், பெரிய மனுஷாளுக்கு வேண்டியவான்னா, பெரிய டாக்டர் பக்கத்திலிருந்து கவனித்து கொள்கிறான்னார். வாஸ்தவம். நாம் பகவானுக்கு வேண்டியவனாகணும். எத்தனை பக்தாள் இருந்தா? பகவான் பக்தனுக்காக விறகுகூட சுமந்திருக்கார். பக்த பராதீனன் அவன். அவனோட ராஜ்யத்திலே செல்லுபடியாகிற பணம் புண்ணியம். நாம் எவ்வளவு பெரிய பக்திமான்னு பகவான் நெனைக்கணும். உதயத்திலே எழுந்திருக்கணும். பூஜை பண்ணனும். கோவிலுக்கு போகணும். ஏழைகளுக்கு நம்மால் முடிந்த ஒத்தாசைகளைப் பண்ணணும். வேலைக்கு தகுந்த கூலி கொடுக்கணும். ஏமாத்தப்படாது. சோம்பேறியா இருக்கப்படாது. நேர்மையா நடக்கணும். நீதி நம்மாலே பிசங்கித்துன்னு வரப்படாது. அவாவா கர்மானுஷ்ட்டானங்களை ஒழுங்காப் பண்ணணும். எல்லாத்துக்கும் மனசு தூய்மையாய் இருக்கணும். நல்ல குழந்தைகளை என் பிள்ளை என்று தகப்பன் சபையிலே சொல்லி பூரிக்கிறான். என் பக்தான்னு பகவான் பெருமைப்பட வேண்டாமா? நல்லது செய்ய நாளா பார்க்கனும். இந்த நிமிஷமே தொடங்கலாம்.  


02 05 2014   43
தாயார் கிண்ணத்திலே பால் சாதம் ஊட்டினா குழந்தை வயறு நெறஞ்சுடும். வளர வளர அது போறாது. 'உம்மாச்சி காப்பாத்து சொல்லு', கன்னத்திலே போட்டுக்கோ'ன்னு தாயார் சொல்லிக் கொடுக்கறா...சீக்கிரம் எழுந்திருந்து ஸ்நானம் பண்ணிட்டு அன்னம் வைச்சு சுவாமிக்கு காண்பிக்கணும். ஆறு மணிக்குத்தான் எழுந்திருப்பேன்னு மனசு அடம் புடிச்சா கஷ்டங்களும், பிரச்சினைகளும் நம்மை விட்டு விலக அடம் பிடிக்கும். "ஏர்போர்டிலே மருமகன் வரான். பொண்ணு பேசி வைச்சிருக்கு. அதுவே முடியணும்னு பெரியவா ஆசீர்வாதம் பண்ணனும்"ங்கறா. விமானம் அஞ்சு மணிக்கு வரதுன்னா மூணு மணிக்கே இவா ஏர்போர்ட் போறாளாம். நம்மாலே முடியும்னு நெனைக்காம, பகவான் நடத்தி வைப்பார்னு முழுசா அவனை நம்பணும். முயற்சியை மட்டும்தான் நாம செய்யணும். நல்லதாயிருந்தா நம்மை அவன் ஏமாற்றமாட்டான்.    
புடவையும், நகைகளும் பெத்தவா பண்ணி பீரோவிலே பூட்டி வைக்கிறா.... தரமாட்டேங்கறா. மனசாகலே...ஓர வஞ்சகம்னு பெண்கள் நினைக்கலாமா? அதுக்கான காலமும், பொறுப்பும் வரணும். உனக்கு பொறுப்பு வந்தா, தானே உனக்குள்ளது உனக்குக் கிடைக்கும்.

05 05 2014     44அரிசியை யாரேலேயும் சாப்பிட முடியாது. தண்ணீரும்
அக்னியும் அதை ஹவிஸ் ஆக்கறது. அப்போ அதும் பேரு அரிசி இல்லே. அன்னம், உமி நீக்கறதுக்கு முன்னே அது பேரு நெல். அதையே முத்தவிட்டு எடுத்து வைச்சா விதை. பக்குவப்படறத்துக்கு முன்னே அதை நாத்துங்கறோம். அதே அரிசியை எந்திரத்திலே அரைச்சு மாவாக்கிட்டா வேற வேற சாமான் சேர்த்து 'அப்பம், சீடை, முறுக்குன்னு பேர் வைக்கறோம். நாத்தா இருக்கற நாம நெல்லா பூமியைப் பாக்கறோம். பக்குவப்பட்டவா விதையாயிடறா! அக்னியும் தண்ணீரும் சுக துக்கங்களாறது. உமியை விலக்கிட்டு பொறுப்பு வந்துட்டதாக குதிக்கிறோம். லோகப் பசியை நீக்க அவாவாளானதைச் செய்யறா. சிந்தர அரிசி கூட பறவைகளுக்கும், எறும்புக்கும் பசியைத் தீர்க்கறது. இந்த உலகத்திலே வேண்டாதது எதையும் பகவான் படைக்கறதில்லே. முள்ளு செடி கூட தோட்டத்தை காவல் காக்கறது. வாய்க்கால் கரையிலே இருக்கற சாதா செடிகள் கூட சரியாம வேரால பலப்படுத்துகிறது.  

