Popular Posts

Tuesday, January 13, 2015

SREE MAHA PERIYAVALIN ARULVAKKU - PART IV

ஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வாக்கு பாகம் 4
(continuation of part 3)



29 03 2014    31ஆறு குழந்தைகளையும் ஒரு சேர அணைத்து உச்சிமோந்த உமாதேவியாரால் ஆறு உடம்பும் ஒன்றானது. 'ஸ்கந்தன்' என்று பெயர் சூட்டினார்கள். 'ஸ்கந்த' என்றால் வெளிப்படுவது என்று அர்த்தம். பசுபதி என்ற மேகத்திலிருந்து வெளிப்பட்ட மின்னலானதால் சுப்ரமண்யன் ஸ்கந்தனானார். 'சோமாஸ்கந்தர்' என்று கோவிலில் பார்த்திருப்பீர்கள். ஈஸ்வரனுக்கும், அம்பாளுக்கும் நடுவே சுப்ரமண்யர் குழந்தையாக வீற்றிருப்பார். ஸஹ உமாஸ்கந்தர் தான் சோமாஸ்கந்தரானார். ஏன்னா தகப்பனுக்கே உபதேசம் செய்த சுவாமிநாதன் அவன். அதை ஈஸ்வரனும், ஆதி சங்கரராக அவதரித்து சுப்ரமண்ய அம்சமாகப் பிறந்த குமாரிலபட்டரை ஜெயிச்சு சரிகட்டிட்டார்.   
சுசீந்திரத்திலே ஸ்தாணுமாலயன்னு மும்மூர்த்திகளும் சேர்ந்த வடிவம். ஸ்தாணு என்றால்  'பட்டகட்டை' என்று அர்த்தம். உணர்ச்சியற்ற யோகத்தில் இரு மூர்த்திகளோடு இணைந்திருக்கிறார். அந்த மாதிரி யோகத்தில் பட்ட கட்டையாக இருக்கும் சிவனை அடைய, இலையையும் சாப்பிடாமல் 'அபர்ணாவாக' தவம் இருக்கிறாள் பார்வதி. இந்த இருவரின் பிள்ளை விசாகனாகிறான். வேதத்தில் உள்ள பல கிளைகளை 'வேதசாகை' என்பார்கள். 'தவா' என்றால் புருஷனை உடையவள். 'விதவா' என்றால் புருஷன் இல்லாதவள். 'சாக' என்றால் கிளைகளை உடைய என்று அர்த்தம். 'விசாக' என்றால் கிளை இல்லாதது. தந்தை ஸ்தாணு பட்ட கட்டையாகவும், தாய் அபர்ணா இலையற்ற கொடியாகவும் இருந்ததை நினைவுபடுத்திக் கொண்டு கிளையே இல்லாத கீழ்க்கன்றாக  இருக்கிறார் விசாகன். அதனால் அவருக்கு சம்சாரம் இரண்டு பேர் ஏற்பட்டும் கிளைகளான குழந்தை கிடையாது. இளம் பிராயத்திலேயே வைராக்கியம் ஏற்பட்டு ஞானப்பழமாக தண்டு ஊன்றி, முடி அகற்றி, பழனி மலை மேல் ஆண்டியாக நிற்கிறார்.   

