Popular Posts

Monday, January 19, 2015

SREE MAHAPERIYAVALIN ARULVAKKU PART IX


ஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வாக்கு பாகம் 9
(Continuation of Part 8)


29 10 2014     81
ஒரு சமயம் யாக்ஞவல்கிய முனிவர், குரு சாபத்தினால் எல்லா வித்தைகளையும் மறந்து போய் விட்டார். அதனாலே தாங்க முடியாத வருத்தத்துடன் சூரியனை வேண்டினார். சூரியன் மறுபடி வேதாந்தங்களை அவருக்குச் சொல்லிக் கொடுத்து 'எல்லாம் மறக்காமலிருக்க கலைமகளைப் பிரார்த்தியுங்கள்' என்று சொன்னான். எத்தனை படிச்சாலும் எல்லாம் மறக்காமலிருக்க கலைவாணி அருள் வேண்டும். முற்காலத்திலே கங்கைக் கரையிலே வால்மீகிக்கு ஸ்ரீஹரி சரஸ்வதி கவசத்தை உபதேசித்தார். பத்திரிகாசிரமத்திலே பிரம்மா பிருகுவுக்கும், பிருகு மகரிஷி புஷ்கரத்தீவிலே சுக்ராச்சாரியாருக்கும் உபதேசித்த மந்திரம் இது. சந்திர மலையிலே மரீச ரிஷி பிரஹஸ்பதிக்கும், பாற்கடலிலே ஜரத்காரு ரிஷி ஆஸ்தீக முனிவருக்கும், மேரு மலையிலே விபாண்டக முனிவர், ரிஷிய சிருங்கருக்கும், ருத்திர மூர்த்தி கௌதமர், கணாதரருக்கும், சூரியன் காத்யாயன மஹரிஷிக்கும் உபதேசம் பண்ணின மந்திரம் இது.  

சுதல லோகத்தில் ஆதிஷேஷன் பாணிணிக்கும, பாரத்வாஜாருக்கும், சாகடாயனருக்கும் சொல்லிக் கொடுத்த அற்புதமான கவசம் இது. இதை நாலு லட்சம் தடவை சொல்கிறவன் பிரகஸ்பதிக்கு ஈடாக விரும்பும் வித்தையில் புகழ் பெறுவான். நான்கு லட்சம் ஒரே நாளில் முடியக்கூடியது அல்ல. ஒவ்வொரு செங்கல்லாய் அடுக்கி ஒரு பிரம்மாண்டமான மாளிகை எழுப்பவது போல, ஒவ்வொரு அரிசியும் சேர்ந்து களஞ்சியம் நிறைவது போல, ஒவ்வொரு இழையும் இணைந்து ஆடையாய் மாறுவது போல, தினமும் சொல்லிக்கொண்டே வந்தால் மலையாய் ஞானம் கனிந்துவிடும்.  

ஸ்வாயம்புமனு, வசிஷ்டர், கண்ணுவர், பராசரர், சம்வர்தர், யயாதி இப்படி புகழ்பெற்ற எல்லோரும் இந்த கவசத்தை உருப்போட்டவர்கள் தான். எல்லா ஜனங்களும் இந்த கவசத்தை உருப்போட்டு தேசத்தையே ஞானமயமாக்க அந்த சரஸ்வதி அருள் புரிய வேண்டும்.  

05 11 2014      82
மஹான்களால் ஏற்பட்ட க்ஷேத்‌திரங்களிலும் தீர்த்த்தங்களிலும் ஈஸ்வர சான்னித்தியம் அதிகமாக இருக்கும். அத்தகைய உத்தமமான க்ஷேத்‌திரம் திருவல்லிக்கேணி. இங்கே ஸாக்ஷாத் ஸ்ரீ கிருஷ்ண பகவான் எந்த நாளிலும் அழியாத தத்துவத்தை உபதேசிக்கும் மூர்த்தியாக இருக்கிறார். ஸ்ரீகிருஷ்ணனுக்கு வேணுகோபாலன், கோபாலகிருஷ்ணன், பாண்டுரங்கன் முதலிய அவஸரங்கள் உண்டு. அவையெல்லாம் அந்த ஸமயத்தில் இருந்தவர்களுக்கு மட்டும் பிரயோஜனமுடையவைகளாக இருந்தன. பார்த்தசாரதி அவஸரமானது. எந்த காலத்திலும், எந்த தேசத்திலும் உள்ளவர்கள் ஸம்ஸார துக்க நிவ்ருத்தியின் பொருட்டுத் தெரிந்து கொள்ளக் கூடிய கீதோபதேசம் செய்த அவஸரம். அந்த சாஸ்திரம் படித்தால் ஞான இன்பத்தை தரும். அதை உபதேசம் செய்த மூர்த்தி இந்த தேசத்தில் இருப்பதால் இது பெரிய ஞான பூமிகளில் முதல் பூமி. ஞானத்திற்க்கு உயர்வு தரும் க்ஷேத்திரம் இது.

