Popular Posts

Monday, January 12, 2015

MAHAPERIYAVALIN ARUL VAKKU - PART II

ஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வாக்கு 
PART II (Continuation of Part I)



31 01 2014   11
அந்நிய நிலத்தில் மேயக்கூடாது என்பதற்காகப் பசுவைக் கட்டி போடுகிறோம். அந்த நிலத்தின் பயிர் சேதம் ஆகாமல் இருக்கவேண்டும் என்பதற்காக மட்டும் கட்டிப்போடுவதில்லை. பசு அடிபடாமல் இருக்கவேண்டும் என்று அதைக் காக்கவே கட்டிப்போடுகிறோம். இவ்வாறே எல்லா சமயக் கட்டுப்பாடுகளும் நாம் பிறருக்கு இன்னல் விளைவிக்காமல் காப்பாற்றுவதோடு நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவும் விதிக்கப்பட்டவை. முக்கியமாக, நம்மை நம்மிடமிருந்தே காப்பாற்ற விதிக்கப்பட்டவை. 

01 02 2014   12
மரீசின்னு ஒரு ரிஷி. பார்வதியே பெண்ணா பிறக்கணும்னு தவசிருந்தார். விநாயகர் அப்படியே நடக்கும் என்று வரம் கொடுத்தார். ஒரு நாள் மரீசி முனிவர் யமுனையில் குளிக்க வந்தபோது ஒரு தாமரைப் பூவிலே சங்கு இருப்பதைக் கண்டு நதியில் இறங்கினார். கிட்ட நெருங்கின பிறகுதான் அது சங்கு வடிவிலிருந்த குழந்தை என்று தெரிந்துகொண்டார். வலிமையான அந்தக் குழந்தைதான் வல்லபை. பிள்ளையாரின் உடம்பில் புகுந்து கொண்டார் சிவன். மனிதர்களுக்கு வல்லப சக்தியை தர பகவானை மணந்துகொண்டாள் வல்லப சக்தி. எல்லா தேவியரும் இடப்பக்கம் இருந்தால் வலது பக்கம் இடம் கேட்டு பெற்றுகொண்டாள் வல்லபை. வள்ளியை முருகன் மணம்புரிய உதவியவரும் கஜானனன் தான்!
அதனால் கணேசரை பூஜித்தால் மும்மூர்த்திகளும், முப்பெருந்தேவியரும், குமரக் கடவுளும் சந்தோஷமடைந்து சகல நன்மைகளும் தருவார்கள். 

04 02 2014   13
கோவில்லே போய் கோலம் போட்டா, பக்தாளெல்லாம் கொண்டாடறா. தேவதைகளெல்லாம் ஆசீர்வாதம் பண்றா. சொல்ற புத்திமதியை மேடை போட்டுச் சொன்னா ஜனங்களெல்லாம் புகழறா. அச்சுலே பார்த்தா அத்தனை பேரும் பரவசப்படறா. ஏன்னா நல்லது லோகமெல்லாம் பரவணும். ஒருத்தருக்கு சிரமம்னா கை கொடுக்க நானிருக்கேன்னு ஓடி வரணும். அப்பத்தான் பகவானோட நெருக்கத்தை அனுபவிக்க முடியும்.

06 02 2014    14
வலது கை சாப்பிடறது. நல்ல சங்கீதத்துக்கு தாளம் போடறது. பிரசாதம் வாங்கறது. இடது கை தோட்டி வேலை செய்யறது. பெரியவர்களின் பாதத்திலே விழும்போது இரண்டு கையும் தான் பாதத்தை புடிச்சிக்கிறது. இரண்டு கையும் தான் கற்பூரம் ஒத்திக்கறது. பளு தூக்கும்போது இடது கை வேண்டியிருக்கு. அதனாலே எந்த வேலை செய்யறதும் கேவலமில்லே. நல்லவாளுக்கு சம அந்தஸ்து, உரிமை கொடுத்து உதவி செய்யணும் என்கிறதை பகவான் எவ்வளவு எளிமையாக சொல்லி இருக்கார்.