31 03 2014   32

ஒரு மஹான். அவருக்கு ஏகப்பட்ட சிஷ்யாள். மஹானுக்கு அந்திம காலம் நெருங்கிடுத்து. அந்தரங்கமா ஒருத்தனைக் கூப்பிட்டு, "அப்பா, என்னோட அடுத்த ஜென்மா அதோ அந்த வயத்தை சாசுண்டு நிக்கறதே அந்த பன்னியோட குட்டி. ஆனா நல்ல காரியங்களும் செஞ்சதாலே வெள்ளை பன்னியாப் பொறப்பேன். மலத்தை சாப்பிடடுண்டு, சகதியிலே உழர்ற இந்த பன்னி ஜென்மாவை நான் வெறுக்கறேன். இன்னிக்கு நான் சமாதியாகப் போறேன். நாளைக்கு அந்த பன்னி குட்டி போடும். பாவம் பார்க்காம அந்த வெள்ளை பன்னியை நீ அடிச்சு கொன்னுடு. இதை நீ குருவுக்குச் செய்கிற உபகாரமா நினைச்சுக்கோ" ன்னு கேட்டுண்டார். சிஷ்யன் அப்படியே செய்யறதா வாக்குக் கொடுத்தான்.
குரு சமாதியானார். வேற வேலை பார்க்காமல் பன்னி மேலேயே கண்ணா இருந்தான் சிஷ்யன். அத்தனை குருபக்தி. மலஜலம் கழிக்கணும்னா கூட தான் சிநேகிதனை நிறுத்தி காவல் காத்தான். பன்னி குட்டி போட்டது. அதிலே ஒன்று வெள்ளை பன்னியும் இருந்தது. அடிக்கறதுக்காகக் தடியை ஓங்கினான். பூர்வ ஜென்ம புண்ணியத்தாலே பன்றி பேசித்து. "அப்பனே நான்தான் உன்னோட குரு பேசறேன். மனுஷனா இருக்கச்சே இது அசிங்கமா இருந்தது. அடிச்சு கொல்லச் சொன்னேன். இப்போ என்னமா மணக்கறது தெரியுமா? ரொம்ப சௌகரியமா இருக்கு. விட்டுடு. வாழ்ந்து கர்மாவைத் தீர்த்துடறேன்" னது. அது மாதிரி அந்தந்தப் பிறவிக்கு அதது சுகம்.
"சிந்தா நாஸ்தி கில தேஷாம் ஸ தம கருணா சம்பூர்ணானாம்
சாது ஸமாகாம சங்கீர்ணானாம் சிந்தா நாஸ்தி கில"
மன அடக்கம், இந்திரிய அடக்கம், இரக்க சுபாவம் இதைப் பரிபூரணமா பெற்றவாளுக்கும், சாதுக்களோடு சேர்ந்து நாம சங்கீர்த்தனம் செய்யறாவளுக்கும் கவலையே இல்லைங்கறது இந்த ஸ்லோகம். 'சிந்தா நாஸ்தி கில' ன்னு ஆரம்பிச்சு அதிலேயே முடியறது இந்த ஸ்லோகத்தோட விஷேஷம். கவலை வராதுங்கறத்தை ஆரம்பித்திலேயும், முடிவிலேயும் அழுத்தமா சொல்றது. ஜனனமானதிலிருந்து மரணம் வரைன்னும் எடுத்துக்கலாம். ஒரு காரியம் ஆரம்பிச்சதிலேருந்து முடியற வரைன்னும் வெச்சுக்கலாம்.
Top of Form