08 05 2014     45
தேசம் க்ஷேமமாயிருக்க, நாம இன்னிக்கு என்ன செஞ்சோம்னு யோசிக்கணும். வழியிலே கிடக்கற ஒரு வாழைப்பழத் தோலையாவது, பிளேடு, ஊசி, கண்ணாடிச்சில் இதுகளை குப்பைத் தொட்டியில் சேர்க்கலாம். உத்யோகத்துக்கு போறபோது குனியறதான்னு யோஜிக்கப்படாது. அதுலே எத்தனை நன்மை அடங்கி இருக்கு தெரியுமா? செருப்பு வாங்க முடியாத ஏழைகள், பக்கத்து கோவில் தானே என்று செருப்பு போடாமல் போகும் வயதானவர், வழியில் கிடக்கும் இந்த பொருளால் பாதிக்கப்படுவர். ஒருத்தருக்கொருத்தர் உபகாரமாயிருக்கணும்னு தான் பகவான் இத்தனை ஜனங்களைப் படைச்சிருக்கான்!

12 05 2014   46
கொஞ்ச நாளைக்கு முன்னாலே ஒருத்தர் கேட்டார். "எல்லார் மனசிலேயும் பகவான் இருக்கார்னா அது எப்படி சாத்தியம்? பொல்லாத்தனம் செய்யறவா மனசிலே இருக்கற ஈஸ்வரன் பொல்லாதவரா? அவர் மனசிலே அந்த பகவான் ஏன் நல்லது செய்யணும்னு உணர்தறதில்லே..... லோகமே நல்லதாயிருந்தா எல்லாரும் சந்தோஷப்படுவாளே! சங்கடங்களே வராதே?"ன்னார். பாதிக்கபடற எல்லா மனுஷாள் மனசிலேயும் நியாயமா தோணுகிற சந்தேகம் தான். காசியிலே கங்கை பெருக்கெடுத்து ஒடுகிறது. அங்கே கடைகளிலே விதவிதமாக செப்புக் குடங்கள், சொம்புகளிலே கங்கையை நிறைச்சிருக்கா. கங்கை செம்பு பூஜை செய்கிற எல்லா வீடுகளிலும் இருக்கும். அப்போது எது நிஜ கங்கை? ஆத்மாவிலே கலந்திருக்கிற ஈஸ்வரன் செம்பிலே அடைக்கப்பட்ட கங்காஜலம் மாதிரி. கைலாயத்திலே இருக்கிறதா நெனைச்சிக்கிறோமே அது காசியிலே பெருகற கங்கை மாதிரி.
தீக்குச்சியை மருந்து பெட்டியிலே உரசறப்போ நெருப்பு கிடைக்கிறது. ஞானம், பக்தி எப்படி வேணுமானாலும் வைச்சுக்கலாம். மனசுக்குள்ளே இருக்கற பகவான் என்கிற மருந்துலே உரசணும். அப்போ அசுத்த எண்ணங்களைப் பொசுக்கிண்டு நல்ல குணம் என்கிற அக்னி கிடைக்கும்.