11.02.2014  15
ஒருத்தர் சொன்னார். 'அபிஷேகம் பண்ணினா விக்ரஹம் பாசி பிடிச்சிடறது. அழுக்கு சேர்றது. புளிபோட்டு தேய்க்கணும்... வீட்டுலே மடி சஞ்சின்னு கேலி பண்றா. அதனாலே வெறும் அர்ச்சனை நைவேத்தியம் தான்' ...
இப்போ குளிர் பெட்டி, ஃபேன், டெலிவிஷன்னு எத்தனையோ நல்ல சமாச்சாரங்கள் வசதிக்காக வீட்டுலே வந்துடுத்து. அதையெல்லாம் அடிக்கடி தூசி தட்டி சுத்தமாக வைச்சுக்கலையா? அது போல தானே இதுவும். வசதியிருக்கிறவா அஞ்சு ரூபாய் கொடுத்தா படங்களையும் சுத்தமாக துடைத்து விட்டுப்போறான்.
எந்த குறையும் வராம பேன் அடியிலே டெலிவிஷன் பார்க்கணமேங்கற பயம் ஒவ்வொருத்தருக்கும் அடி மனசுலே இருக்கு. அதுக்காக ராமர், கிருஷ்ணர், சிவன், அம்பாள், முருகன், கணபதின்னு ஏகப்பட்ட படம் மாட்டி வைச்சிருக்கா. ஆனா படத்துமேலே இருக்கற ஒட்டடைய விஷேஷ நாள்ளேதான் தொடைக்கறா. அத்தனை சுவாமிக்கும் ரெண்டு வாழைப்பழம் நைவேத்தியம் காண்பிச்சா போதுமா?

13.02.2014    16
இருப்பது ஒரே சூரியன் தான். ஆனால் கையிலே கொஞ்சம் ஜலத்தை எடுத்துக்கொண்டு நல்ல வழுவழுப்பான தரையில் தெளித்தால் ஒவ்வொரு முத்து ஜலத்திலும் பிரதிபிம்பமாக ஒரு சூரியன் தெரிகிறது. பிரித்து பிரித்து இப்படிப் பல பிரதிபிம்ப சூரியன்கள் இருந்தாலும் உண்மையில் இருப்பது ஒரு சூரியன் தான். இப்படியே எல்லாவற்றுக்கும் மூலமாக ஒரே சக்திதான். நம்மெல்லோரிடமும் பிரிந்து பிரிந்து பல போல் தோன்றுகிறது.

16 02 2014    17
சமூகத்துக்கோ, ராஜ்யத்துக்கோ, ஒரு வர்கத்துக்கோ தலைவர்களாக  இருப்பவர்கள் சமய அனுஷ்டானங்களையும் ஆசரணைகளையும் புறக்கணிக்கலாகாது. தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு சமய சடங்குகள் தேவையாக இல்லாதிருக்கலாம். ஆன்மீகத்தில் அவர்கள் முன்னேற்றம் கண்டு சமய அனுஷ்டானங்களை பின்பற்றும் அவசியத்தை கடந்திருக்கலாம். என்றாலும் அவர்கள் அனுஷ்டானங்களை விட்டுவிட்டால், இந்த அனுஷ்டானங்களின் உதவியை உண்மையாகப் பெறவேண்டிய நிலையிலுள்ள மற்ற மக்களும் இவற்றை அலட்சியம் செய்ய தொடங்கிவிடுவர். இதனால் தலைவர்கள் மக்களுக்குத் தவறான உதாரணம் காட்டியதாகவே ஆகும். மக்கள் எந்த நிலையில் இருக்கிறார்களோ அங்கிருந்தே அவர்களை முன்னுக்கு அழைத்து செல்ல வேண்டியது தலைவர்களின் கடமையாகும்.  

18 02 2014   18
நமக்கு வேதமே அறிவை ஊட்டி நல்வழி காட்டுகிறது. அது அனாதி. அது கூறிய அன்பினால் தான் நம் மதம் வளர்ந்தது. நமது மதத்திலுள்ள சிறந்த தத்துவங்களைக் கண்டு பலர் நம் மதத்தை தழுவுகின்றனர். நாம் ஸ்கூல், ஆஸ்பத்திரி, மிஷன் பிரச்சாரக் கூட்டம் ஏற்படுத்தவில்லை. யாரையும் அழைக்கவில்லை.
நமக்கு வேதமே ஆணிவேர், அனுஷ்டானமே இலை, பூ, காய், கனி. ஜனன மரணமற்ற முக்தியே ரஸாநுபவமாம்.  