03 04 2014     33
திருமலை நாயக்கர் மஹாலையும் புது மண்டபதையும் கட்டிய நாயக்க மன்னருக்கு மந்திரியாக இருந்தவர் நீலகண்ட தீக்ஷிதர். அவர் பெரிய மஹா வித்வான். சிறந்த தெய்வ பக்தரும் கூட. அவர் காலத்தில் தஞ்சை ஜில்லாவில் பழமனேரி கிராமத்தில் மஹாதேவ சாஸ்திரி என்ற பெரிய வித்வான் இருந்தார். அவர் அவ்வூர் சமீபத்தில் இருந்த ஸ்ரீ ஐராவதேஸ்வரர் கோவில் தேவியான ஸ்ரீ அலங்காரீஸ்வரி அம்மனை ஆராதிப்பவர். அவர் புத்திரப் பேற்றுக்காகத் தேவியைப் பிரார்த்தித்து வந்தார். மதுரைக்கு சென்று மீனாக்க்ஷியை ஆராதிக்குமாறு உத்திரவாயிற்று. அவ்விதமே அவர் மதுரைக்கு வந்தார்.   
நீலகண்ட தீக்ஷிதரும் அவரைப் பற்றி கேள்வியுற்றிருந்தார். மந்திரி பதவியிலுள்ள தமது அந்தஸ்துக்குக் குறைவில்லாமல் அவரைப் பார்க்க வேண்டுமென்று இவர் எண்ணம். இதை அறிந்த அம்பாளே இரண்டு பேரையும் ஒருவரை ஒருவர் சந்திக்க சங்கர்பித்தாள். மதுரைக்கு வந்த மஹாதேவ சாஸ்திரிகளைப் பல்லக்கில் இருந்த தீக்ஷிதர் பார்த்தார். சாஸ்திரிகளைப் பார்த்து "தொங்கல் காதுடன் வரும் இவர் யார்? கல்தா கொடுத்துப் போகச் சொல்லுங்கள்" என்றார். ஒருவருக்கு ஒருவர் பேச்சு ஆரம்பமாயிற்று. "சூரியன் மறைந்து சந்திரன் உதிக்காமல், நட்சத்திரங்களும் தெரியாமல் இருள் சூழ்ந்த நிலையில் தான், தான் பெருமையைக் காட்டிக்கொள்ள இங்குமங்கும் மின்மினிப் பூச்சி பறக்கும்" என்ற கருத்துள்ள ஓர் அழகான ஸ்லோகம் விடையாக வந்தது. மஹாதேவரால் அதை அறிந்த தீக்ஷிதர் பல்லக்கை விட்டு இறங்கி, அவருக்கு வேண்டிய உபசாரங்கள் செய்து, "உங்களை அலங்காரி இங்கு அனுப்பினாளோ? என்று கேட்க, அவரும் ஆச்சரியம் அடைந்ததாக கதை உண்டு. இதை ஏன் சொல்கிறேன் என்றால், குருபீடமும் சரி, சிஷ்யர்களும் சரி, மேலே சொன்ன மின்மினிப் பூச்சி கதை ஆகிவிடக்கூடாது.  

06 04 2014   34
சிவ பூஜைக்கு சந்தனம் அரைத்துக் கொடுத்தாலும் சந்தன தானம் செய்தாலும் வைகாசி, ஐப்பசி, கார்த்திகை, மாசி மாதங்களிலே கங்கையிலே ஸ்நானம் பண்ணின பலன் கிடைக்கும். சிவன் கோவில் கட்ட பூ தானம் பண்ணினா ருத்ர லோகத்திலே கோடி வருஷம் வாசம் பண்ணுவா. லிங்கா பிஷேகத்திற்குத் தைல தானம் பண்ணினாவா கைலாசத்திலே கணங்களாக வாசம் பண்ணுவா. இப்படி நெய், பால் எதை அபிஷேகத்துக்குக் கொடுத்தாலும் கைலாசவாசம்னு பெரியவா எழுதி வைச்சுட்டு போயிருக்கா.
கருநெய்தல் பூவாலே சிராவண மாசத்திலே சிவபூஜை செய்கிறது விஷேஷம். பாத்ரபத  மாசத்திலே தாமரை பூவாலே அர்ச்சனை பண்ணனும். நாயுறுவி, தர்பை இதுகளாலே துலா மாசத்திலே அர்ச்சிக்கணும். வில்வம், செண்பகப்பூ, அரளி, வெள்ளெருக்கு, அருகம்புல் இதுகளால் வருஷம் பூராவும் அர்ச்சனை பண்ணலாம். வெள்ளையான பூக்கள் மேலே சிவனுக்கு பிரியம் அதிகம். கொக்கு மந்தாரை, அரளி, வெள்ளெருக்கு, ஊமத்தை இந்த நாலோட வாசனையையும் அவர் கிரகிச்சுப்பார். விஷம் சாப்பிட்ட நீலகண்டத்துக்கு ஊமத்தை, எருக்கெல்லாம் மாத்து மூலிகை. கொக்கு மந்தாரையும், வெள்ளை தாமரையும் பூ கிடைக்காட்டி மறுபடி பூஜை பண்ணலாம். ஒரு உற்பலம் ஆயிரம் அரளிப் பூக்கு சமம்.  ஒரு வெள்ளெருக்கு ஆயிரம் உத்பலதுக்கு சமம். ஒரு சரபுன்னை மலருக்கு ஆயிரம் சிந்து புஷ்பங்கள் சமம். ஒரு கண்டங்கத்திரிப்  பூவுக்கு ஆயிரம் சிந்து புஷ்பம் சமம். எல்லாத்திலேயும் உசத்தி வில்வம் தான். சிவ சன்னதியிலே விளக்கேற்றியவனுக்கு துர்கதி கிடையாது. சிவாலயத்தைச் சுத்தம் செய்தால் அடுத்த பிறவியிலே சகல கலைகளிலும் வல்லவராய், சற்குண சம்பன்னாராய் வாழ்வார்கள். பூஜா காலத்தில் பிராமணர்களுக்கு சரியான தட்சணை கொடுக்க வேண்டும்.   
"சிவே பக்தி, சிவே பக்தி, சிவே பக்திர் பவே பவே அந்யத சரணம் நாஸ்தி த்வமேம சரணம் மம" 
ஜன்ம ஜன்மத்திலும் எனக்கு சிவபெருமானிடம் பக்தி இருக்க வேணும். எனக்கு வேறே ரக்ஷிக்கிறவா இல்லை. நீயே சரணங்கறது இந்த ஸ்லோகம். இதை சதா ஸ்மரிச்சுண்டு இருந்தாலே சகல துக்கங்களும் நிவர்த்தியாகும்.   