16 05 2014    47
காதுலே விழறத்தை எல்லாம் மனசுக்குள்ள தங்க விடப்படாது. அப்புறம் கால்களை அந்த இடத்துக்குப் போன்னு மனசு துரத்தும். கண் அந்த காட்சிக்காக அலையும். நாசி வாசனைப் பிடிக்கும். வாய் கட்டுபாடில்லாம உளறும். இதனாலே லோக வாழ்க்கைக்கு ஒத்துவராத சங்கடங்களெல்லாம் வந்து சேரும். மந்தையிலே மாடுகள் இஸ்டத்துக்கு மேயப்படாது. அப்புறம் புலி சிங்கம் வந்து இறையாக்கிக் கொண்டுவிடாதா? அவசரமில்லாமல் எதையும் ஆழ்ந்து அலசி சிந்தித்துப் பார்க்க வேண்டும். மூளையை எல்லோருக்கும் கொடுத்திருக்கிறார் பகவான். அதை விருத்தி பண்ணணும். நல்லாவா பேசறதை எல்லாம் தேடி தேடிப் போய் கேட்கனும். நான் படிச்சாச்சு. எனக்கு எல்லாம் தெரியுங்கற நெனைப்பு வராம தடுக்கணும். அரணிக் கட்டையைக் கடைஞ்சா நெருப்பு வரும். சிக்கிமுக்கிக் கல்லை உரசினா அக்னி கிடைக்கும். அக்னியில் என்ன போட்டாலும் காணாமல் போயிடும். அழுக்கு வஸ்துவை எரிக்கிறதாலே அக்னி அசுத்தப்படறதில்லே! அறிவை வளர்த்துக்கிரத்திலே அக்னி மாதிரி இருக்கணும்.

19 05 2014     48
ஒரு வேதியன் பணக்காரன். கிரக தானம் செய்தான். அவன் சொர்க்கத்திற்கு போகிறபோது அவனது தெருவிலே வசித்த ஒரு தரித்திரனும் சொர்க்கத்துக்கு வந்தான். பணக்காரனுக்கு ஆத்திரம். இதென்னடா இவனுக்கு சொர்க்கமான்னு அங்கிருந்தவாளைக் கேட்டான். சொர்கத்துக்கு வர இவன் என்ன பண்ணினான்னு! 'ஒரு குழந்தை காரடியில் மாட்டிக்க இருந்தது. அதைக் காப்பாத்தப்போய் இவன் உயிரை விட்டான்' என்றார்கள். சந்தர்ப்பத்தை பொறுத்துத்தான் புண்ணியாசாலி ஆக முடியும்.  
தர்பையாலே வீடுகட்டித் தானம் பண்ணினா சொர்க்க வாசம்னு கருட புராணம் சொல்றது. அதுக்காக வசதி படைச்சவன் இப்படிப் பண்ணிட்டு போய் நின்னா சொர்க்க வாசல் மூடித்தான் இருக்கும்!

29 05 2014   49
குருத்ருகன் என்ற வேடன் சிவராத்திரி முழுவதும் வில்வ இலையைப் பறிச்சுப் போட்டான். அதனாலே அவனுக்கு மோட்சம் கிடைச்சது  என்கிறது சிவபுராணம். அவன்தான் பின்னாலே குகனாகிறான். வனவாசத்துக்கு வந்த ராமபிரானால் சகோதரனாக ஏற்றுக் கொள்ளப்படுகிறான். காலமெல்லாம் மிருகங்களை வதம் பண்ணிவிட்டு சிவராத்திரி அன்றைக்கு வில்வத்தாலே அர்ச்சனை பண்ணினால் போதும் என்று அர்த்தம் எடுத்துக்கப்படாது. யாராயிருந்தாலும் தன்னை மாற்றிக்கொள்ள பகவான் சந்தர்ப்பம் கொடுக்கிறார். பிழைக்கணும் என்றால் எத்தனையோ வழி இருக்கு. எதுக்கு ஜீவஹிம்சை பண்ணனும் என்கிற கேள்வி இந்த கதையைப் படிக்கிறவா மனசிலே தோணனும். தயிராயிருந்த குருத்ருகன்கிட்டேயிருந்து கசடை எடுத்து குகன் என்கிற வெண்ணையைக் கண்டுபிடிச்சுக் கொடுத்தார் பகவான். 

02 06 2014       50
சில பேருக்கு தன்னைப் பெரிய அறிவாளியாக் காட்டிக்க ஆசை. என்ன செய்யறோம்னு தெரியாம, தெரியாத விஷயத்தை காது, கண், மூக்கு வைச்சு சொல்லிடுவா. வார்த்தைக்கு காத்து வேகம். அதிலேயும் பொய் பட்டம் மாதிரி... நிமிஷமாய் பறந்துடும். உள்ளது உள்ளபடி சொல்றது தான் 'சத்யம்'. இதை அரிச்சந்திரன் கடைபிடிச்சான். கஷ்டப்பட்டானேன்னு நெனைக்கலாம். இன்னி வரைக்கும் அவன் வரலாறு சாகலே. சத்யம் மார்க்கண்டேயன் மாதிரி சாகாது.


(continued in Part VI)

No comments:

Post a Comment