Popular Posts

Thursday, October 25, 2012

பிரம்மோபநிஷத் சுருக்கம் Brahmopanishad in short


பிரம்மோபநிஷத் சுருக்கம் Brahmopanishad in short

பிரம்மோபநிஷத்
சுருக்கம்                                  



இந்த உபநிஷத் 23 செய்யுள்கள் கொண்டது. அதன் பொருள் சுருக்கம் இவ்வாறு. உடலில் நான்கு இடங்களில் பரமாத்மாவை நான்கு வடிவில் தியானிக்க வேண்டும். தொப்பிள் குழியில் விழிப்பு நிலையில் பிரம்மாவாகவும், ஹிருதயத்தில் கனவு நிலையில் விஷ்ணுவாகவும், கழுத்தில் உறக்க நிலையில் ருத்ரனாகவும், தலை உச்சியில் துரீயசமாதியில் அக்ஷரபிரம்மமாகவும் தியானிக்க வேண்டும். அந்த பரமபுருஷன் மனதில்லாமல் நினைப்பவனாகவும், காதில்லாமல் கேட்பவனாகவும், கை கால்கள் இல்லாமல் செயல் புரிபவனாகவும் எங்கும் வியாபித்தவனாகவும் ஸ்வயம் ஜ்யோதி ஸ்வருபனாகவும் உள்ளவன். நான்காம் நிலை நிர்வாண நிலையான பரபிரம்மமாகும். அதில் உலகம் உலகமாயில்லை, தேவர்கள் தேவர்களாக இல்லை.மனிதர்கள் மனிதர்களாக இல்லை. எல்லாம் ஒன்றேயான பரபிரம்மமாக விளங்குகின்றது. உலகக் கனவிலிருந்து விழித்துக்கொண்ட ஞானியானவன் இந்நிலையில் சர்வ வல்லமை உள்ளவனாக விளங்குகின்றான்.
பரமாத்மாவே தெய்வமாகவும், பிராணணாகவும் மற்றும் அறிவாகவும் எல்லோருடைய உள்ளத்திலும் விளங்குகிறது. இதைக் குறிப்பிடுவதற்கு தான் மூன்று இழைகளையுடைய பூணூல் அணியப்படுகிறது. வெளிப்படையான பூணூலை விட்டுவிட்டு பிரம்மபாவனையகிற பூணூலை துறவி அணிகிறான். ஞானியின் பூணூல் ஒரு போதும் அசுத்தமாகாது. ஞானமே சிகையாகவும் ஞானமே பூணூலாகவும் உடைய சிறப்புள்ளவர்கள் அவர்கள். ஞானத்தைபோல் புனித தன்மை அளிக்க கூடியது வேறு ஒன்றுமில்லை. அவனுக்கு பிராமணத்துவம் முழுவதும் (வேதம் முழுவதிற்கும் அதிகாரம்) சித்திக்கும் என்று வேதம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். ஞானசித்தியாவது ஈஸ்வரனை உள்ளத்தில் காண்பதாகும். அப்படி காண்பவர்களுக்கு அழியாத சுகம் உண்டு. மற்றவர்க்கு இல்லை.

சத்தியத்தையும் தவத்தையும் கைக்கொண்டு முயல்பவர்களுக்கு எள்ளில் மறைந்திருந்த எண்ணெய் போலவும், தயிரில் மறைந்திருந்த வெண்ணை போலவும், அரணிக்கட்டையில் மறைந்திருந்த நெருப்பு போலவும் சாதனையின் பயனாக மறைந்திருக்கும் ஆத்மா வெளித்தோன்றும். அந்த ஆத்மசாக்ஷாத்காரம் மனதிற்கும் வாக்கிற்கும் எட்டாத ஆனந்த நிலை. அதை உணர்ந்து புத்திமான் முக்தனாகிறான். அதுவே பிரம்மோபநிஷத்தால் அடையப் படவேண்டிய பதவி.

3 comments:

  1. மிக அழகாக நிர்குண ப்ரம்மத்தையும் சகுண ப்ரம்மத்தையும் தெளிவுபடுத்தி, எப்படி சத்யம், தர்மம், ஞானம் மூலமாக நிர்குண ப்ரம்மத்தை அடையலாம் என்பதை ரத்தினச் சுருக்கமாக capsule formல் கொடுத்தமைக்கு நன்றி. இறையருளால் வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  2. ஓம்! பூலோகம் புவர் லோகம் சுவர் லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் பிரகாசிக்க வைக்கின்ற பரப்ரம்மம் எனதுள்ளே உள்ள ஆத்மாவையும் பிரகாசிக்க செய்கிறது... அந்த பரப்ரம்ம ஸ்வரூபமான ஆத்ம ஒளியை வணங்கிப் போற்றுவோம்! அப் பரப்ரம்மம் நம் அனைவரையும் ஆசிர்வதிக்கட்டும்! 🙏🙏🙏

    ReplyDelete