09 04 2014   35

சோத்துக்காக சன்யாசன்னதும் ஒரு கதை ஞாபகம் வரது. சமர்த்த ராமதாசர்னு ஒருத்தர் மஹாராஷ்டிர ராஜாவோட குரு. ஆஞ்சநேயர் அம்சம். அவர் ராஜாவோட குருவாக இருப்பதால் அவரிடம் சீடனாகச் சேர்ந்தால், தினமும் வேலை செய்யாமல் அறுசுவை உணவு சாப்பிடலாம் என்று ஆசைபபட்டு குடும்ப சிரமம் தாங்காமல் ஒருத்தர் வந்தார். சீடனா எத்துண்டு உபதேசம் பண்ணனும்னார். ராமதாசரும் உபதேசம் பண்ணினார். சன்யாசி வெட்கம் பார்க்காமல் ஐந்து வீடு பிட்சை வாங்கணும்கறது நியதி. அதுப்படி இவரும் வாங்கிண்டு வந்தார். சாப்பிட உட்கார்ந்தார். சாதாரண சாப்பாடு தான் போட்டார்கள். சரி, இன்னிக்கு இப்படி. ராஜா வர்றன்னிக்குப் பிரமாதமாயிருக்கும்னு சமாதானம் பண்ணிண்டார். ஒரு பிடி பிசைந்து வாயிலே போட்டுண்டார். உப்பே இல்லே. உப்பில்லையேன்னார். சன்யாசிகள் இந்திரியங்களை அடக்கணும். அதனாலே உப்பு போடறதிலேன்னார் குருநாதர். 'அடாடா மோசம் போனோமேன்னு' புது சன்யாசிக்கு வருத்தமா இருந்தது. அடுத்த நாள் சிவாஜி ராஜா வந்தார். நிறைய தின்பண்டங்களும் கொண்டு வந்தார். சிஷ்யாளுக்கெல்லாம் கொடுக்க போறார்னு ஆசையோட இருந்தார் புது சன்யாசி. ராமதாசர் அத்தனையையும் ஏழை எளிய ஜனங்களுக்கு கொடுத்துட்டார். இவர்கிட்டே இனிமே சிஷ்யனா இருக்கிறதிலே பிரயோஜனமில்லேன்னு நெனைச்சு இன்னொரு குருவைத் தேடிப் போனார். 
அவர் இதுக்கு முன்னாலே யார் கிட்டே உபதேசம் வாங்கிண்டேன்னு கேட்டார். ராமதாசர் கிட்டேன்னு சொன்னார் சன்யாசி. அட சமர்த்தே! கோவில்லே மணி அடிச்சுண்டிருந்தவன் குப்பை வார ஆசைப்படறானேன்னு நினைச்சார். அவர் பண்ணின உபதேசம் நெஞ்சிலே இருக்கிறப்போ, நான் உபதேசம் பண்ணக் கூடாதேன்னார். நேரே ராமதாசர் கிட்டே வந்தான் சன்யாசி. "உங்களோட உபதேசம் எனக்கு வேண்டாம். திருப்பி வாங்கிண்டிடுங்கோ. நான் வேறே குரு கிட்டே உபதேசம் வாங்கிக்க போறேன்னார்". ராமதாசர் சரி 'இந்த பாறையிலே துப்பு' ன்னு ஒரு பாறையைக் காட்டினார். அவனும் காறித்துப்பினான். 'ஸ்ரீ ராம், ஜெயராம், ஜெய ஜெய ராம்' ங்கிற எழுத்துக்கள் பாறையிலே தெரிஞ்சது. எல்லாரும் ஆச்சரியபட்டா.    
சன்யாசி புது குருகிட்டே போனான். ராமதாசரோட உபதேசத்தை துப்பிட்டு வந்துட்டேன். நீங்க உபதேசம் பண்ணுங்கோன்னான். அப்பனே, உனக்கு குருவா இருக்க எனக்கு தகுதி இல்லேன்னு நிராகரிச்சுட்டார்.