20 02 2014    19
அரிவாள்மணை, சுத்தி இவற்றிடையே கவனமா இல்லேன்னா கையை வெட்டிடும். ஸ்கூட்டர், கார்லே பிரயாணம்  பண்றச்சே நெனைப்பு வேறெங்கையோ போனா விபத்து நடந்துடும். அடுப்புக்கிட்டே கவனக்குறைவா இருந்தா தீப்புடிச்சுடும். ஆனா பகவான் ஞாபகம் இல்லாம வாய் ஸ்லோக மந்திரத்தை முணுமுணுத்தா போறும்னு நினைக்கலாமா? சுவாமியை நினைச்சிண்டு 'சம்போ மகாதேவா, நமோ நாராயணா' ன்னு சொன்னாலே போதுமே.
உங்க குழந்தை உண்மையை சொல்றான்! நல்லவனா இருக்கான்னா உங்க மனசு எப்படி எத்தனை சந்தோஷப்படறது?  
எல்லோரும் பகவானோட குழந்தைகள். நியாயமா நடக்கறவாளை நேர்மையா காலட்ஷேபம் பண்றவாளை பகவானுக்கு பிடிக்கும். நம்மை ஊனமில்லாம படைச்சு, நல்லபடி வாழ வழி காட்டின பகவானுக்கு நாம எப்படி நன்றி செலுத்தறது.     
புதுப் பூவைப் பார்த்தா பகவானுக்குத் தரணும்னு ஆசை வரணும். தளதளன்னு இருக்கற சந்தனத்தை பகவானுக்குப் பூசிப் பார்க்கணும்னு நெனைப்பு வரணும். இந்த புடவையிலே அம்பாள் எப்படி இருபாள்னு நெனைச்சு தியானம் பண்ணினாலே கருணை செய்கிறவளாச்சே! சுடச் சுடப்பால் குடிச்சா நெஞ்சிலே இருக்கற பகவானுக்கு வெந்துடும்னு ஆத்திக் குடிச்ச பக்தாலெல்லாம் இருக்கா. பகவானை மனசாலே நெருக்கமாக்கிக்கணும். வார்த்தையாலே மட்டும் போறாது. 
23 02 2014    20
கழுதை மேலே உப்புப்பொதி ஏத்திண்டு சந்தைக்குப் புறப்பட்டான் வியாபாரி. திடீர்னு மேகங்கள் கூடிண்டு மழை கொட்டித் தள்ளித்து. உப்பு பொதி நனைந்து பாதிக்கு மேல் வீணாகிவிட்டது. "இராத்திரிலே பெய்யப்படாதா? பகவான் ரொம்பத்தான் சோதிக்கிறார்" என்று வருத்தபட்டான் உப்பு வியாபாரி. ஊர் வெளியே காட்டிலே கொள்ளைக் கூட்டம் சூழ்ந்து கொண்டு "எடு பணத்தை" என்று அங்கு வந்த சில வியாபாரிகளை மிரட்டினார்கள். சுடுகிறதற்காக துப்பாக்கியை எடுத்தார்கள். அந்த காலத்தில் வெடிமருந்து கெட்டித்து சுடுவார்கள். இப்போ மாதிரி குண்டு கிடையாது. அந்த வெடி மருந்து பட்டாசு மாதிரி மழை பெய்தால் நமுத்துவிடும். சுடாது. துப்பாக்கி சுடாதலால் திருடர்கள் ஓட்டம் பிடித்தார்கள். மழை பெய்ய வைத்த பகவானை எல்லா வியாபாரிகளும் கொண்டாடினார்கள். அறிந்த உப்பு வியாபாரி கடவுளிடம் மனசுக்குள் மன்னிப்பு கேட்டுக்கொண்டான்.
(continued in Part III..)

No comments:

Post a Comment