06 11 2014      83
வாழ்க்கையிலே முன்னேற எத்தனையோ பேர் உதவி செய்யறா... அவாளுக்கு கிரஹங்களும் நிறைய உபசரணை பண்றா. ஊனமில்லாம படைச்சு, மூச்சு விடக் காற்றும், நித்திய கர்மாக்களுக்கு மழையும் தர பகவானை ரெண்டு நிமிஷம் உபசரிக்க நேரமில்லாம போயிடறது. சிரமம் வந்தா தான் பகவானை நினைக்கறத்துங்கறத்தை மாத்திக்கணும். "வீட்டிலே யாருமே இல்லை..பொழுது போகலை."ன்னு தவிக்கிற நேரங்களிலே பகவானண்டே உட்கார்ந்து காதுக்கு இனிமையா நாலு ஸ்லோகம், பாட்டு சொல்லுங்களேன். மனசு எத்தனை விச்ராந்தியாரதுன்னு புரியும்.  

தகப்பனாரை அன்பாய் ரட்சிக்கிறவன், வேளா வேளைக்கு அன்னமும், கட்டிக்க வஸ்திரமும் கொடுக்கிறது மட்டும் ரட்சணை இல்லை. அவர் வயசுக்கு மாறி அவருக்குப் பிடிச்ச பேச்சுகளை தினமும் அரை மணி சம்பாஷிக்கணும். அப்படிப்பட்டவனை பிரம்மா ஆசீர்வாதம் பண்றார். தாயார் குடி இருந்த கோவிலில்லையா? இது போல அன்பாய் இருக்கிறவனுக்கு அடுத்த பிறவியிலே பூமி சொந்தமாய் அனுபவிக்கும் போகம் கிடைக்கும். ஏன்னா பூமாதேவி அப்படி அனுக்ரஹம் பண்றா. குருவை மரியாதையா நடத்தறவனுக்கு, மத்தவாளுக்கு படிக்க ஒத்தாசை பண்றவாளுக்கு, அடுத்த பிறவியிலே படிப்பு ரொம்ப நன்றாக வரும். பிரஹஸ்பதி அப்படி வரம் கொடுத்திருக்கார். 

08 11 2014      84     
நியமம் அதாவது தனது என்ற விருப்பு, வெறுப்பு இல்லாமல் சாஸ்திரத்துக்குக் கட்டுப்படுவது முக்கியம். அதே போல் தைரியம் முக்கியம். ஒருவர் பரிகாசம் பண்ணுகிறார் என்று தர்மத்தை விடக்கூடாது. ராமனை சாட்சாத் லக்ஷ்மணனே பரிகசித்தான்; "அண்ணா! நீ தர்மம் தர்மம் என்று எதையோ கட்டிக்கொண்டு அழுவதால் தான் இத்தனை கஷ்டங்களும் வந்திருக்கின்றன. அதை விட்டுத் தள்ளு. தசரதன் மேல்  யுத்தம் செய்து ராஜ்யத்தை உனக்கு நான் ஸ்வீகரித்துத் தர அனுமதி தா!" என்று அன்பு மிகுதியினால் சொன்னான். ஆனால் ராமன், யார் எது சொன்னாலும் பொருட்படுத்தாமல் தர்மத்தையே காத்‌தான். கடைசியில் அது அவனைக் காத்‌தது. தர்மம் தலை காத்தது. ராவணனுக்கு பத்து தலைகள் இருந்தும் அதர்மத்தால் கடைசியில் அத்தனை தலைகளும் உருண்டு விழுந்தன. ஸ்ரீ ராமன் இன்றும் 'ராமோ விக்ரஹவான் தர்ம;' என்றபடி தர்மத்தில் தலை சிறந்து தர்ம ஸ்வரூபமாக அநுக்கிரஹம் செய்து வருகிறான். 

சாட்சாத் ஸ்ரீ ராமனே லட்சியமாகக் கொண்டு ராமா ராமா என்று மனசாரச் சொல்லிக்கொண்டே இருக்கிறவர்களுக்குச் சித்த மலங்கள் எல்லாம் விலகும். தர்மத்தை விட்டு எந்நாளும் விலகாமல் அவர்கள் ராமனைப் போல் ஆனந்தமாக வாழ்வார்கள்.