11.04.2014   36
வேதத்தின் ஆறு அங்கங்களுக்கு “ஷடங்கங்கள் என்று பெயர்.இதிலிருந்தே மத சம்பந்தமான அனைத்துக் காரியங்களுக்கும் சடங்கு என்ற பெயர் ஏற்பட்டது. அதையொட்டியான ஸம்ப்ரதாயங்களும் வேதத்தின் ப்ரகாரம் ஏற்பட்டவையே. வைதீக அநுசரணையே தமிழ்நாட்டின் தொன்றுதொட்ட பழக்கம் என்பதற்கு இவையெல்லாம் உதாரணங்கள். தமிழ்மறை என்று சொல்கின்ற குறள் முழுக்க, முழுக்க வைதிகமானதே என்பது என் அபிப்ராயம். வைதிக சமயத்தில் பித்ருக்களுக்குத்தான் முதலிடம்.அப்புறம் தான் வேதயக்ஞம். பித்ருக்களுக்குரிய தர்ப்பணமும், திவசமும் செய்தபின் தான் வேதபூஜை செய்யவேண்டும். இதே வரிசையை மாற்றாமல் திருவள்ளுவ்ரும் சொல்கிறார்-
“தென்புலத்தார், தெய்வம், விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

பித்ருக்கள், தெய்வம், அதிதி, சுற்றத்தார்கள், தான் என்ற ஐந்து பேரையும் போஷிக்கவேண்டும் என்கிறார். முதலில் பித்ருக்களான் தென்புலத்தாரைச் சொல்லி அப்புறம் தெய்வத்தைச் சொல்கிறார். யமனுடைய திக்கான தெற்கில் பித்ருக்கள் இருப்பதான வைதிக நம்பிக்கையையே மூதாதையர்களை ‘தென்புலத்தார்
என்கிறார்.

13.04.2014
    37
படிச்சு முடிச்சவா குருவையும், விவாகம் பண்ணின்டவா தாயாரையும், ஆசை தீர்ந்து போச்சுன்னா பார்யாளையும், உபகாரத்தை சுவீகரிச்சுண்டவா, உபகாரம் செய்தவாளையும், நதியை கடந்து கரையேறினவா தோணியையும், நோய் சொஸ்தமானவா வைத்தியனையும் மறந்துபோயிடுவான்னு விதுரர் சொல்லியிருக்கிறார். விதுரர் சாட்சாத் தர்ம தேவதை. அவர் சொன்னது பொய் ஆயிடுமா? வாஸ்தவத்திலே நான் அப்படியில்லேன்னு தர்ம நீதி தெரிஞ்சவா நிருபிச்சுக்காட்டணும். அதுக்காக ஆத்தைக் கடக்க உதவின தோணியைத் தோளிலே மாட்டிண்டு போகணுமானு குதர்க்கமா நெனைக்க வேண்டாம். ரொம்ப பேரம் பண்ணாம அந்த தொழிலை அவா தொடர்ந்து செய்யறதுக்கு, படகைச் சீர்படுத்தறத்துக்கு தாராளமாக கூலி கொடுக்கலாமில்லையா?  
ஒரு சன்யாசி படகிலே பயணம் பண்ணினார். பெரிய நதி பொழுது போக்காயிருக்ககட்டுமேன்னு ஓடக்காரனோட பேசிண்டு வந்தார். சின்னச்சின்ன உபபமானம் சொல்லி நல்லதெல்லாம் சொன்னார். பெரிய காட்டாறு. திடீர்திடீர்னு வெள்ளம் வரும். அப்பவும் வந்துடுத்து. படகிலே சின்ன ஓட்டை. துளித்துளியாக ஜலம் உள்ளே வந்திண்டுருக்கு. ஓடக்காரன் 'உங்களுக்கு நீச்சல் தெரியுமா'ன்னு கேட்டான். 'தெரியாதேப்பா'ன்னார் சன்யாசி.  'சரி', நான் ஓட்டையை அடைசிண்டுயிருக்கேன். ஓடத்தை விடுங்கோ'ன்னு துடுப்பை அவர்கிட்டே கொடுத்து விடற வழியையும் சொல்லிக் கொடுத்தான். தன்னோட இடுப்பு வேஷ்டியை அவிழ்த்து ஓடத்திலுள்ள தண்ணீரை பிழிஞ்சு எடுத்தான். அவனோட வலது கை ஆள்காட்டி விரல் ஓடத்து ஓட்டையை அடைசிண்டிருந்தது. வழியிலே ஒரு மரம் முறிங்சு விழுந்திருந்தது. அதிலே சன்யாசியை ஏத்தி தானும் ஏறி நின்னான். வெள்ளம் வடிஞ்சதும் கரை ஏறினா. இதுலே அடைசிண்டிருந்த விரல் வீங்கி போயிடுத்து. வெளியே எடுக்கறப்போ மரசிராய் கிழுச்சு இரத்தம் கொட்டறது. இது எதையுமே அந்த ஓடக்காரன் பொருட்படுத்தல்லே. நெனைச்சிருந்தா அவன் எப்பவோ குதிச்சு நீஞ்சி உயிர் தப்பிச்சிருக்கலாம். அப்படி செய்யாமல் இருந்ததுக்கு காரணம் சாமியார் சொன்ன உபதேசங்கள் தான்! நல்லது செய்த அவரது உயிரைக் காப்பாத்தினது. நல்லது என்னிக்குமே வீணா போகாது.    
பஞ்சைவ பூஜ்யம் லோ யஸ ப்ராப்நோதி கேவலம் I
தேவான் பித்ரூன் மனுஷ்யாம் ஸ்ச பிக்ஷூ நதி தி பஞ்சமான் II 
இந்த ஸ்லோகத்தோட அர்த்தம் - லோகத்துலே தேவா, பித்ருக்கள், மனுஷ்யா, யதிகள், அதிதிகள் இவா அஞ்சு பேரையும் பூஜிக்கிறவா சிரேயஸை அடைவான்னு சொல்றது.  