11 11 2014       85
லோகத்தை அனுசரிச்சு வாழ்ந்தாகணும். அப்போ நிறையக் கஷ்டம் ஏற்படலாம். அதுக்காக உணர்ச்சி வசப்பட்டா, சரீர சௌக்கியம் பாதிக்கும். 
நாம வேறே, கஷ்டம் வேறேன்னு நெனைச்சுக்கணும். அதே கஷ்டம் வேண்டப்பட்டவாளுக்கு வந்தா, என்ன புத்தி சொல்வோம்னு யோசிக்கணும். இது தான் 'தமோ' என்கிற தன்னடக்கம். புத்தி தெளிவா இருக்கும். கங்கையிலே எத்தனையோ பேர் குளிக்கறா, எத்தனையோ பிணங்கள் விழறது. ஆனாலும் தெளிஞ்சுடலையா? லோக வாழ்க்கையிலே தெளிவா இருக்கறது ரொம்ப முக்கியம்.

13 11 2014      86
ராமாயணம், மஹாபாரதம் இரண்டிலேயும் சகோதர பாசம் உண்டு. ராமர் மாதிரி லட்சுமணர் இல்லை. எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறார். இருக்கிற இடம் தெரியாமல் இருந்த சுமித்திரையின் பிள்ளையா என்று ஆச்சரியப்பட வைக்கிறார். இரட்டை பிள்ளைகளில் ஒருத்தர் அவரோடு பிறந்த சத்ருக்னர் நில் என்றால் நிற்கிறார். உட்காரச் சொன்னால் உட்காருகிறார். அதனால் தான் முந்தி பிறந்த மூன்று பேரையும் தாண்டி தகப்பனாருக்கும் 'கர்மா' செய்கிற பாக்கியம் கிடைச்சது. பொறுமைக்கு என்னிக்குமே பெருமை உண்டு.  

பாண்டவர்கள் அஞ்சு பேரும் ஒன்று போல் இல்லை. பலத்தாலே பீமசேனனும், வித்தையாலே விஜயனும் கியாதி பெற்றார்கள். நீதி, நியாயம், தர்மம் மூணையும் எடுத்துட்டா தருமபுத்திரரும் சாதாரணமானவர் தான். நச்சு பொய்கையிலே எல்லாரும் செத்துப் போயிட்டா. தருமர் அவசரப்படலே. தம்பிகள் செத்துடடாளேன்னு இடிஞ்சுபோய் உட்காரலே. பொறுமையா யட்சனுடைய எல்லா கேள்விக்கும் பதில் சொன்னார். கடைசியிலே யாராவது ஒருத்தரைப் பிழைக்க வைக்கறேன்னப்போ நகுலனைக் கேட்ட நேர்மை எல்லாருக்கும் உயிர் கொடுத்தது. 

16 11 2014      87
கையில் லாந்தருடன் போய்க் கொண்டிருந்த குருடன் ஒருவனை, எதிரில் வந்த ஒருவன், "உனக்குத்தான் கண் தெரியவில்லையே, லாந்தர் ஏன் எடுத்து வருகிறாய்?" என்று கேட்டானாம். அதற்கு குருடன், "எனக்குக் கண் இல்லாவிட்டாலும் உனக்கு கண் இருக்கிறது அல்லவா? அதற்குத் தான் எடுத்து வருகிறேன், இல்லாவிட்டால் இந்த இருட்டில் நீயே என்மேல் தடுக்கி விழுந்திருப்பாயே?" என்றானாம். அது போலவே பழைய சாஸ்திரங்கள் நமக்குப் புரியாவிட்டாலும், எதிர்காலத்தில் யாருக்காவது புரியலாம். பயனாகலாம் என்பதாலாவது அவற்றை நாம் ரட்சித்தாக வேண்டும். "வசதியே இல்லாத காலங்களில் யுகாந்தரமாக ரட்சிக்கப்பட்ட சாஸ்திரங்களை நமக்கு முன் தலைமுறையினர் எல்லா வசததியிருந்தும் காப்பாற்றாமல் அழித்து நம்மை வஞ்சித்து விட்டார்கள்" என்று வருங்கால தலைமுறையினர் நம்மைக் குற்றம் சாட்ட இடம் கொடுக்கக் கூடாது. 

19 11 2014      88
வாழ்நாள் முழுவதும் ஏதாவது ஒன்றில் நம் மனம் அழுத்தமாக ஆழமாக ஈடுபட்டிருந்தால் தான், அந்த விஷயமே பிராணன் போகிற ஸமயத்தில் கிளம்பி வந்து நம் மனம் முழுவதையும் வியாபித்துக் கொள்ளும். நாம் அதை நினைக்கிறோம் என்பதில்லை. அதுவே முட்டிக்கொண்டு வந்து தன்னை நினைக்கும்படியாகப் பண்ணும். இப்போதும், எப்போதும் - இது வரை செய்யாவிட்டாலும், இப்போதிருந்தாவது - நாம் செய்ய வேண்டியது பகவத் ஸ்மரணையை அழுத்தமாக, ஆழமாக ஏற்படுத்திக்கொள்வது தான். "ப்ராண பிரயாண ஸமயே கபவாதபித்தை - உயிரின் நெடும் பிரயாண சமயத்தில் கபவாதபித்தங்கள் கட்டி இழுக்கிற போது உன்னை எப்படி நினைப்பேனோ?" என்று குலசேகரர் போன்ற பெரியவர்களே பயப்படுகிறார்கள். பகவான் கீதையில், 'தஸ்மாத் ஸர்வேஷு காலேஷு மாம் அனுஸ்மர' - ஆனபடியால் என்னை சதா ஸர்வகாலமும் எப்போதும் நினைத்துக் கொண்டே இரு!' என்கிறார். அப்படி எப்போதும் நினைத்தால் தான் முடிவில் அந்த நினைவு வரும்.

22 11 2014      89
இன்றைக்கு கார்த்திகை அமாவாசை. ஸ்ரீதர ஐய்யாவாள் கங்காகர்ஷணம்
ஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வாக்கு 
துலா ஸ்நானத்தைப் பற்றி சொல்லும்போது:
துலா ஸ்நான பலன் முடவனுக்கும் ஒரு நாள் தள்ளியும் கிடைச்சது. நம்மோட நோக்கம் நல்லதா இருந்தா பிரயோஜனம் தன்னாலே கிடைக்கும். திருவிசை நல்லூர் ஐய்யாவாள் என்று ஒரு மஹான் இருந்தார். ஸ்ரீதர வெங்கடேசுவரர் என்கிறது அவர் பெயர். ஊரைச் சொன்னாலே பேர் தெரிகின்ற அளவுக்கு பிரசித்தி பெற்றார். முன்னூறு வருஷங்களுக்கு முன்னாலே இருந்தார். போதேந்திராளின் காலத்தவர். திருவிசநல்லூரில் மழை இல்லாத காலத்தில் இரண்டு பேருமா பஜனை பண்ணி மழை கொட்டித் தள்ளி இருக்கிறது.  
ஸ்ரீதர ஐய்யாவாள் திதி அன்றைக்கு பசி என்ற பஞ்சமனுக்கு சாப்பாடு போட்டார். அதனாலே அந்த ஊரிலே இருக்கிற வைதீகர்கள் கங்கா ஸ்நானம் பண்ணினா தான் தீட்டு போகும்னுட்டா. அன்னிக்கு கார்த்திகை அமாவாசை கிணற்றிலே கங்கை பொங்கி வந்துடுத்து. இன்னிக்கும் திருவிசநல்லூரிலே கார்த்திகை அமாவாசைக்கு ஆயிரக்கணக்கானோர் அந்த கிணற்றிலே நீராடறா. கங்கா ஸ்நானம் பண்ணினா பலன் கிடைக்கும் என்கிறது அவாளோட நம்பிக்கை.

26 11 2014      90
கார்த்திகைப் பண்டிகையன்று நிறைய அகல் ஏற்றி வைக்கிறோமல்லவா? இப்படி தீபத்தை ஏற்றும் போது ஒரு ஸ்லோகம் சொல்ல வேண்டும் என்று தர்ம சாஸ்த்திரத்தில் விதித்திருக்கிறது.
கீடா: பதங்கா: மசகாச்ச வ்ரூக்ஷா: ஜலே ஸ்தலே யே
நிவஸந்தி ஜீவா: த்ருஷ்ட்வா ப்ரதீபம் நச ஜன்ம பாஜா
பவந்தி நித்யம் ச்வபசா ஹிவிப்ரா:
'புழுக்களோ, பக்ஷிகளோ, அல்லது ஒரு கொசுவாகத்தான் இருக்கட்டும்; அந்த கொசுவோ, நம் மாதிரி உயிரில்லை என்று நினைக்கப்டுகிற விருக்ஷமோ, இன்னும் ஜலத்திலும், பூமியிலும் எத்தனை தினுசான ஜீவராசிகள் இருக்கின்றனவோ அவற்றில் எதுவானாலும் அதுவோ, மனுஷ்யர்களுக்குள்ளேயே சிறிதும் பேதம் இல்லாமல் எவனானாலும் சரி, எதுவானாலும் சரி, இந்த தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய ஸகல பாவங்களும் நிவ்ருத்தியாகி, இன்னொரு ஜன்மம் சேரட்டும்', என்று இந்த ஸ்லோகத்திற்கு அர்த்தம்.
இந்த கார்த்திகை தீபத்தை எந்தப் பிராணி பார்த்தாலும் அதற்கு நித்ய ச்ரேயஸ் உண்டாகட்டும் என்று சொல்லியிருக்கிறது.

(continued in Part X)

No comments:

Post a Comment