16 04 2014   38               ஒரு அன்பர் வினயத்துடன் "வேல் வைச்சு அபிஷேகம் ஆராதனை எல்லாம் நடத்தினேன், வேல் விருத்தம் படிச்சேன். முருகன் அனுக்ரஹத்தாலே பேரன் பிறந்துட்டான். அந்த வேலை என்ன பண்றது. சில பேர் தாம்பூலம் தட்சணையோடு சாஸ்திரிகளுக்கு கொடுத்துடலாங்காறா. பெரியவாள் உத்தரவுக்காக காத்திண்டிருக்கேன்னார்". எனக்கு சிரிக்கிறதா, இவரோட அறியாமைக்காக நொந்துக்கறதான்னு புரியலை.  
இப்போ வாய் பேசிண்டிருந்தது. காது நான் சொல்ல போவதற்காக காத்திண்டிருக்கு. கண் தெரியல்லேனா ரொம்ப சிரமம். மூக்கு சும்மா தானே இருக்கு. அதை ஆபரேஷன் பண்ணி, மூச்சுவிட இரண்டு ஓட்டை மட்டும் வைச்சா போறாதா? வேலிருக்க வினை தீரும் என்பா. வயசான அம்மா, அப்பாவை விச்ராந்தியிலே விடற மாதிரி, காரியம் பலிச்சவுடனே வேல் உங்களுக்கு பாரமாயிடுத்தா? அது அம்பாள் முருகனுக்கு தந்தது. அம்பாளே சூரனை சம்ஹாரம் பண்ண முடியாதா? பிள்ளைக்கு அந்த பெருமை வரணும்னு அணுக்ரஹிச்சா. அது மாதிரி பிறந்த குழந்தை நோயில்லாம வளரணும். நன்னாப் படிச்சு சிரேயஸ்ஸா வரணுமில்லையா? அதுக்காக நீங்க ஏன் பூஜை தொடர்ந்து பண்ணிண்டு வரக்கூடாது? அரைச்ச உடனே மிக்ஸியையும், கிரைண்டரையும் தூக்கி தானம் பண்ணிடறோமா? நாளைக்கு வேணும்னு துடைச்சு வைச்சுக்கறதில்லையா? எதிர்காலத்திலே உங்கள் பிள்ளைக்கோ பெண்ணுக்கோ பேரன் வேணுங்கற தவிப்பு ஏற்படக் கூடாதுன்னு ஏன் உங்களுக்குத் தோணலே? "க்ஷமிக்கணும், என் புத்தியை திறந்துட்டேள்" என்று நமஸ்காரம் பண்ணிட்டு போனார்.
நாம சக்தி ஆயுதத்தை மறக்கலாமா?

18 04 2014
     39

பாரத தேசத்தில் என்றும் காணப்படாத அளவு மழை பஞ்சம் ஏற்பட்டு பிரஜைகள் உணவு உடைகளுக்கு பரிதவிக்கின்றனர். சோரபயம், பரஸ்பரத் வேஷம், படுகொலைகள் அதிகரித்து, தேசத்தில் பயங்கர நிலமை பரவி வருவது பிரத்யக்ஷமானது. அகால மரணங்களும் வெகு சகஜமாக ஏற்பட்டு வருகின்றன. இவைகளுக்கு காரணமென்ன? பரிஹார வழி என்ன? சாஸ்த்திர மத நம்பிக்கையற்ற ராஜீய மாயாவாதிகள் தங்கள் மனத்தில் தோன்றிய ஏதேதோ காரணங்களையும் பரிஹாரங்களையும் கூறுகின்றனர். லௌகீக தோரணையில் திட்டங்கள் போட்டு தேச க்ஷேமம் ஏற்பட முயற்சிக்கின்றனர். ஆயினும் ஒன்று கூட பலிக்கவில்லை. பிரஜைகளின் துன்பம் தீரவில்லை. தேசம் பாழாகி வருகிறது.  

புண்யஸ்ய பலம் இச்சந்தி
புண்யம் தேச்சந்தி மானவா:
என்றார் ஒரு பெரியவர். "புண்ய காரியத்தில் பலன் மட்டும் வேண்டுமென்பது மனித ஸ்வபாவம். ஆனால் அதுகளுக்கான ஸாதனத்தை (வழிகளை, அதாவது: மரம் நடுவது, இந்திரன், வருணன் ஆகியோரை வணங்குவது, யாகம் செய்வது, நற்காரியங்கள் செய்வது, நல்லவர்களாக நடந்து கொள்வது) செய்வதில்லை". நம்மை படைத்த தெய்வமும், அதன் ஆக்ஞையான வேதங்களும், ஸ்மிருதிகளும், புராணங்களும், ஆச்சாரியர்களும் இவ்விஷயமாக நமக்கு உபதேசித்ததென்ன? க்ஷேமஸாதன காரியமென்ன? உலக சிருஷ்டி கர்ததாவாகிய பகவானாலேயே தேச க்ஷேமார்த்தமாக நமக்கு அருளப்பட்ட உயர்ந்த ஸாதனத்தை மறந்துவிட்டோம். ஏன்? அதை நிந்தை செய்யக்கூடத் துணிந்துவிட்டோம். அதனால் இந்த தர்ம தேசம் சாபம் பெற்று பாழாகி வருகிறது. இதை நிவிருத்திக்க வேண்டுமானால் தெய்வத்தைச் சரணடைந்து அவர் கட்டளையை நிறைவேற்ற வேண்டும். அது என்ன?  
அது தான் ஸகல சக்தியும் வாய்ந்த உத்தம தர்மமாகிய நமது யக்ஞங்கள்.

21 04 2014  40
நமது முன்னோர்கள் நம் தேசத்தில் யாகங்களாகிய உயர்ந்த சாதனத்தை எங்கும் அனுஷ்டித்து அதனால் தேசத்தை சுபிக்ஷமாகச் செய்தனர். யக்ஞத்தால் காலத்தில் மழை பெய்யச் செய்து ஸஸ்விருத்தியும், அன்ன ஸ்மிருத்தியும் ஏற்படச் செய்தனர். யக்ஞத்தாலல்லவோ பிரஜைகளின் ஆரோக்யத்தையும் அபிவிருத்தி செய்தனர். யக்ஞத்தாலேயே ராஜ்ஜியத்தில் வியாதி துர்பிக்ஷாதி கிலேசங்களைத் தடுத்தார்கள். சத்ருக்களையும் யக்ஞ மஹிமையால் ஜெயித்தனர். சத்ருக்களும் மித்ரர்களாகினர். புத்ராதிகள், சந்தானம், ஸம்பத்து, தனதான்யாதிகள், பசுக்கள் மற்றும் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத சகல போக பாக்யங்களையும் யக்ஞத்தாலேயே அடைந்ததென்பது வெறும் அதிசய யுக்தியல்ல. இதற்காக தேசம் முழுவதும் மூலைமுடுக்களிலும் கூட யக்ஞ தர்மங்கள் அனுஷ்டிக்கப்பட்டனவென்பது நமது ராமாயண பாரதாதி சரித்திரங்களில் கணக்கற்றுக் காணப்படுகின்றன. நவீன சரித்திரக்காரர்கள் பலரும் இதை உறுதி செய்துள்ளனர்.   
தமிழ் தேசமெங்கும் வேத கோஷங்களும், வேள்விப் புகையும் வியாபித்து கலியை விரட்டினவென்று நாயன்மார் பாசுரங்களில் பாடினர். ஆழ்வார்களும், வேத வேள்விகளைப் பல பாட்டுக்களில் வர்ணித்துள்ளனர். இவ்வாறு தெய்வ சக்தி பாய்ந்து, தெய்வத் தன்மை நிரம்பிய தேசமாகிய பாரத நாட்டில் சுபிக்ஷம் தாண்டவமாடியது.

(continued in Part V)


No comments:

Post a Comment